Wednesday, May 2, 2018

தார்பூட்ஸ்கள்

நேற்று இரவு ஒரு பின் நவீன கவிதையை நேரடியாக தட்டச்சு செய்யும் போது மின்சாரம் துண்டிக்கப்பட எல்லாம் ஒரு நொடியில் காணாமல் போனது...கவிதை மறைந்த பொழுதில் தொடங்கிய கோடைமழை குளிர் இரவொன்றைக் கொண்டுதர...எனது மனம்முழுவதும் கனம்...ஒரு கவிதையை இழந்ததன் வலி கவிஞனே அறிவான்...என்னைக் கவியே என்று கவிதாயினி பெருந்தேவி குறிப்பிட்டதால் கவிஞன் என்று தற்காலிகமாக ..ஒரு குறியீடாக..பதிகிறேன்..மற்றபடி நான் கவிஞனல்ல...அந்தக் கவிதையின் எஞ்சி நிற்கும் ஒரு சில வரிகளை இங்கே பதிகிறேன்...
கோடையின்
காலாதீத சாலையில்
எனது பூட்ஸ்கால்கள் முழுதும்
திடதிரவ தார்
சுரண்டிவிட முடியாத வலியுடன்..
ஒரு புறம்போக்கில்
பிறந்தவனுக்கான
பூட்ஸ்களை
புறவழிச் சாலையிடும்
கொதியந்திரங்கள்
பாதுகைப்புனிதமாய்
பரிசளிக்கின்றன..
வாழ் நாளின் வெப்பவழியெங்கும்
முளைவிடும்
புங்க மரக் குழந்தைகளின்
பிணத்தின் மீதுதான்
எனது பாதச் சுவடுகளை
இறுகிக்கொண்டிருக்கும்
தார் திடதிரவத்தில்
பதிக்கிறேன்..
முழங்கால் உயரமுள்ள
எனது பூட்ஸுக்குள்
வியர்வைக்கடலின்
தேர்ந்தெடுக்கப்பட்ட
அலைகள்
உள்ளங்கால்களைக்
குறுகுறுக்கச்செய்யும்..
ஓய்வின் உச்சிவெயிலில்
யந்திரத்தினடி நிழலில்
நீண்டு வெளுத்திருக்கும்
வியர்வைஒட்டிய
பாதங்களின் மேல்
என் முதலாளியின்
கூர் அம்புகள் பாய்ச்சப்படும்
தேவ வேளையொன்றில்
சரயூ நதிக்கரையில்
கண்ணணாக நான் கரைந்துபோவேன்..
நீங்கள் விரைவுச் சாலயில்
விரைந்து சென்றுவிடுங்கள்..
வெயில் அதிகம்..
என் பாதம் பதிந்த
சாலைப்பள்ளத்தில்
ஏறி இறங்கும்
வாகன அதிர்வுகளால்
உங்கள் உறக்கம் கலைந்தால்
என் வியர்வைக் கடலலை
உங்கள் பாதத்தினடியில்
காலத்தை
உருவிச்செல்வதை
நீங்கள் உணரலாம்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...