Thursday, March 14, 2019

ஆன்மீக நிகழ்வுகள் ஆயிரமாயிரமாண்டுகளாய் நிகழ்ந்த வண்ணமுள்ள நம் திருவரங்கத்தின் ஆதி பிரம்மோத்ஸவமான பங்குனித் திரு நாளின் இரண்டாம் நாள் திருவரங்கன் ஜீயபுரம் எழுந்தருளுவார்...இன்றும் இதோ எழுந்தருளியிருக்கிறார்..தெய்வ பக்தியென்பதியென்பது யதார்த்த அனுபவ நிஜம்..அந்த நிகழ்வின் காரண கர்த்தாவான அரங்கன் புரிந்த அற்புதங்கள் வரலாறாகி அந்த வரலாற்றை தலைமுறை தலைமுறைகளாக கொண்டு சேர்க்க நிகழ்த்தப்படும் நிகழ்வுகளே திருவிழாக்களும் உத்ஸவங்களும்...எப்படி பின் நவீனத்திற்கு ராஜம் அய்யர் பங்களிப்புகள் மற்றக்கப்பட்டதோ அப்படி பின் நவீன யுகத்தின் கோவில் திருவிழாக்களின் ஆதி தொடக்க நிகழ்வுகள் மறக்கப்பட்டுவிட்டன..
அகண்ட காவிரியாய் குடகிலிருந்து குதித்தோடிவரும் ஆறு முக்கம்பூ என்ற இடத்தில் இரண்டு ஆறுகளாய்ப் பிரிந்து சில ஆயிரமாண்டுகட்கு முன்பு மணப்பாறை வரையும் பல சிற்றாறுகளாய் ஓடியிருந்திருக்க வேண்டும்..நடு நடுவே சில தீவுகளும் தீபகற்பங்களும் சிற்றூர்களாய் இருந்தவிடத்து இன்றும் கூட ஒரு சிறிய தீப கற்பமாய்த் திகழும் ஜீயபுரத்தில் ஒரு மூதாட்டியும் அரங்க பக்தனான சின்னஞ்சிறுவனும் வசித்து வந்தது நிஜம்..கரைபுரண்ட காவிரி பங்குனியின் முதல் நாளில் சற்றே தன் உடல் சுருக்கிக்கொள்ள அந்தச் சிறுவன் காவிரியில் குதித்து நீந்த ஆற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு இன்றைய அம்மா மண்டபத்தில் படியேறுகிறான்..மூச்சுத் திணற மீண்ட உயிர் உட்புகுந்த அந்த அதிர்வில் கண்களின் புகைசூழ் பார்வையில் எதிரே சங்கு சக்ரதாரியாய் அரங்கன்...ஆனால் ஜீயபுரத்தில் அந்த மூதாட்டி பெயரனைக் காணாமல் தயிர்சாதம் பிசைந்து வைத்துக்கொண்டு ஜீயபுரக் காவிரிக்கரையில் இன்றைய மண்டபம் இருக்குமிடத்தில் கதறிக்கொண்டிருக்க...அந்த பெயரனாய் வடிவெடுத்த அரங்கன் தயிர்சாத உருண்டைகளை அந்த மூதாட்டி ஊட்ட மிடறு மிடறாய் உண்ணும் கண்கொள்ளாக் காட்சி இன்றும் கூட ஒரு சில அரங்க பக்தர்களுக்கு நிகழ்த்திக்காட்டுகிறான் அரங்கன்..அன்று இரவு பெயரன் கரைமீது நடந்து வீடு வர உடனே அரங்கன் மறைந்து விட... அந்த மூதாட்டி வந்திருந்தது அரங்கனென உணராது போனேனே....அரங்கா..நீயெனில் அக்கார அடிசில் செய்திருப்பேனே என்று அரற்ற...அரங்கன் திருவரங்கத்தில் அக்கார அடிசில் தினம் சாப்பிட்டு அலுத்துப்போனேன் அம்மா...அரங்க நாயகியே எனக்குத் தயிர்சாதம் ஊட்டிவிட்ட நிகழ்வம்மா இது...இனி ஒவ்வொரு ஆண்டும் இத்திரு நாளில் நான் உன் வீட்டிற்கு வருவேன் என்று உறுதியளித்து ..தன் நிஜ விஸ்வரூபத்தைக் காட்டி மறைந்துவிட..அந்த நிகழ்வை... இன்றுவரை கடைபிடிக்கும் அரங்கனின் உறுதியை சில நூறு வருடங்கட்கு முன்பு எதிரிகள் தடுத்துவிட்டது காலக்கொடுமையென்றே ஆன்மீக அன்பர்கள் கருதிவந்திருக்கிறார்கள்... அந்தச் சிறுவனின் மறுபிறப்பான கொப்பணார்யனின் பிரம்மப் பிரயத்தனத்தால் மீண்டு வந்த அரங்கனின் உத்சவங்கள் வழமைபோல் கொண்டாடப்படவேண்டும் என்ற வேண்டுகோளை..அரங்கனடியார்கள்... ஆச்சார்யர் நிகம்மாந்த மஹா தேசிகனிடம் வைக்க..ஆச்சார்யர்... உடனே ஒரு ஸ்லோகமொன்றை ஓலைச் சுவடியில் எழுதி அரங்கனின் சன்னிதியில் வைக்கிறார்...
யதிப் பிரவர பாரதீ ரஸபரேண நீதம் வய:
ப்ரபுல்ல பலிதம் சிர; பரமிஹ ஷமம் ப்ரார்த்தயே:
நிரஸ்த ரிபு ஸம்பவே க்வச ந ரங்கமுக்க்யே விபோ
பரஸ்பர ஹிதைஷிணாம் பரிஸரேஷூ மாம் வர்த்தய!!
இதன் பொருள் எனது தாழ்மையான ஆகக்குறைந்த சிறிய அறிவிற்கு எட்டிய வரை..திருவரங்கனே எதிரிகள் மத்தியில் நான் வாழும்படியாகிவிட்டது..காவிரியின் நடுவில் இருக்கும் நீ எனது சிறிய வயதில் ஸ்ரீபாஸ்யத்தையும் ஸூத்ரங்களையும் கற்பித்துவிட்டாய்...இப்போது முதுமை வந்து தலை நரைத்து எதுவும் செய்யமுடியாதிருக்கிறேன்...கொப்பணார்யனாய் அவன் அன்னையிடம் பெற்ற அமுத தயிர்சாதமாய் எங்கள் குறைகளை நீ ஏற்றுக்கொண்டு எதிரிகள் இல்லாத சாத்விக குணம் கொண்ட ஜீயபுரத்தில் எழுந்தருளுவது போல் எங்கள் மத்தியில் எழுந்தருளி எங்கள் குறைகளை பயங்களை எங்களின் மீதான அசூயைகளை நீக்கியருள வேண்டும்...
அரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சார்யன் நிகம்மாந்த மஹாதேசிகன் திருவடிகளே சரணம்...
நன்றிகளுடன்...அன்பன்...ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...