Thursday, March 28, 2019

கபில தீர்த்தம் என்ற இடத்தில் ஒரு மலையருவி உள்ளது...முன்பு திருப்பதிக்கு நடந்து வருபவர்கள் அங்குதான் குளித்து கபிலர் வணங்கிய லிங்க உரூபமான சிவபெருமானை வணங்கி பின் ஏழுமலையானைத் தரிசித்திருக்கவேண்டும்..கோவிலுள் செல்லும் முன்பே மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள வசதியாகப் பூங்கா ஒன்றும் இருக்கிறது..அருகில் பாதிமுடிவடைந்த நிலையில் ஒரு தேர் நின்றுகொண்டிருக்க எதிரே நம்மாழ்வார் சந்நிதி..உள் நுழைந்து நம்மாழ்வார் பாசுரம் ஒன்றை உரத்தக் குரலில் சொன்னவுடன் பட்டர் துளசி பிரசாதத்தைக் கையில் திணித்து நனவுலகிற்கு எனையழைத்து வந்தார்..செய்மோர் ஸ்மித் பின் நவீன கவிதைகளை எப்படியணுக வேண்டுமென்பதை அட்டகாசமாகச் சொல்லியிருப்பார்...பின் நவீனக் கவிதைகளைப் புரிந்துகொள்ள முயலக்கூடாது...நம்மாழ்வார் எப்படி நாலாயிரம் பாடல்களையும் கூரத்தாழ்வாருக்குக் காட்டிக்கொடுத்தார் என்று மனதில் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் பக்தியிலக்கியமென்று நம்புகிறோமோ ......அதே போல் பின் நவீனக் கவிதையைப் பின் நவீனமென நம்பவேண்டுமென்று சொல்லும் செய்மோர்..அதைப் புரிந்துகொள்ள முயலும் போது கருத்துத் திணித்தல் எனும் கடின மொழிக்கூற்றையும்.. நமது வாடிக்கையான ஒவ்வா மன நிலையையும்... அங்கே திணித்துவிடுகிறோம்..செய்மோர் ஸ்மித் சொல்லியுள்ளதால் அதை நானும் நம்புகிறேன்..நீங்கள் நம்புவீர்களென்றும் நம்புகிறேன்..
உள்ளே உள்ள நரசிம்மர் சந்நிதியின் பட்டர்பிரான்...என்னைப் பார்த்தவுடன் நீங்கள் ஸ்கூல் வாத்தியாரா என்று கேட்டு ஆச்சரியப்படுத்தினார்..ஆமாம் நான் பணிபுரிந்த இடத்தின் பெயரில் ஸ்கூல் என்ற எழுத்துக்கள் இன்னமும் உபயோகப்படுத்தப்படும் உளவியில் ரீதியான மாந்திரீக யதார்த்த வாதம் நினைவிற்கு வர ஒன்றும் சொல்லாமல் ஒரு ஐம்பது ரூபாய்த் தாளைத் தட்டில் வைக்க பரமசிவனின் முடியிலிருந்து பாய்ந்து வரும் கங்கையின் பிரவாகமாய் அர்ச்சனை மந்திரங்கள் சரியான உச்சரிப்புடன் அவர் வாயிலிருந்து பூக்களுடன் சேர்ந்து நரசிம்மர் திருவடியில் மெத் மெத்தென்று விழ அதீத திருப்தியுடன் ஸ்ரீநிவாசம் வந்தடைந்தோம்...எப்படி பின் நவீனம் என்பது நம்புவோர்க்கு நிஜத்தின் நிஜமோ அப்படி நம்பினோர்க்கு அரங்கன் நிஜம்..அரங்கனின் நிஜம் தரும் திருப்தியை திருப்பதியில் கூட வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் மெல்ல ஸ்ரீ நிவாசத்திலிருந்து தனியாய் இடது ஓரமாய் சாலையில் நடக்கத்தொடங்கினேன்..அணிச்சையாய் ஒரு சிலர் சார் ஆட்டோவா..? எக்கட போத்துன்னாவு சாரே...சார் தமிழா...அரவவாடா....என்றதும் என்னுள்ளிருந்த அரவம் தலைதூக்கிப் படமெடுக்க...அவர்கள் கொஞ்சதூரம் பின் தொடர்ந்து பின் அடுத்த நபரைத் துரத்தத் தொடங்கினார்கள்..முக நூலில் பிந்தொடர்வோர் என்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்..சார் நீங்கள் கவிஞரா..எழுத்தாளரா...என்றெல்லாம் கேட்காமலேயே....விடுங்கள்....