Monday, October 29, 2018

சிதறிக்கிடக்கும் தோல்விகள்..ராகவபிரியன்

உன் மாநாட்டிற்கான ஆயத்த வேலைகளின் கடல் நடுவே உருக் கொள்கிறது ஒரு புயல்..
அதன் மைய மாயக் கண்களுக்குள் வெற்றியைத் தேடுகிறாய்..இப்போதே..
உன் வியர்வைகளை உயர்ந்த வண்ணத் தட்டிகளாய்
வழியெங்கும் அமைத்த நீ
துவக்குகளற்ற நாவாயாய் அலைகளால் தடுமாறிக்கொண்டிருக்கிறாய்..
புயல் ஒரு குடையென உன் மீது கவிழத் தொடங்குகிறது..
மாநாட்டுப் பந்தலில் நீ நிற்கக்கூட அனுமதிக்கப்படபோவதில்லை யெனினும்
அதன் முகூர்த்தப் பந்தல்காலென
உன்னைப் புதைத்துக் கொண்டிருக்கிறாய்..
புயலின் மெல்லிய ஈரக் காற்று உன் மீதான
வண்ணங்களை அழிக்கத் தொடங்குகிறது..
உனக்குத் தரப்பட்ட தேனீர்க் காகிதக் கோப்பையை
வியர்வையால் கழுவி வைத்திருக்கிறாய்..
அதன் மீது நீ எழுதப் போகும் வரலாற்றின் வரிகள்
மாநாட்டின் முழக்கங்களாய் மாறுமெனும்
உன் கனவில் தீ மூட்டப்பட்டிருக்கிறது..
காய்த்த உன் கைகளில் தட்டியேந்தி வறுமையின் கொடியேந்தி
ஏமாற்றுக் காரர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறாய்..
மாநாடு தொடங்க புயல் அதன் கைகளை தட்டி
உன்னை எச்சரிக்கிறது..
திரும்பிப் பார்க்கிறாய்.... மாநாட்டுப் பந்தல்
அதன் அலங்காரங்களுடன் வானில் துளித் துளியாக
தூக்கியெறியப் பட்டுக்கொண்டிருக்கிறது..
உனக்கான கூலியாய் காலிக் கோப்பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறாய்..
கொல்கத்தா மாநாட்டிற்கு பாரதியின் பயணத்தின்
பட்டினி வயிற்றின் உக்கிரமாய் புயல் தாண்டவமாட..
உன் முண்டாசை இறுக்கிக் கட்டுகிறாய்..
மழித்தெறிந்த உன் மீசைமுடிகளை புயல் தொடாமல் கடப்பது அதிசயமில்லை..
உனக்குப் புயல் தோல்வியைத் தந்துவிட்டு அமைதியாய் இருக்கிறது...
ஆங்காங்கே
சிதறிக் கிடக்கும் தோல்வியைத் தான்
இப்போது...
ஒரு புயலென நீ தாண்டவேண்டியிருக்கிறது...
ராகவபிரியன்

