Wednesday, July 17, 2019

தொடர்வண்டித் தொழிலாளக்
குடியிருப்பின் சாக்கடை
தேக்கக் குளத்தில்
நிம்மதியாய் குளித்தபடி
தூங்கும் அப்பன்றி..
அதை நோக்கி வீசப்படும்
கற்களை பொருட்படுத்தாமல்
உறுமல் ஒன்றை உதிர்க்கும்..
எந்தக் கல்லும்
வீசப்படாத ஞாயிறன்று
அந்தக் குளத்தில்
பயந்தபடியே
விழித்துக் கிடக்கும்..
ஒரு சிலரின்
சுருக்குக் கயிற்றின்
லாவக வீச்சில்
சிக்கி அப்படிக் கதறும்....
ஈன மரண உறுமலை
உள் வாங்கியபடியே
தண்டவாளத்தில்
தடதடக்கும்
ஒரு தொடர்வண்டி..
மரணத்திற்கு முன்னான
தோள் பல்லக்கில்
கட்டப்பட்ட கயிறுகளில்
அதன் உடல் பூத்த
சேற்றுப் பூக்கள்
சிந்திக் கொண்டே வரும்..
மதியச் சாரய
சாக்கடையில்
அதையும்
அதன் உறுமலையும்
உண்டவர்கள்
உளறிய படியே
உறங்கிக் கொண்டிருப்பார்கள்..
அதே தண்டவாளம்
ஒவ்வொரு ஞாயிறன்றும்
புதிய வண்டியொன்றையும்
புதிய பன்றியொன்றையும்
உறுமியபடியே
இன்றும் கூட
சுமந்து கிடக்கிறது..
காலாதீத மெளனத்தில்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...