Tuesday, March 12, 2019

எனக்கென நிறைய இருக்கிறது
உங்களுக்கெனவும் தான்..
நடுவில் இல்லாமையென்பதென்ன...?
சிற்றுண்டி எடுத்த பின்னும்
கோவில் பிரசாதத்திற்காக
நிறைந்த நிறைய கைகள் நீள்கின்றன..
இரவுப் பட்டினிக்குப் பின்னான
காலைத்தேனீரகங்கள் மொய்க்கப்படுகின்றன..
திடீரென
குடி தண்ணீருக்கான காலிகுடங்கள்கூட
நடுச்சாலைகளில் நினைவிழந்தபடி
வரிசையில் நீள்கின்றன..
எதுவோ இல்லையென்பதை
எப்படியோ நினைவுபடுத்துகிறார்கள்...
வேலை காலியில்லை
சோலைகளில் பூக்களில்லை
தானியங்கி பணப்பெட்டிகளில்
பணமில்லை..
அங்கே காவலாளி தூங்குவதுமில்லை..
பீர் குடுவையில் ஊற்றப்படுகையில்
நுரை வருவதில்லை..
இப்போதெல்லாம்
போதையும் வருவதில்லை..
வாழ்விற்கான போராட்டங்களில் உயிரில்லை..
நெகிழிக்குப்பைகள் கொட்டப்படாத...
சாக்கடைகள் கலக்காத... காவிரியில்லை..
எனக்கான சின்னமின்னும் ஒதுக்கப்படவில்லை
இல்லை இல்லை இல்லை...
ஆனால் எதுவோ இருக்கிறது...
வாக்காளர் அடையாள அட்டையிருக்கிறது..
வாக்கு வங்கிகள் இருக்கின்றன..
அந்த வங்கிகளுக்கான
தானியங்கி வாக்காளர்கள் இருக்கிறார்கள்..
இந்தியா இருக்கிறது...
எனக்கும் அதற்கும்
நிறைய எதிரிகளும் இருக்கிறார்கள்..
பாராளுமன்றம் இருக்கிறது
சட்ட மன்றங்களும் தான்...
எனக்கும் நிறைய இருக்கிறது ...சொல்வதற்கு
உங்களுக்கும் தான்...
ஆனால்
சமூக வலைத்தளங்களும்
ஊடகங்களும்
விழிப்புணர்வும்
என் பதிவுகளுக்கான விருப்பங்களும் தான்
போதாமலிருக்கிறது...
இருக்கிறது.. இருக்கிறது... இருக்கிறது..[நடுவில் இல்லாமையென்பது என்ன...]
இல்லை...இல்லை..இல்லை....
சாமான்ய பொதுஜனன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...