Thursday, March 28, 2019

காளத்தி நாதரை தரிசிக்க அதிகம் காத்திருக்க வேண்டியதில்லை..திருப்பதிக்கு வரும் அதே அளவு கூட்டம் காலஹஸ்திக்கும் வருகிறது...ஆனால் தேக்கப்படுவதில்லை..பக்தியின் வியாபாரம் தவிர்த்த நிஜம் இது..வரிசையில் வரும்போதே அர்ச்சனைத் தட்டுத் தேங்காயை உடைத்து விடுகிறார்கள்..அதை உடைத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அர்ச்சகர்..என் முகத்தை ஒருதரம் பார்த்தார்..நான் பிரபலமென்று அவருக்குத் தெரியாதென நினைத்திருந்தேன்..மொட்டை வேறு அடித்திருக்கிறேன்..என் முக நூல் பதிவுகளை காளஹஸ்தி வரை படித்திருக்க வாய்ப்பில்லையென எண்ணி இறுமாந்திருந்தேன்..ஆனால் அர்ச்சகர் மீண்டும் ஒருமுறை என் முகத்தைப் பார்த்தார்..இந்த முறை அவர் கண்களிலிருந்து வெளிப்பட்ட அக்னியை என்னால் படிக்க முடிந்தது...விறுவிறு என அவ்விடத்தைவிட்டு அகன்று போனார்..என் பின்னால் கூட்டம் தேங்கத் தொடங்கியது...என் எதிரே வரிசையின் வெற்றிடம் இழுக்கத் தொடங்க நான் அமைதியிழந்தேன்..உடனே ஒரு பிராமணரல்லாத சிப்பந்தி எனக்கடுத்திருந்தவரின் தேங்காயை வாங்கி உடைக்க இப்போது வரிசையில் நான் ஒதுக்கப்பட்டேன்..இது தீண்டாமையில்லையா..?மராட்டிய தயாபவாரின் தலித்திலக்கிய கவிதையொன்று நினைவில் வர...நான் தெலுங்கில் ஏன் எனது தேங்காயை உடைத்துத் தரவில்லையென சிப்பந்தியிடம் கேட்க..அவர்..அழகான தமிழில் சாமி...அய்யரு வந்துருவாரு...கொஞ்சம் இருங்க என்றார்..நான் பரவாயில்லை நீங்களே உடைத்துவிடுங்கள் என்றவுடன்...ஆச்சர்யமாய் அதைவிட இன்னமும் மேலதிக பக்தியுடன் தேங்காயை உடைத்துத் தந்தார்..
சிவபோதச் சித்தாந்தத்திற்கு முன் தோன்றிய திருக்களிற்றுப்படியாரின் பாடலொன்று...
துன்பமாய் எல்லாம் பரவசனாய்த் தாந்துவளில்
இன்பமாய் தன்வசனாய்த் தான் இருக்கில்- என்பதனால்
நின் வசனாயே இருக்கின் நின் உடனான் நேரிழையாள்
தன்வசனாய் இருப்பன் தாள்..
இந்தப்பாடலின் தத்துவத்தை திருக்காளஹஸ்த்தியில் கண்கூடாகப் பார்த்து அனுபவிக்கலாம்...ராஜகோபுரம் விழுந்து மீண்டெழுந்த திருவிளையாடலின் திருத்தலமல்லவோ...அது...
ஆன்மீகப் பயணத்தின் இறுதியாக திருப்பதியின் இஸ்கான் சென்றோம்..வேறு இஸ்கான் கோவில்களைப் பார்த்திருக்கிறேன்..அங்கிருந்த அமைதி இங்கில்லாததுபோன்ற ஒரு உணர்வு..ஒரு வேளை ஆன்மீக மார்க்ஸிய பின் நவீன சிந்தனைகள் என் உள்ளத்தின் நிஜபக்தியோகத்தைச் சிதைத்துவிட்டதா அறியேன்..வெளியில் வரும் வழியில் நிறைய வணிக நடப்புகள் இஸ்கானில் இருந்ததைப் பார்த்தேன்..ஒருவர்..அன்னதானத்திற்காக ஒரு ரசீதை நீட்ட என்னாலான தொகையொன்றை அதில் எழுதி அதற்கான தொகையையும் கொடுத்தவுடன் மனமெங்கும் இமயப் பனிப்புகை சிலீரென்று கதவு திறந்து உள் நுழையும் திருப்தியை அனுபவித்தேன்..
