Thursday, March 14, 2019



தனது நாடகங்களில் பிரச்சாரத் தன்மையில்லாத அழகியலோடு கூடிய பூச்சற்ற உண்மைகளை ...அதுவும் அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வியல் அவலங்களை எந்தக் கம்யூனிஸ பள்ளிக்கும் செல்லாமல் தனது எழுத்தின் வலிமையால் மட்டுமே சாத்தியமாக்கிக் காட்டிய பெர்டோல் பெரெக்ட் உலக இலக்கியங்களின் சிறப்பியல்புகள் என்பது கருத்துத் திணித்தல் இல்லை என்று உரக்க முழக்கமிட்டவர்.. அவர் தனது நாடான ஜெர்மனியின் இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளைச் சகிக்காமல் எழுத்துச் சாட்டையால் ஆதிக்க மனப்பான்மையுள்ள அத்தனை பேரின் முதுகிலும் ஒரு கோடாவது ரத்தச் சிவப்பில் போடாமல் விடவில்லை..
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தந்திர அரசியலுக்கு உடன்பட்ட அதிகாரமிக்க குழுவொன்று பெரெக்டையும் இன்னும் அந்நாளில் பிரபலமாயிருந்த 20 நபர்களையும் விசாரனைக்கு வரச் சொல்லி உத்தரவிட...மற்றவர்கள் தயங்க நிஜமான சிம்மமாய் அவர்கள் முன் தோன்றி...ஆங்கிலம் தெரியாதென ஜெர்மானிய மொழியில் கேள்விகளுக்குப் பதிலளித்து...அட்டகாசமான நகைச்சுவையுடன்...தான் கம்யூனிஸ்ட் இல்லை என கர்ஜித்தவர்...அவரின் பதில்களை மொழிபெயர்த்தவர்..அவரின் ஆங்கில அறிவைக் கண்டு வியந்து...தனது மொழிபெயர்ப்பின் சில வார்த்தைகளை அவர் திருத்தியதை...அந்த நுண்ணறிவைக் கண்டு வியந்து போற்றியதை...இலக்கிய உலகம் இன்னமும் பாதுகாத்து மட்டுமல்ல பதிவு செய்தும் வைத்திருக்கிறது...
தனது தனிப்பட்ட கருத்துக்களை தன் ஆக்கங்களில் புகுத்தாத நியாமான எழுத்தாளர்...என்று அழியாப் புகழ்பெற்ற பெரெக்ட் 1954ல் ஸ்டாலின் அமைதிப் பரிசை வென்றுள்ளார்...அன்றைய கீழை ஜெர்மனி சோவியத் படைகளின் உதவியைப் பெற்றதை அவர் பாராட்டி எழுதியதை சோவியத் ரஸ்யா வியப்புடன் கொண்டாடியது...ஆனால் மக்கள் சேவையில் தவறிழைக்கும் எவரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதை அவரின் அதியற்புதமான கவிதையொன்று பேசுகிறது...இது மொழிமாற்றமோ மொழியாக்கமோ இல்லை....அந்தக் கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்...
எங்கள்
எழுத்தாளர் சங்கத்தின்
செயலர்
துண்டுப் பிரசுரங்களை
விநியோகிக்கிறார்...
அரசாங்கம்
மக்களின் நம்பிக்கையை
இழந்துவிட்டதென்று...
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
நம்பிக்கையில்லை
எனத் தீர்மானித்தால்
பாராளுமன்றம் கூட கலைக்கப்படலாம்...
ஆனால்
ஆட்சியாளர்களுக்கு
மக்கள் மேல் 
நம்பிக்கையில்லையென்றால்
மக்களையே
கலைத்துவிடலாம்...
அவர்களின் வாழ்வாதாரத்தை
அவர்களின் சமுதாயக் கட்டமைப்பை
அவர்களுக்கான அன்பை
அவர்களின் நிம்மதியை..
அவர்களின் உறக்கத்தை
ஏன்
அனைத்தையுமே
கலைத்துவிடலாம்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...