ஒரு பனவனின் ஆன்மீக பால்ய நினைவுகள்..
பிறர்கென வாழ்த்தீ நீ யாகன் மாறே ...என்று பதிற்றுப்பத்தில் பாலை கெளதமனார் சொல்கிறார்..பிறர்கென வாழ்தல் கடினம்..தனக்கென வாழ்தலும் தான்..என் திருப்பராய்த்துறை வாழ்வு திடுமென முடிந்து நாங்கள் ஒரு மாட்டு வண்டியில் திருவரங்கம் வந்த கதையை எழுதியிருக்கிறேன்..திருவரங்கத்திலிருந்து திருச்சிக்கு என்னையும் என் அண்ணனையும் அழைத்துக்கொண்டு செயிண்ட் ஜோஸப் உயர் நிலைப்பள்ளிக்கு வருகிறார் என் தந்தை..அங்கே எங்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை...உடனே எதிரே இருந்த நேஷனல் பள்ளியில் என் அண்ணன் பத்தாம் வகுப்பிலும் நான் எட்டாம் வகுப்பிலும் சேர்ந்தோம்..என் தந்தை எவ்வளவு மன்றாடியும் என்னை எட்டாம் வகுப்பில் ஆங்கில மீடியத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார்..அப்போதைய தலைமை ஆசிரியர் திரு சுவாமிநாதன் அவர்கள்..
ஒரு குழந்தையின் பிடிவாதம் காரணிகளற்றது..நான் அன்று வகுப்பிற்குச் செல்லாமல் தந்தையுடன் வீடு வந்து சேர்ந்தேன்..என் பாட்டியிடம் நடந்ததைச் சொன்னேன்..என் கண்களிலிருந்து கொட்டிய கண்ணீரைத் துடைத்தபடியே..ஏன்டா..இதுக்கா அழற..ரெங்கனாதரண்ட சொல்லுடா..இங்கிலீஷ் மீடியம் இல்ல..நீ கேட்டதனைத்தையும் தருவார்டா..என்று சொல்லி...என் தந்தையையும் வைது கொண்டே இருந்தார்..உடனே ஓடினேன்..அரங்கனின் சந்நிதி அன்று பக்தர்களுக்காக திறந்தே இருந்தது...யாரும் எப்போது வேண்டுமானாலும் அரங்கனை தரிசிக்கலாம்..தற்போது தீர்த்தம் கொடுக்கப்படும் இடத்தருகில் அமர்ந்து கண் மூடி..ரெங்கா..ரெங்கா...என்று அழைத்துக்கொண்டிருந்தேன்..எவ்வளவு நேரமெனத் தெரியவில்லை..ஒரு பட்டர்..எழுப்பி தீர்த்தம் தந்து...சின்ன வயசுல என்ன பிரச்சனை...எல்லாம் ரெங்கன் பார்த்துப்பன்..போடா..போய் ஒழுங்கா படி..என்று சொல்லி அனுப்பி வைத்தார்..
வீடு வந்தேன்..எல்லோரும் அவரவர்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்..நானும் அதை மறந்தே போனேன்..மறு நாள் காலை என் அண்ணனுடன் பள்ளிக்கு வந்தேன்..என்னை தமிழ் மீடியத்தில் அமரச் சொன்னார்கள்..நான்கு பீரியடுகள்..பிடிப்பில்லாமல் கடைசீ பெஞ்சில் அமர்ந்திருந்தேன்..வகுப்பு புதிது..மாணவர்கள் புதிது..ஆசிரியர்கள் புதிது..என்ன செய்வது...உணவு இடைவேளையில் என் அண்ணனுடன் தயிர் சாதம் சாப்பிட்டேன்..மனம் முழுவதும் ரெங்கா.. நான் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கும் தகுதியற்றவனா...என்று இனம் புரியாத வார்த்தைகள் ஓடிக்கொண்டிருக்க...மதிய வகுப்புகளின் தொடக்க மணியடித்தது...