Saturday, October 27, 2018

மனிதன் மன அதிர்வுகளின் பால் கால் பதித்து தள்ளாடியபடி சில செயல்களைச் செய்கிறான்...அவனைப் பொறுத்தவரை அதிர்வுகளின் பிரக்ஞ்சையும் தாக்கமும் அதன் விளைவுகளும் அவனை பாதிக்கும் வரை.. அவன் அறிவிலியாகவே இருக்கிறான்..மனிதனின் முதன்மையான இயல்பு அடுத்தவனுடன் தன்னை ஒப்பிட்டுக்கொள்வதுதான்..சில ஒவ்வாத ஒப்பீடுகளால் அவன் தன்னை உயர்ந்தவனாகவும் பலமுள்ளவனாகவும் தான் வெறுப்பவன் தன் முன்னே மண்டியிட்டுக் கதறுவதாகவும் கற்பனை செய்தபடியிருக்கிறான்..கற்பனையை நிஜமாக்கும் பொழுதின் கடினங்களில் மனிதம் இறந்து போவதைக் காணலாம்...தனி மனிதன் தன் ஆச்சார்யனை அருகிலிருந்தும் அடையாளம் காணமுடியாமல் தவிக்கிறான்..அந்தத் தவிப்பின் அதிர்வுகளால் தள்ளாடியபடி அந்த ஆச்சார்யனை அடியாள் வைத்து அடிக்கவும் தயங்காத இயல்பை ..அந்த ஆச்சார்யனின் தவப்பொருட்களை திருட்டுத்தனமாக அடைய நினைக்கும் ஒவ்வாத தீய மனப்பாங்கின் அசுர இயல்பை பிறிதொரு நாளில் உணர்வதை ஞானமெனக் காண்கிறான்..அவன் அதை அடைவதற்குண்டான நெடிய பயணத்தில் சில நேரங்களில் தன்னையே தொலைத்ததை அறியாமல் பிணமாய் கனத்துப்போகிறான்..அப்படியான ஒரு மனிதனை அரங்கன் ஆட்கொண்டு மனிதனாக்குவான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் ஆச்சார்யன் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் திருக்கோவிலூர் வருகிறார்..
அங்கே ஒரு கீற்றுக்குடிசையின் மழையிரவில் ஒருவரையொருவர் உணராமல் நெருக்கியபடியிருக்கும் முதலாம் ஆழ்வார்களை தன் ஞானத்தால் நெருங்குகிறார்..தென்பெண்ணையின் சீரிய பாசனத்தால் விளைந்த கோட்டைமருதூர் கரும்பொன்றை ஆலையிலிட கிடைக்கும் அமுதமென அரங்கனைப் போற்றிப்பாடத் தொடங்குகிறார்கள் மூன்று ஆழ்வார்களும்..அந்தாதி வெண்பாக்களின் அபூர்வ ஒளியில் அரங்கன் தன் பை நாகப் பாயிலிருந்து எழுகிறான்..திரிவிக்ரமனாய் தன் வலது காலை மேலே தூக்க மிருகண்டு முனிவர் சங்கு சக்கரங்களை கைமாற்றிக் காட்டச் சொல்கிறார்..அத்தனைக் காட்சிகளையும் நமது ஆச்சாரியனுக்கு அரங்கன் நிகழ்த்திக் காட்ட 28 பாடல்களை ஸ்ரீ தேஹலீச ஸ்துதி.என்ற தொகுப்பில் அதியற்புதமாக இயற்றிக்காட்டி வாழ்வின் அர்த்தங்களை நமக்கு உணர்த்துகிறார் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகச் சுவாமிகள்...அதிலிருந்து ஒரு கவிதையை உங்களுக்காக இங்கே தருகிறேன்..
காஸார பூர்வ கவி முக்க்யவிமர்த்த ஜந்மா..
பண்ணா தடேக்ஷு ஸுபகஸ்ய ரஸோ பஹூஸ்தே..
த்வத்பாத பத்ம மதுநித்வத் நந்ய போக்யே..
நூகம் ஸ்மாஸ்ரயதி நூத நசர்க்கராத்வம்...
[ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன்}
திருக்கோவிலூர் அருகே உள்ள பெண்ணையாற்றின் நீரால் நிரம்பி வழியும் கோட்டை மருதூர் ஏரிப்பாசனத்தில் விளைந்த தரமான கரும்பை சாறாக்கிப் பருகக் கிடைக்கும் அமுதம் ..பகவத் நெருக்கத்தால் நெகிழ்ந்து அமுதத் தமிழ்பாடல்களைத் தந்த முதலாமாழ்வார்களை லெளசீல்யம் எனும் உயர்ந்த குண நலங்கள் கொண்டவர்களாக மாற்றும் சக்தியுடையது.. அதுபோல ஆணவத்தால் தனது அடியாட்களை ஆச்சார்யர்களை நோக்கி மீசையை முறுக்கச் செய்யும் ஒப்பீடுகளையுடைய அதிர்வுகளின் பிடியில் ஆடிக்கொண்டிருக்கும் தகுதியற்றவனை மனிதனாக்கும் கருப்பஞ்சாறு உனது திருவடிகள்..அதை அனுபவிப்பர்வர்களுக்கே மனிதமே உயர்ந்தது என்ற ஞானம் கிடைக்கும்..அவ்வாறான ஞானமுடையவர்கள் ஆச்சார்யனின் செய்கைகளைத் தவறாகப் புரிந்துகொள்வதிலிருந்து திருந்துகிறார்கள்..அப்பொழுதின் இனிமையில்தான் கருப்பஞ்சாறு சர்க்கரையாக மாறி இன்னும் இனிக்கத்தொடங்குகிறது..திருவரங்கன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

