18.03.2019 அன்று விடியல் நான்கு மணிக்கெல்லாம் ஸ்ரீனிவாசம் எதிரே உள்ள நெடுஞ்சாலையை மிகச் சுலபமாகத் தாண்டி தள்ளுவண்டியில் தரப்பட்ட மிகத் தரமான விலைமலிவான தேனீர் அருந்திவிட்டு தானாகக் கூவியழைத்த முச்சக்கர தானியங்கி ஊர்தியில் திணித்துக்கொண்டோம்..ஒரு யதார்த்த நிகழ்வாய் ஊர்தி ஒட்டுனர் வழியில் நின்ற இன்னும் இருவரை ஏற்றிகொண்டு திருப்பதியின் எல்லாச் சாலைகளையும் சுற்றிக் காண்பித்தார்..நாங்களும் மாந்திரீகத்திற்கு ஆட்பட்டவராய் கொஞ்சம் நகர்ந்து இடம் கொடுக்க ...ஆகச் சிறந்த ஆந்திராவின் மருத்துவமனைகள் அங்கிருப்பதாக மாந்திரீக யதார்த்த வாதம் செய்து...பெருமைப்பட்டுக்கொண்டே நடுவில் ஏறிய இருவரையும் இறக்கிவிட்டுவிட்டு எங்களை அலிபெறி அதாவது திருப்பதிமலையடிவாரத்தில் இறக்கிவிட்டார்...
வாகனங்களைத் தவிர்த்து நடந்து மலையேறுவதென்பது ஒரு தனித்த பக்தியின் தெய்வீக நடப்பின் நிஜம்..பண்டைய தமிழர்கள் காசிமுதல் ராமேஸ்வரம் வரை நடந்தே போயிருக்கிறார்கள்..நமது ராமானுஜர் கூட திருப்பதி மலையை எந்த வசதியுமற்ற பாதுகாப்பற்ற அபாயங்கள் நிறைந்த அந்நாட்களில் தினம் மூன்று முறை நடந்து ஏறி வழிபாடுகளைச் செம்மைப்படுத்தியதாக வரலாறு பேசுகிறது...
திருப்பதி பயணத்தின் உச்சகட்டமாய் காளிகோபுரம் ஏறும் கடைசீ சில படிகளுக்கு முன் எங்களுடன் பிறந்து சில நாட்களே ஆன கைக்குழந்தையையும் சுமந்து நடந்து ஏறி சற்று முன்னே அமர்ந்திருந்த ஒரு அன்னை தன் குழந்தைக்கு பால் கொடுக்கும் அந்த நொடிகளில் ..மிக அருகில் அந்த இருளுக்குள் பாய்ந்த சொற்ப வெளிச்சத்தில் மின்னும் கண்களுடன் ஒரு சிறுத்தைப்புலி அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்ததை நானும் மனைவியும் மகளும் கண்டு அரண்டு போனோம்..அந்த அறியாக் கூட்டத்தை நாங்கள் எச்சரிக்கப் போட்ட கூச்சலில் அந்த சிறுத்தை நொடியில் தாவி மறைந்து போனது...மார்ட்டின் செய்மோர் ஸ்மித் நவீனத்திற்கான மூன்று காரணிகளை அலசுகிறார்..அவை வாழ்வின் நிலையாமை ஏதுமற்ற நிலையின் மீதான முடிவு மற்றும் இவ்விரண்டையும் பிரக்ஞையின்றி இல்லையென்று கூறிக்கொண்டே வாழ்தல்..இவைதான் நவீனமென ஆணித்தரமாக அடித்துப்பேசியது நினைவில் வந்து போக சிறுத்தையை.. ஒரு அபாயத்தை... அரங்கனை.. பக்தியை.. வாழ்வின் நிலையாமையை... ஏதுமற்ற ஒரு நிலைக்கான பிரயத்தனங்களை.... மிக அருகில் தரிசித்த அந்த நொடிகள் பின் நவீனத்திற்கான புத்தம் புதிய உலகை திறந்த.. பட்டு நூல் கத்தரியால் வெட்டப்பட்ட... ஒரு மெலிய அணுவின் வெளிவருவதற்கு முன்னான அவதைச் சப்தங்களின் விபரீத முதல்படியை வெளிச்சமிட்டன...
