Sunday, July 21, 2019

இன்று காலையில் இந்து ஆங்கில நாளிதழின் லிட்டரரி ரிவ்யூவில் ஒய்சி குலின் அவர்களுடனான நேர்காணலை அருணிமா மஜூம்தார் மிக அருமையாக எழுதியிருந்ததைப் படித்தவுடன்..எழுத்துக் கலையின் மீதான அடிப்படை எதுவென்ற கேள்வி மனதுள் துளிர்த்தது..மிக அதிகமான உலகளாவிய வாசக சந்தையைக் கொண்டவர்.ஒய்சி குலின்..அவரின் இஸ்தான்புல்லுக்கான கடைசி தொடர்வண்டி என்ற நாவல் உலகப்புகழ்பெற்றது..அந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் உத்தியும் நடையும் கதை மாந்தர்களும் கதைக் களமும் ஒரு நூற்றாண்டு துருக்கிய வாழ்வின் அவலங்களை கண்முன்னே கொணர்ந்து வாசகனின் கண்ணில் ஒரு துளி கண்ணீரையாவது உற்பத்தி செய்துவிடும்..துருக்கி என்ற சர்வாதிகார இன்றைய ஆளுமையின் கீழ்... மக்கள் வாழ்வென்பதே என்னவென்று உணரமுடியாத கணங்களை..போராட்டங்களே வாழ்வெனும் பரிதாபத்திற்குரிய நிஜத்தை துய்த்துக்கொண்டிருக்கிறார்கள்..கருத்துச் சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமின்றி..எழுத்தாளர்கள் கவிஞர்கள் சிறையில் வாடும் கொடுமைமிக்க வரலாற்றின் மொழிச்சார்பற்ற நோபல் வரைபடத்தில் ஓரான் பாமுக் நோபல் பரிசு பெற்று உலக கவனத்தை ஈர்த்துவிடுகிறார்..எழுபத்தியேழு வயதான ஒய்சி குலின் ஓட்டோமன் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கொடுங்கோல் ஆட்சி நடத்தும் இன்றைய துருக்கியின் ஆட்சியாளனான..எர்டோகனால் இன்னமும் கைது செய்யப்படாமல் இருப்பது நம்பமுடியாத நிகழ்வாக துருக்கிய மக்களால் பார்க்கப்படுகிறது.. ..பதினான்காம் நூற்றாண்டிலிருந்து துருக்கிய சமுதாயத்தை கட்டமைத்த ஓட்டோமன் இனம் மிக அருமையான சமதர்ம கொள்கைகளை உள்ளடக்கியது...அதன் கொள்கைகளில் ஒன்றான பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இஸ்லாமிய சமுதாய பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை என்பதும் ஒன்றாகும்..இஸ்லாமிய அடிப்படையிலான ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள் தற்போது ஏறக்குறைய கடந்த ஐந்து வருடங்களாக பர்தா அணிவதைக் கட்டாயமாக்கி..சமதர்ம சமுதாயம் பற்றி எழும் குரல்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் போக்கைக் கடைபிடிக்கிறார்கள்..ஒய்சி குலின் அதிபர் எர்டோகனுக்கு இதன் பொருட்டு கடிதங்கள் எழுதியும் கூட அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லையென்றும்..எந்நேரமும் ஆட்சியாளர்களால் தனக்கு எதுவும் நேரலாமென்றும் கூறுகிறார்..அவரின் ஒரு கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்..இது மொழிபெயர்ப்போ மொழியாக்கமோ மொழி மாற்றமோ இல்லை..
மகளே எர்ஸா...
ஒரு சர்வாதிகாரியின்
பதவியேற்பு விழாவில்
யூதர்களின் குருதி
பட்டாபிழேகத்திற்கான
தங்கக் குடங்களில்
நிரப்பப்பட்டதை
உலகம் பார்த்தது..
அன்று தாம்
நாம் புலம் பெயர்ந்தோம்
யூதர்கள் மட்டுமல்ல
இலங்கை வாழ் தமிழர்கள்
ஆப்கானியர்கள்
ஜெர்மானியர்கள்
குருதுகள்..
இன்னபல இன நாடு
அடையாளம்
அணிந்தவர்களிடம்
புலம் பெயர்வதென்றால்
என்ன எனக் கேள்..
மகளே எர்ஸா..
புலம் பெயர்வதன்றால்
மனித வாழ்வை
பாதியறுத்த
கசாப்பு மரத் தட்டில் வைத்து
மாமிசங்களை
துண்டு துண்டாக வெட்டுவதென்று
தயங்காமல் சொல்லிவிட்டு
தலை மறைவாகிடுவார்கள்....
அவர்களிடமிருந்து
எடுக்கப்பட்ட
குருதியின் மிச்சங்களை
ஆட்சியாளர்கள்
தங்களின்
பட்டாபிழேகத்திற்கான
குடங்களில் நிரப்புவதுதான்
புலம் பெயர்தல்..
புரிந்ததா எர்ஸா..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...