Saturday, October 6, 2018

வாழ்வு என்பது பிறத்தலும் குழந்தைமையும் உழைப்பும் இன்ப துன்பங்களும் மூப்பும் இறத்தலும் எனும் நம் நம்பிக்கைகளை தகர்த்து அது முடிவற்ற போராட்டம்..ஒருவேளை முடிவின் விளிம்பில் வெற்றி என்பது நிச்சயமில்லை எனும் போதில் செல்லும் ஒவ்வொரு நொடியும் எதிர்கொள்ளும் தோட்டாக்களும் பிணங்களும் இடிபாடுகளும் இழப்புகளும் போராட்டப்பாதையை எழுத்தை நோக்கி ஒரு ஆறுதலுக்காகவாவது ஒருவரை திருப்ப முடியும்..எழுத்தின் மூலமும் போராட முடியும்...எழுத்து கண்டிப்பாக எழுந்து நிற்கச்செய்யும்..அப்படிப்பட்ட கற்பனைகளுக்கும் எட்டாத ஒரு கொடுஞ்சூழலில் ஐஎஸ் ஐஎஸ் தீவிர வாதிகளால் தனது தாயும் ஆறு சகோதரர்களும் தன் கண்முன்னால் கொல்லப்பட்டும்..தான் பாலியல் அடிமையாக கொடூரமான வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டும் அத்தனை கொடுமைகளையும் எதிர்கொண்டு தைரியமாக தப்பி வந்து லண்டனில் ஒரு மனித உரிமைப் போராளியும் தோழியுமான சட்டப்பணிகளைத் தொழிலாகக் கொண்ட அமோல் கொலோனியிடம் அடைக்கலம் தேடி தஞ்சம் புகுகிறாள் நாடியா மூரட்...2018 ன் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நிஜமான புரட்சிப்பெண்...
அவரின் கடைசீப் பெண்குழந்தை[THE LAST GIRL] என்ற புத்தகம் படிப்பவர் கண்களில் கண்ணீரை வற்றிவிடச் செய்யும் என்பது திண்ணம்..அந்தப் புத்தகத்திற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசுகூடக் கொடுக்கலாம்...அந்த புத்தகத்தின் வரிகளெங்கும் தேங்கிக்கிடக்கும் மனித குலம் இந்த நூற்றாண்டில் சந்தித்த ஒப்பீடற்ற அழிக்கமுடியா கொடுமைகளை ...ஆகப்பெரிய அணையால் கூட தேக்க முடியாத அலைகளற்ற கண்ணீரை இங்கே என்னளவில் தமிழில் தருகிறேன்..
அன்புள்ள அம்மா..
உன் பையனை
என் அண்ணன்களைக் கடத்தியவனின்
மகிழுந்துக் கண்ணாடியை
உடைத்துவிட்டேன்..
என் புறங்கையின்
ரத்தத் துளிகளை
நீ முத்தமிட்டாய்..
நம் வயல்களின்
வெளிர் சிவப்பு வெங்காய விளைச்சலை
நம் ஆடுகளை
கோழிகளை
என்னையும்
கொள்ளையடித்தவனின்
ஆண்மையில்
ஒரு உதை உதைத்துவிட்டேன்..
அவன் இறந்துவிடவில்லை..
அன்புள்ள அம்மா..
என்னை விலைபேசிவிற்ற போதும்
வலுக்கட்டாயமாக
புணர்ந்த போதும்
நானும் இறந்துவிடவில்லை..
நமது இனம்
பல்லாயிர வருடப் பாரம்பரியமிக்க இனம்
அதை
கடவுள் நம்பிக்கையற்ற இனமென்றும்
நம் இனப் பெண்கள்
வன்புணர்வு செய்யப்படவேண்டுமென்றும்
ஆண்கள் கொல்லப்படவேண்டுமென்றும்
அல்லது
நாம் மதம் மாறவேண்டுமென்றும்
அவர்கள்
துண்டுச் சீட்டை வீசிய
அன்று தான்
நான் இறந்துபோனேன்..
அம்மா..
நம் அண்ணன்களுடனும்
என்னுடனும்
நீ எப்போதும் இருக்கிறாய்..
எப்போது வேண்டுமானாலும்
நான் உன்னிடத்தில்
கொண்டுவிடப்படலாம்..
என் புறங்கையின்
ரத்தத்துளிகள்
இன்னும் காயவில்லை..
உன் முத்தமும்தான்..
அதற்குள்
நான் தீவிரவாதத்தை
முட்டாள் தனத்தை
மனிதமற்ற செயல்களை
அவைகளின் தலைகளை
முகமூடி அணியாமல்
கூரிய போராட்டக் கத்தியால்
சங்குக் கழுத்தில்
சின்னக் கோடுகளாய்
துளிர்க்கும் பச்சை ரத்தம் காயும் முன்
எடுத்துவருவேன்..
அன்புள்ள அம்மா..
அதுவரை
இந்தக் கடிதத்தை
படித்துக்கொண்டிரு...
என் கைபேசித் திரையில்
கடவுளாக
உன் படத்தைத் தான்
வைத்திருக்கிறேன்..
நீ அதில்
புன்னகையுடனிருக்கிறாய்...
நானும் தான்...
போராட்டமென்பது
இனியென் உணவு அம்மா...
கவலைப்படாதே...
நான் அனாதையல்ல..
போராளியும்
மனிதம் காக்கும் தன்னார்வ
தொண்டாற்றுபவளும் கூட..
அதையும் விட
நான் ஒரு எழுத்தாளுமை...
அம்மா....
ராகவபிரியன்

