Saturday, November 10, 2018

கிரக்கி யானை

புறக்கணிப்பின் வலி உணர்ந்தவர்கள் அதன் பாதிப்பால் தங்களையே புறக்கணிப்பிற்குள்ளாக்கிக் கொள்பவர்கள் இலக்கியப் பொறாமையின் பிரதிபலிப்புகளெனின் அதை நிறுவுதல் கடினமல்ல..ஒரு பதிவின் தீவிரத்தையும் தாக்கத்தையும் ஒரு ஆகச் சிறந்த படைப்பின் வீச்சுடனும் விஸ்தீரனத்துடனும் ஒப்பிடுதல் ஒவ்வாமையின் அரிப்பிற்கு உள்ளாக்கி மனச் சொரிதலை உருவாக்கும் வல்லமையுள்ளது..பதிவு என்பது நோக்கங்கள் அற்றது..அதற்கான விருப்பங்களும் கருத்துக்களும் விளம்பர உத்தியின் கூறுகளைச் சுமந்து வலுவிழந்துவிடும்..ஒரு தனித்துவமான படைப்பின் பிறப்பு இலக்கிய விடியலின் வரவை ஒரு சேவலின் அறைகூவலிலோ கிழக்கின் சிவப்பு நிற ஒளி நுழைவின் அதிர்வுகளிலோ ஒரு மனிதப் பிறப்பின் அத்தனை ஆவல்களின் பிம்பமென்றோ எண்ணங்களின் எல்லைகளையும் தாண்டி மாறுதல்களை உருவாக்க வல்லது..அதுபோன்றதொரு படைப்பை முக நூலில் வெறும் பெயரைப் பார்த்துவிட்டு விருப்பக்குறி கூட இடாமல் கடந்து போகும் போது எனக்கு தென் ஆப்பிரிக்கக் கவிஞர் ..அந்த நாட்டின் தேசிய கீதத்தைத் தந்த 58 வயது வரையே வாழ்ந்து தெனாப்பிரிக்க தொன்ம இலக்கியத்தை ஆங்கிலக் கலப்பற்ற ஆதிமொழியில் எழுதி உரை நடையின் வர்ணனைகளை விலக்கி அதன் வீச்சை உலக மொழிகளில் அறிமுகப்படுத்திய ..இந்த நூற்றாண்டின் அதிசய மனித மஹான் நெல்சன் மாண்டேலா சிறை நாட்களில் விரும்பி வாசித்த உத்வேகம் தரும் எழுத்திற்குச் சொந்தக்காரரான அழியாப் புகழ் பெற்ற லெங்கன்வேகன் அவர்களின் எழுத்தாரம்ப நாட்கள் நினைவில் வந்தன..அவர் தன்னை ஒரு ஆப்பிரிக்க யானை என்றே குறிப்பிட்டிருக்கிறார்..அவரின் கதாபாத்திரங்களில் கிரக்கி என்ற ஆப்பிரிக்க யானை தொடர்ந்து இடம் பிடித்து உலகப் புகழ் பெற்றது..அவரை உதாசீனப் படுத்திய புறக்கணித்த நிகழ்வுகள் ஏராளம்..தன் வீட்டின் அருகில் இருந்த ஒரு பாறாங்கல்லில் அவர் தன் பெயரை உளி கொண்டு 1913-14 ல் செதுக்கியிருக்கிறார்..அதன் கீழே கிரக்கி யானையின் பெயரையும் செதுக்கி...புறக்கணிப்பிற்கு உள்ளாகும் எந்த எழுத்தும் புரட்சியை ..வரலாற்றை உருவாக்கும் ..என்பதன் சாட்சியாய்...இருக்க...இன்றும் கூட அந்தக் கல்லை ..அவ்விடத்தை தெனாப்பிரிக்க அரசு சுற்றுலாத் தளமாக அறிவித்து...உலகெங்கும் உள்ள எழுத்தாளர்களும் வாசகர்களும் பார்த்த வண்ணம் உள்ளனர்...
அவர் உமர் கய்யாமின் பாடல்களை தெனாப்பிரிக்க மொழியில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்..அவர் மொழிமாற்றிய அவரின் ஒரு கய்யமின் சாயல் கொண்ட கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்...இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை...
படுக்கையறைகளில்
நெளிபவைகள்
மெத்தைவிரிப்புகள் மட்டுமல்ல..
ஒரு சில
சட்டையுரிக்கும்
விஷங்களின் நெளிவுகளும் கூட..
கனவுகளின் கைகள்
வானைத் தொடும் போது
உன் காமக் கோப்பை
காலியாகியிருத்தல் சுகம்..
நெளிவுகளின் தடைகளை
தகர்தெறியும் நீண்ட
போராட்டங்களில்
நிறவெறியின் உக்கிர மதுவை
மீண்டும் நிரப்பிக்கொள்..
உன் உறக்கத் தொடக்கத்தின்
ஒரு மூலையில்
புரட்சிச் சேவல்
கொக்கரிக்கையில்
உனக்கினி இரவுகளேது...?
விஷங்களை விரும்பிச் சுவைக்கும்
உன் உதடுகளின் நிழல்
சிவப்பின் சாயலுடன்
கிழக்கில் உதிக்கும்
கருப்பு நிறச் சூரியக்
கோப்பைக்குள் தளும்பும்..
படுக்கையையுடன்
உன் பயத்தையும் சுருட்டி வை..
புறப்படு..
என் கிரக்கி யானை
கால் தூக்கி
மத்தகத்தில் உன்னையேற்றிக்கொள்ள
காத்திருக்கிறது...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...