Thursday, July 12, 2018

பாரதி கவிதா வேள்வி...டிசம்பர் 1982

அது சூலை 1982..சிக்கல்கள் நிறைந்த ஒரு அனாதையான இருபத்து மூன்று வயது வேலையற்ற பட்டதாரி இளைஞனின் பட்டினி இழையை தொட்டுப்பார்க்கும் ஆவல் நிறைந்த காலை..தான் யாரெனும் கேள்வி வலையொன்றை எப்போதோ அவன் தனக்குள்ளும் வெளியுலகிலும் பின்னிக்கொண்டிருந்த விடிந்து வெகு நேரமாகியும் காலைபசியின்னும் தீர்ந்திராத வறுமையின் உக்கிர நிமிடங்களில் மிகவும் அழகான வசீகரமான கையெழுத்தில் ஒரு அஞ்சல் அட்டை..அவனை பாரதி நூற்றாண்டு விழாவில் ..அங்கு கவியோகி சுத்தானந்த பாரதி தலைமையேற்கும் கவியரங்கில் கலந்து கொள்ள அழைத்துக்கொண்டிருந்தது..அந்த அட்டை அன்று அவனுள் ஏற்படுத்தியிருந்த அதிர்வுகள் இன்றும் கூட அவனால் வார்த்தைகளில் சொல்லமுடியாதவை..அன்று அவனால் நம்பமுடியாமல் தான் இருந்தது...அந்த வசீகரக் கையெழுத்திற்கு சொந்தக் காரர்..கவிஞர் இளசை அருணா....
ஒன்றிரண்டு படைப்புகள் மட்டுமே சில நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளியாகியிருந்த அப்பெயரறியாச் சிறுவனின் இலக்கியப் பயணத்தைத் துவக்கப் போகுமிடம் எட்டயபுரத்தின் பாரதி ஓடிவிளையாடிய வீட்டின் வாசல் படிகள் என்றால் அது காலம் நிச்சயத்த கடவு என்பதைத் தவிர வேறென்ன...? அதை நினைத்து நினைத்து இப்போதும் கூட அவனின் இதயக்கூட்டிற்குள் ஒருமுறையாவது முண்டாசொன்றை கட்டிப்பார்த்து பிறகு அவிழ்த்து வைக்கும் காட்சியைக் கண்டு அடிக்கடி ரசித்துக்கொண்டிருக்கிறான்..
அதீத ஆனந்தம் கொண்டு ஆடியும் பாடியும் பள்ளுப் பண்களை பின்னிக்கொண்டும் அந்த அஞ்சல் அட்டையை அவனின் குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் நகர்திப்பார்க்கிறான்..நகர்வார்களா...திருவாரூரிலிருந்து எட்டயபுரம் வரைக்கான பயணச்செலவென்பது பத்து நபர்களுடைய அவன் குடும்பத்தின் மூன்று வேளைச் சாப்பாடு...
அம்பி நாகராஜன் மற்றும் அவனுடைய நண்பர்கள் உண்டியல் ஏந்தி ஊர்வலம் வருகிறார்கள்..அதற்குள் இளசை அருணா தளர்வற்ற தொனியில் கவியரங்கில் வேட்டிச் சட்டை மட்டுமே அணிந்து கவிபாடவேண்டுமெனும் ஒலையை அவனுக்கு அனுப்பித் தருகிறார்..அவனிடம் ஒரு கிழிந்த லுங்கியும் ஒரே ஒரு நல்ல சட்டையும் இருக்கிறது...முறையான இலக்கிய அறிவோ போதிய வாசிப்பறிவோ நல்ல கவிதைகளோ இல்லாமல் டிசம்பர் 10ல் தன்னந்தனியனாய் கோவில்பட்டிவரை பயணச்சீட்டு வாங்கி பொதுப்பெட்டியில் பயணிக்கிறான்...நிறுத்தங்கள் தோறும் உரத்துக் கேட்கும் தேனீர் சிற்றுண்டிச் சப்தங்களால் அவன் வயிற்றை நிரப்பிக் கொள்கிறான்...