Monday, October 1, 2018

இரவு யாசகனின் மோதிர விரல்
--------------------------------------------------
எனது அட்சயபாத்திரத்தில்
அன்னமிடுபவர்களின்
மோதிரங்கள் எனக்குப் பிடிக்கும்..
பொற்கொல்லனின்
சின்ன உளியின் சப்தங்களை
பொன் உருகி
கெட்டியாகும் நிமிடங்களை
கண்ணுள் கொணர்ந்து
திளைப்பேன்..
சில விரல்களின்
உலோகங்கள்
நெகிழிச் சுழுவுகள்
ஓலை மோதிரங்கள்
மிட்டாய் மோதிர
குழந்தை விரல்கள் கூட
மிக மிக எனக்குப் பிடித்திருந்திருக்கிறது..
என்
அன்ன பாத்திரத்தில்
தற்செயலாக
விழுந்த அந்த மோதிரம்
என் பிச்சைக்குத்
தடையாகிப் போனது..
இப்போதெல்லாம்
இரவு யாசகம்
மோதிர வெளிச்சத்தில்
இளைத்துப்போக..
இரவுப் பசிதாங்காமல்
மோதிரத்தின்
உரிமை விரலிடம்
விரைந்து சென்றேன்...
பெற்றுக்கொண்ட அன்னை
இதை அடகில் இட்டால் தான்
இன்று அன்னம்
எங்களுக்கு என்றாள்...
தவறாமல்
இரவு யாசகம் வரவும் கட்டளையிட்டாள்..

என் அட்சைய
பாத்திரங்களெங்கும்
பொற்கொல்லனின்
உளிச் சப்தம்
ஏனோ தாளம் தப்பி
கேட்டுக் கொண்டேயிருக்கிறது..
ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...