இனி அடுத்த நாள் காலைதான் ஊர் திரும்ப வேண்டும்..முழு மாலை ரம்மியமாய் அதுவும் திருப்பதியில் கிடைத்தது அரங்கனருள்தானே..மெல்ல திருப்பதி வீதிகளை தனியாகச் சுற்றிக் கொண்டிருந்தேன்..ஜிலேபி எழுத்துக்களை கூட்டி வாசிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்த போதில் அன்னமையாவின் பாடலொன்றை அதியற்புதமாக விழியிழந்தவர்களின் இசைக்குழுவொன்று இசைப்பதைக் கேட்டு அவ்விடத்தில் சற்று நேரம் நின்றேன்..எந்தரோ மஹானுபாவலு அந்தருக்கு வந்தனமு என்ற தியாகையரின் கீர்த்தனையை [ஸ்ரீ]காப்பி ராகத்தில் இசைக்க உடல் சிலிர்த்துப் போனேன்..அந்த விழியிழந்தவரின் இசை ஞானம் என்னை என்னவோ செய்தது...அவரின் கையைப் பிடித்து உள்ளங்கையில் ஒரு நூறு ரூபாயை வைக்க..அவர் நான் எதிர்பாராமல் குனிந்து என் கால்களைத் தொட்டு நமஸ்கரிக்க..என்ன பாவம் செய்தேனோ...அவரை இனி இதுபோல் செய்யாதீர்கள் என கேட்டுக்கொண்டு ..அங்கேயே நின்று இன்னும் சில பாடல்களைக் கேட்டு ரசித்தேன்..பகவதபசார பாகவதபசாரங்களை செய்தால் அரங்கனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும் ஆச்சாரியன் நிகம்மாந்த மஹாதேசிகனின் பாதுகா சகஸ்ர ஸ்லோகத்தை ஜெபித்துக்கொண்டே
"ராமே ராஜ்ஜியம் பிதுரபிமதம் சம்மதம்ச பிரதானாம்.."அருமையான ஸ்லோகமது..அடுத்த நாள் ரேணிகுண்டாவிலிருந்து காலை பத்துமணிக்குப் புறப்பட்டு மாலை திருச்சி வந்து சேர்ந்தோம்..குளிர் சாதன பெட்டியின் முன்பதிவு செய்த இருக்கையென்பதால் என் மனைவி தூங்கிக் கொண்டே வந்த அந்த வாழ்வின் இலக்கிய இடைவெளியில் செய்மோர் ஸ்மித்தை இன்னொரு முறை படிக்கும் வாய்ப்பை அரங்கன் அருளிச் செய்தான்...இந்த பயணக் கட்டுரையை பொறுமையாக வாசித்து விருப்பம் மற்றும் பின்னூட்டம் இட்ட அத்தனை நல் உள்ளங்களுக்கும் அரங்கனருள் கண்டிப்பாக கிட்டும் என்பதை தெரிவிக்கும் அதே வேளையில் ஒரு சிலர் பின் நவீன கவிஞராகவோ எழுத்தாளராகவோ அல்லது இரண்டும் சேர்ந்தகலவையாக உருவானாலோ நான் பொறுப்பல்ல என்பதையும் பதிவு செய்து எனது பெட்டியின் சக்கரங்கள் தார்ச் சாலையில் உடைந்து விடுமென்பதால் தோளில் சுமந்து வரவேண்டும்..எனவே விடை தாருங்கள்...
வணக்கங்களுடன்...அன்பன்...ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...