நவீனத்தைக் கடப்பதைவிட ஒரு அபாயத்தைக் கடந்துவிட்ட அந்த நொடிகள் அரங்கன் மீதான எங்கள் பக்தியின் உச்சத்தை உணர்த்தியதாகவே உணர்ந்தோம்..எங்களுக்கு ஒதுக்கப்பட அந்த சரியான நேரத்தில் ஏழுமலையில் நின்ற திருக்கோலத்தில் இருக்கும் அரங்கனை..திருப்பாணாழ்வாரின் பாசுரத்தில் நமக்குக் காட்டிய அருவ தோற்றத்தின்.ஒளிக்கீற்றை..
மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர்கள்..
சந்திசெய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்ததுபோல் ஒர் எழில்...
உந்திமேல் அதுவன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே..
சந்திசெய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்ததுபோல் ஒர் எழில்...
உந்திமேல் அதுவன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே..
என்று மனதில் சிவந்த ஆடையுடுத்தி ஆரஞ்சு நிற அங்க வஸ்திரம் அணிந்த அரங்கனுருவை மனதில் நினைத்து அங்கேயே ஒரு பாசுரம் இயற்றி...மனதிற்குள்தான் வெளிவந்தபோது..அதுவரை பட்ட இடிகள்..நசுக்கல்கள்..பின்னிருந்து வலிந்த தள்ளல்கள் எல்லாம் மறைந்து ஒரு ஒளியாண்டுக்குள் வாழ்ந்து நிறைந்த மன நிறைவு ..கொடுக்கப்பட்ட சிறிய லட்டுப் பிரசாதத்தில் இனிதாய் சுவையாய் இதயம் வரை இனித்தது..
மெல்ல மலையிறங்க...எப்போதோ முக நூலில் நான் எழுதிய மலையிறங்கும் மிதிவண்டிப் பயணம் என்ற பின் நவீன கவிதை நினைவில் வர வயிற்றைப் பிசைந்தது... நவீனத்தைக் கடக்க மூன்று காரணிகளை ஒதுக்கிவிடச் சொன்னார் செய்மோர் ஸ்மித்..உன் இருத்தலால் ஒரு உபயோகமும் இல்லை என்ற சிந்தனையை முதலில் தூக்கியெறியச் சொன்னார்..அது தான் முதல் காரணி...நானும் என் இருத்தலுக்காக சிறுத்தையை விரட்ட குனிந்து கண்டெடுத்த சிறிய கல்லை ...என் அப்போதைய இருத்தலின் நிஜத்தை ..சிறுத்தை சென்ற பின்பு தூக்கியெறிந்து விட்டேன்..நானும் அந்தச் சிறுகல்லும் திருப்பதி மலையின் ஏதோ ஒரு மூலையில்..அன்னமையா பசியால் துடித்த ஒரு தேவவேளையில் அரங்கன் பத்மாவதியாய்க் காட்சிதந்த அந்தப் புனித இடத்தில்..அன்னமையாவிற்கு ஊட்டிவிடும்பொழுதுகளில் தப்பிவிழுந்த சில அன்னப் பருக்கைகளுடன்.. விழுந்து கிடப்போம்..
சந்தி காலத்தில் அதாவது பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் பிறக்கும் சிசு சொற்ப ஆயுளுடையது என்று பிருகத் சம்மிதையில் கூறுயிருக்கிறது...அந்தச் சுலோகம்...
அந்தாஸ் தமாயாத் ஸ்ந்தியா வ்யக்திபூதா நதுராகயாவத்
தேஜ..பரிபாதிமுகாத்பா நோர் அர்தோதயோயாவத்..
தேஜ..பரிபாதிமுகாத்பா நோர் அர்தோதயோயாவத்..
திடீரென்று இந்தச் சுலோகம் நினைவிற்கு வர சிறுத்தை கூர்ந்து நோக்கிய அந்த சிசு கண்டிப்பாக சந்தியா காலத்தில் பிறந்திருக்க சாத்தியமில்லை...அதன் ஆயுள் அரங்கனருளால் கெட்டியானதென்பது விளங்க..நாங்கள் மாலை கபில தீர்த்தம் நோக்கி எங்களது ஆன்மீகப் பயணத்தின் அடுத்த அட்டவனையின் கட்டளைக்குக் கீழ்படிந்த பயணத்தைத் துவக்கினோம்...
இன்னும் வரும்..
ராகவபிரியன்
இன்னும் வரும்..
ராகவபிரியன்
No comments:
Post a Comment