Tuesday, May 8, 2018

தொட்டிப்பாலம்

நான் அந்த பாலத்தைச் சுமக்கிறேன்...
நேற்றிலிருந்து அது என் தோளில் தொற்றிக்கொண்டிருக்கிறது..
இரண்டு மலைகளை இணைத்தபடி
மூவாயிரம் அடி உயரத்தில் இருந்தது..
அதன் மீது மனிதர்கள்
தங்களின் உயரத்தை சிலாகித்தபடி
வியப்பின் அளவுகோலை
சுயமியெடுத்தபடியிருந்தார்கள்..
இந்தப்பாலம் மனிதர்களை
இணைக்கப்போவதில்லை..
காவிரிவிவசாயியின் வயிறென
அமிழ்ந்து கிடந்தது பள்ளத்தாக்கு..
ஆங்கே ஒரு நதி வறுமைக்கோடாய்
கண்ணுக்குத் தெரிந்தது..
சீவியெறிந்த அன்னாசிப்பழ கொண்டைக்குவியலின்
பின்பக்கம் நின்றபடி
நுழைவுச் சீட்டு விற்பவன்
என் தோளில் கிடக்கும்
பாலத்தை விற்றுக்கொண்டிருந்தான்..
பாலத்தை இறக்கி வைத்தால்ஒரு குழந்தையின்
வன்புணர்வுக்கான
நுழைவுச்சீட்டை விற்க முற்படுவான்
ஏலம் எடுத்திருக்கும்
அரசியல் குத்தகைக்காரன்..

நுழைவுத்தேர்வுக்காக
மகளுடன் கடவுளின்
நாட்டில் கால்வைத்தபோதுதான்
அந்த பாலத்தைச் சுமக்க நேரிட்டது..
மகள் சொல்கிறாள்..
உனக்கு மாரடைப்பு வருவதற்குள்..
என் தோடுகளை
அணிந்து கொண்டுவிடுவேன்..
நிச்சயம் மருத்துவராகிவிடுவேன்..
பாலத்தை இறக்கிவை...
உன்னால்
நிச்சயம் கவிஞனாகமுடியாது...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...