எங்கிருந்தோ என்னொத்த சிறுவன் ஒருவன் வந்தான்..என் அண்ணனும் உடனிருக்க...தம்பி..நீ எட்டாவது இங்கிலீஷ் மீடியம் தானே..இதோ..இந்த வகுப்பில் அமர்ந்துகொள் என்று சொல்ல... நானும் உள்ளே சென்று அமர்ந்து கொண்டேன்..வகுப்பாசிரியர்...டேய் நீ என்ன நியூ அட்மிஷனா..என்றார்...ஆமாம் என்றேன்..என் பெயரை வருகைப் பதிவேட்டில் எழுதிக்கொண்டார்...நானும் பதினோராம் வகுப்பு வரை ஆங்கில மீடியத்தில் படித்தேன்...யாரும் எந்த சந்தேகமும் எழுப்பவில்லை..
பிறகான ஒரு பிரக்ஞை நாளில் அந்தச் சிறுவன் யாரெனத் தேடினேன்..இன்று வரை..அந்த முகம் என் கண்ணில் தென்படவில்லை...
அந்நாட்களில் அரங்கனிடம் பேச பிராகிருத மொழியில் உரையாடுவார்களாம்..ஆனால் எனது தமிழ் வேண்டுதலுக்காக திருவரங்கத்திலிருந்து நேஷனல் பள்ளிவரை நடந்து வந்த அரங்கனின் திருப்பாதங்களை நோகச் செய்த என் சுய நலம் என்னை இன்றும் கூட தலை குனியச் செய்யும்...அது போன்ற கழிவிரக்க நாட்களில் ஆச்சாரியனின் பாடலொன்று என் நினைவில் வரும்...
ஹிய யேஸு தேசியாணம்
ஜண்ஹை லஹாரீஸூ பண்ணச்ந்தோ வ்வபுடொ..
கலுஸ ஜலேசூவ ஹம்ஸோ
ஜஸாய கபுறே ஸூடாஸி அச்சுயணகணம்..
ஜண்ஹை லஹாரீஸூ பண்ணச்ந்தோ வ்வபுடொ..
கலுஸ ஜலேசூவ ஹம்ஸோ
ஜஸாய கபுறே ஸூடாஸி அச்சுயணகணம்..
ஹ்ருதயேஷூ தேடிகா நாம்
ஜாஹ் நவீ லஹரீஷீ பூர்ணசந்த்ர இவஸ்ப்புட:
கலுஷ ஜலேஷ்விவ ஹ்மஸ
கஷாய கர்ப்புரேஷீ திஷ்ட்டஸ்யச்யுதந க்ஷணம்..
[ஆச்சார்யன் நிகம்மாந்த மஹா தேசிகன்}
ஜாஹ் நவீ லஹரீஷீ பூர்ணசந்த்ர இவஸ்ப்புட:
கலுஷ ஜலேஷ்விவ ஹ்மஸ
கஷாய கர்ப்புரேஷீ திஷ்ட்டஸ்யச்யுதந க்ஷணம்..
[ஆச்சார்யன் நிகம்மாந்த மஹா தேசிகன்}
என்னளவில் இதற்கான பொருள்..அடியவர்களை கைவிடாத தெய்வ நாயகனே..கங்கையின் அலைகளில் தெரியும் பூர்ண சந்திரனின் முகம் போல் தெளிவானது ஆச்சார்யர்களின் முகம்..அது போல் மனம் தெளிவான அடியவர்களின் வேண்டுதல்களை உடனே செய்ய ஓடி வருகிறாய்..ஆனால் கலங்கிய நீரில் அன்னப் பறவை ஒரு நிமிடம் கூட நிற்காதது போல்..தூய்மையற்ற உள்ளம் கொண்டவர்களின் குற்றங்களை நீ மன்னிப்பதில்லை..அவர்களிடமிருந்து நீ விலகிவிடுகிறாய்...எனவே உள்ளத் தூய்மை மிகவும் முக்கியம்..உன்னுடைய பூஜைகளைச் செய்பவர்களுக்கு கட்டுப்பாடும் நம்பிக்கையும் உளத் தூய்மையும் அவசியம்..எங்கே உன் பூஜைகளைச் சரியாகச் செய்யவில்லையோ...அவ்விடத்தில் நீ ஷண நேரம் கூட இருப்பதில்லை...
அரங்கன் திருவடிகளே சரணம்...ஆச்சார்யன் திருவடிகளே...சரணம்...
வணக்கங்களுடன்..அன்பன்..ராகவபிரியன்
வணக்கங்களுடன்..அன்பன்..ராகவபிரியன்

No comments:
Post a Comment