தூரத்தில் அந்தி நேர திருப்பதி மலை அரங்கனின் அனந்த சயனமாய் பிரம்மாண்டமாய்த் தெரிய நான் என்னை மறந்து ஏறக்குறைய ஒரு கீலோமீட்டர் நடந்து வந்துவிட்டேன்..நனவோடையின் நடை தூரம் அது எனச் சொல்லும் முன்..நனவின் நிஜத்தில் எதிரே பார்த்தால் கோகிலா ஒயின்ஸ் என்ற பெயர்பலகை ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் தமிழிலும் அருமையாக எழுதப்பட்டிருக்க..உள்ளே மதுபக்தக் கூட்டங்களில் பின் நவீனம் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கவேண்டுமென்ற நினைவுடன்..திரும்பவும் ஸ்ரீ நிவாசம் நோக்கி நடக்கத்தொடங்கினேன்..எனது புத்தகவெளியீட்டு விழாவிற்கு வராத கூட்டங்கள்..ஒரு மதுக் கடையையில் கூடும் புதிர் நிறை காந்த சக்தியை புத்தகத்தில் எப்படி உட்புகுத்துவது என்ற என் பக்தியின் பிரிவுகளை ஒன்றிணைக்க வேண்டிய ஸ்ட்ரெக்சுரலிசம்..பற்றி யோசித்த படியே வந்து கொண்டிருந்தேன்..ஸ்ட்ரெக்சுர்லிசம் எனது ஆன்மீக பயணத்தின் அனுபவங்களை ஒன்றிணைத்ததா எனத் தெரியாமல்..ஸ்ரீ நாவசம் வந்து..அடுத்த நாளின் காளஹஸ்த்திப் பயணத்திற்கான திட்டங்களை பின் நவீன பாணியில் என் சகதர்மினியிடம் விளக்கிக் கொண்டிருந்த வேளை அவளிடமிருந்த குறட்டை ஒலியில் ஓங்காரத்தின் காந்த சக்தியிருந்ததை கண்டு கொலம்பஸின் மன நிலையை ஒருவாறாக உணர்ந்தேன்...அதை உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பவாபோகிறீர்கள்...?
காளஹஸ்தியில் சர்ப்ப தோஷங்கள் நீங்குவதாக ஒரு நம்பிக்கை...நாம் சூரியனையும் சந்திரனையும் கிரஹனத்தன்று பாம்புகள் விழுங்குவதாக இன்னமும் நம்புகிறோம் என்றால்..அதை எத்தனையோ நூற்றாண்டுகட்டு முன்னால் நைடதம் என்ற சாதக நூலின் தமிழாக்கப் பாடலொன்றில் அருமையாய்... இறுமாந்து உறும் வெண்மதி என்றிருப்பதைப் படித்து... இறுமாந்துபோனது நினைவிற்கு வந்தது..சந்திர கிரஹன காலத்தில் ஜனிக்கும் சிசுவால் பீடிக்கப்படும் சாபங்களை அழகாக நைடத நூல் விளக்குகிறது..
பூமேஸ் சாயாம் ப்ரவிஷ்ட ஸ்தகதியதி
சசி நம் சுக்லபஷாவஸாநே
ராஹூர் பரஹ்ம பரஸாதாத்மதிக தவரஸ்
தத்தமோவ்யாஸ் துல்ய:
மேற் கண்ட ஸ்லோகத்தில் ராகு கேதுக்களால் பிடிக்கப்படும் சூரிய சந்திரர்களால் அந்த நேரத்தில் ஒளி தரமுடியவில்லை அவ்வளவுதான்..என்றிருக்கிறது..ஆனால் பின் நாளில் சாதக பலன்கள் சொல்வதாகச் சொல்லிக்கொள்பவர்களின் பம்மாத்து மொழியாக்கத்தால்..அந்த நேரம் பீடை நேரமென்றும் அது மனித வாழ்விற்கு ஆகாதென்றும் சொல்லப்பட்டு இன்றளவும் நம்பப்பட்டுக்கொண்டுமிருக்கிறது...உதாரணத்திற்கு கறைவாள் அரவு என்றிருக்க வேண்டியதை கறைவாழ் அரவு என்று திரித்து எழுதி பயம் உண்டாக்கி அது சரிதான் என்று இன்றளவும் நம்மப்பட்டுக்கொண்டிருப்பது..சில நேரங்களில் சில மனிதர்கள்..[நன்றி ஜெயகாந்தன் அவர்களுக்கு] ஆயிரக் கணக்கில் பணம் கொடுத்து இந்தக் கொடுமையை நம்பிச் செல்வது..சகிக்க முடியா வேதனையைத் தரும் கனத்த இதயமுடன் வரிசையில் காளத்தி நாதரை தரிசிக்க நின்றுகொண்டிருக்கிறோம்...
ராகவபிரியன்
இன்னும் வரும்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...