Tuesday, November 20, 2018

நிவாரணம் ஏந்தி
புறப்படுகிறதென் ஊர்தி..
யானை கட்டிப் போரடித்த
எம் தஞ்சைவயல் வெளிகளுக்குள்
நுழைகிறேன்..
கை நிறைய
சிதறிக் கிடக்கும்
தென்னங்குரும்பைகளை
நீட்டும் பிஞ்சுக்கைகளுக்கான
நிவாரணமெதுவென
அறியாது அதிர்கிறேன்..
சாய்ந்து கிடக்கும்
மின் கம்பிகளில்
லாகவகமாக நடனமிட்டு
சரிந்த குடிசையின்
மண்சுவர் மாடத்திலிருந்து
கல்லாங்காய் ஆட்டத்திற்கான
கூழாங்கற்களைச் சேகரிக்கிறாள்..
சின்னத் தமிழச்சி..
அவைகளைக்குட்டையில்
குளிப்பாட்டி
வாரியணைத்து
ஈரப்பாவாடைக்குள் பத்திரப்படுத்தி
பளீரெனச் சிரிக்கிறாள்..
கூழாங்கற்களை
கூட்டாஞ்சோறின்
ஆவியில் அவித்து
காயவைக்கக்கோரும்
அவளின் கைகளில்
அந்தக் கூழாங்கற்களில்
கூட்டஞ்சோற்றின்
வாசம் கொணரும்
உடனடி நிவாரணமறியேன்..
வரப்புச் சண்டையில்
பெரியப்பா மாமரத்தில் வீசியெறிந்த
நடைவண்டியுடனும்
பறவைக்கூடுகளுடனும்
தலையாட்டிப் பேசிக்கொண்டிருந்தவள்..
அம்மாமரம் சாய்ந்து
குட்டைக்குள் மிதக்கவிட்ட
அவளின் மிச்ச நடைகளை
அந்த மிதிவண்டியை
கூடடைய வந்த பறவைகளின்
மீந்த சிறகுகளை
அணிற்கடித்தப் பழங்களை..
எப்படி நிவாரணமாய்
மீட்டுத்தருவதென
தவித்துக்கொண்டிருக்கிறேன்..
ஊர்தியை விட்டிறங்கியவன்
மனமெங்கும்
நிவாரணத் தென்னைகள்
சாய்ந்து கிடக்கின்றன...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...