இலக்கியமென்பது நடைமேடைகளில் உறங்குவதும் அதைப் பாடிவைப்பதும் பட்டினியைத் தந்த படைத்தவனை நன்றி கூறி படைப்புகளை ஆக்குவதும் தான் என்பதையறியாமல் கோவில்பட்டி தொடர்வண்டி நிலைய நடைமேடையில் உறங்குகிறான்...
காலையில் அந்தச் சிறுவன் அரை நிர்வானமாய் கூனிக் குருகி ஒருகுழாயடியில் குளிக்கும் போதுதான் அவன் கொண்டுவந்திருந்த மஞ்சள் பை காணாமல் போய்விடுகிறது...இயலாமையும் வெம்மையும் அவனை அரை நிர்வானமாய் விரட்ட நிலைய அதிகாரியிடம் தன் நிலையைச் சொல்கிறான்..இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பாரதி..நிலைய அதிகாரியிடம் எப்படிச் சொன்னாரோ...புதிர்கள் புரிந்துகொள்ளவும் புறக்கணித்துவிடவும் முடியாதவை... அந்த நிலையத்தில் தொலைந்த பாரதியின்முண்டாசு வேட்டியொன்றையும் ஒரு புத்தம் புதிய சட்டையையும் பத்து வெள்ளைத் தாள்களையும் புதுப்பேணா ஒன்றையும் ஒரு ஒருரூபாய்த் தாளொன்றையும் தருகிறார்..கடையேழு வள்ளல்களின் புதுப்பிறவியாய் உருவெடுத்து வந்திருந்த அந்த எட்டாவது வள்ளல் நிலைய அதிகாரி...எக்காரணம் கொண்டும் எந்த இடத்திலும் எக்காலத்தும் தன் பெயரைச் சொல்லிவிடக்கூடாதென்று சத்தியம் வாங்கிக்கொள்கிறார்..
அந்தச் சிறுவன் எவ்வளவு வற்புறுத்தியும் தேனீர்கூட அருந்த மறுத்து ஒரு இருபது முப்பது வரிகள் எழுதிக் காண்பிக்கிறான்...அவரும் மனம் கனிந்து அவனை வாழ்த்தி ஆசி வழங்கி எட்டயபுரத்திற்கான பாதையையும் பேருந்துத் தடத்தையும் அறிவுறுத்துகிறார்...வறுமையின் பிணக்குகளால் வாழ்வின் கணக்குகள் விடையற்று நிர்கதியாய் இறங்குவது போல் எட்டயபுரத்தில் கால் பதிக்கும் அச்சிறுவன் தன்னை பாரதி ஓடிவந்து ஆலிங்கனம் செய்துகொள்வதாய் கற்பனை செய்கிறான்..கால்களும் மனமும் உடலும் புதுவண்ணம் பெற பாரதியின் வீட்டின் வாசல் படியில் உணர்வுகள் மேலிட வீழ்ந்து வணங்குகிறான்..தள்ளி நின்று கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து அவனைத் தூக்குகிறார்கள்...தம்பி நீங்கள்..என்று கேட்டுவிட்டு...நான் தான் இளசை அருணா என்ற கம்பீரக் குரல்கேட்டு...தேம்பித்தேம்பி அழுதவனுக்கு முதலில் ஒரு கோப்பைத் தேனீரை நீட்டிய கரங்கள் பாரதியின் பால்ய நண்பர் கவியோகி சுத்தானந்த பாரதியினுடையவை...அந்தப் பெரியவரை விழுந்து வணங்குகிறான் மீண்டுமொருமுறை..
வரிசையாய்க் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்...அச்சிறுவனை மேடைக்கு அழைக்கிறார்கள்...எல்லோரும் மேடையையே பார்க்கிறார்கள்..
மேடையில் ஒரு ஓவியமாய் வரையப்பட்டிருந்த அந்த மஹாகவி..அன்று அதீத ஆனந்தமாய்க் காணப்பட்டார்...
தொடர்வண்டிச் சித்தன்
விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு
கருத்து

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...