Tuesday, July 18, 2023

 பின் நவீன அரசியல் கவிதைகள்…1

ஒரு சிட்டுக் குருவி
பரணில் தொங்கிக் கொண்டிருக்கும்
என் உணவு வழங்கல் அட்டையில்
கூடு கட்டத் தொடங்குகிறது…
அது தனது தகுதியற்ற அலகால்
ஆயிரம் உரூபாய்களை
சுமப்பதற்கான ஒத்திகை முயற்சியில்
அமர்வதும் பறப்பதும்
வைக்கோல் பிசிறொன்றை
ஆனந்தமாய் உட் செருகுவதுமாய்
என்னை வசீகரிக்கிறது…
மின்சாரக் கம்பிகளில் அமர்ந்து
பிறகென் பரண் மேல் அமரும்
குருவி மாயத்தால்
என் உடலெங்கும்
ஆயிரம் ரூபாய் மின்னழுத்தம்
ஒளிரல் தருகிறது…
ஒற்றை ஆயிரம் உரூபாய்த் தாள்
எப்போதோ உயிர் துறந்ததால்
இரண்டு ஐந்நூறு தாள்களை
உள் வாங்கக் காத்திருக்கும்
குடும்ப அட்டை விட்டத்தில்
குருவி சற்று நேரம் அமர்ந்து
விருட் விருட் டென
உயிர்ச் சிறகடித்து உசுப்புகிறது…
சிட்டுக் குருவிகளின்
அழிவின் காலத்திலா
ஆயிரம் உரூபாய்களுக்கான
உரிமையின் காலம்
தொடங்க வேண்டும்…
என் தகுதிக்கான
உலர் வைக்கோல் பொய்யொன்றை
என் பிரமாண பத்திர மார்புகளின்
நடுவில் வெளித் தெரியும் படி
செருகி வைக்கிறேன்…
தகுதிக்கான விண்ணப்பக் கேள்வி காகங்கள்
என்னொத்த சீதாப்பெண்களின்
மார்பின் வைக்கோல்பிரிகளின்
தரம் பிரிக்க
கொத்திக் குதறுகின்றன…
குருவி அமர
உதிரம் சொட்டும்
என் பரண் மட்டுமல்ல
இப்போதென்
மார்பும் இரண்டாய் பிளந்து கிடக்கிறது…
விண்ணப்ப வைக்கோல் பிரிகளும்
பஞ்சும் பஞ்சமும்
நிரப்பிய பிரமாண பத்திர
சுமை தாங்க முடியாமல்
பறந்து சென்ற
மீதிக்குருவிகள் மின் கம்பிகளில்
இளைப்பாறத் தொடங்குகின்றன…
காகங்கள் வழமை போல்
உரிமைகளை தின்ற பின்னும்
கத்திக்கொண்டிருக்கின்றன…
என் குருவியை
தாங்கும் தகுதியற்ற
என் விட்ட அட்டையின்
கூட்டிற்குள்ளா
புயல் வீசவேண்டும்…?
மின் கம்பியில் அமரும்
தகுதியிருக்கும் குருவி கட்டிய
கூட்டிற்கான
நிரூபணம் தேவைதானா..?
என்னிடம் ஆயிரம் உரூபாய்க்கான
தகுதியில்லாமல் போகலாம்…
ஆனால்
என் குருவியிடம்
சிறகுகளும்
என்னிடம் ஓட்டுரிமையும்
மின் கம்பிக்குள்
மாற்றத்திற்கான நெருப்பும்
எப்போதும் இருப்பதை
இந்த அரசு
இப்போதாவது அறியுமோ…?
ராகவபிரியன்
பறவை மற்றும் , ’IE HOW BIRDS DEFY ELECTRICITY?’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

Sunday, June 18, 2023

 பின் நவீன பிற்போக்கு சிறப்புச் சிறுகதைகள்…

4…பரிணாமம்
ராம்பாபு மனைவியுடன் புத்தம் புதிய கேஸ் ஸ்டவ் வாங்கத்தான் மங்கள் அண்ட் மங்கள் வந்திருக்கிறான்…எம் அண்ட் எம் திருச்சியில் மிகப்பெரிய ஷோரூம்…அதில் கிடைக்காத பொருள்களே இல்லை…அறுபதைக் கடந்து முப்பத்தைந்தாண்டு மணவாழ்வை கண்ட ராம்பாபுவிற்கு புதிய கேஸ் அடுப்பு வாங்க மனமில்லை…பழைய முப்பத்து நான்கு ஆண்டுகளாய் உபயோகத்தில் இருக்கும் அடுப்பை மாற்றிக் கொள்ளவும் மனமில்லை…மனைவியின் பிடிவாதத்தால் தான் இதோ வந்திருக்கிறான்…பழைய அடுப்பு புழுதி படிந்து பரணில் கிடத்தப்படுவதை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை…
விதவிதமான இரண்டு பர்ணர் மூன்று நான்கு பர்ணர்கள் என வித்தியாசமான டிசைன்களில் அடுப்புகளை விற்பனைப் பெண் அழகான தமிழாங்கிலத்தில் விவரிக்க விவரிக்க மனைவியின் கண்கள் அவ்வளவு பெரிதாக ஆர்வம் காட்டின…இது போன்ற ஆர்வத்தை அவன் மனைவியின் கண்களில் பார்த்ததே இல்லை…
ஏன் ராம்பாபுவின் அம்மா முதன் முதலில் சுடுமண் அடுப்பொன்றை கிராமத்துச் சந்தையில் ஐம்பதாண்டுகளுக்கு முன் வாங்கும் போது கூட இவ்வளவு ஆர்வத்தைக் காட்டவில்லை…
ராம்பாபுவும் அண்ணனும் ரயில்வே லயண் கரையோர காட்டுக் கருவேல முட்செடிகளை வெட்டி இழுத்து வந்து கொல்லையில் பச்சை நிறம் மஞ்சளாகும் வரை காயப்போட்டுவிடுவார்கள்…தினமும் காலையில் காய்ந்து கிடக்கும் கருவேல முட் குச்சிகளை சாணளவிற்கு வெட்டி சிப்பம் சிப்பமாய் அடுக்குவான் ராம்பாபு…பிறகு அண்ணன் கூப்பிடும் போது அவனுடைய அதிகாரத்திற்கு கட்டுப் பட்டு உடனே முள் வெட்ட புறப்பட்டாக வேண்டும்…இவர்கள் வருவதற்குள் அம்மா மூன்று செங்கல் முக்கோணமாய் வைத்த அடுப்பில் அரிசி குருணை கலந்த கஞ்சியொன்றை காய்ச்சுவார்கள்…முள் குச்சி சிப்பம் பத்து பதினைந்து செல்வாகிவிடும்…அம்மாவின் கையிலெல்லாம் முள்கிழித்த கோடுகளின் ரத்தம் சிவப்பாய் காய்ந்து பொருக்குத் தட்டியிருக்கும்… வீடு முழுவதும் புகை நீண்ட நேரம் தங்கிக் கிடக்கும்…கஞ்சியை வாயருகே கொண்டு செல்லும் போது புகை வாடையடிக்கும்…
பிறகொரு நாள் அம்மா சந்தைக்குக் கிளம்பினாள்…அண்ணனும் கிளம்பியிருக்க டேய் ராம்பாபுவையும் கூட்டிண்டு போலாம்டா…எனச் சொன்ன அம்மாவின் வார்த்தைகள் அவனுக்கு குதூகலத்தைத் தந்தது…ஆனால் அண்ணனுக்குப் பிடிக்கவில்லை…சந்தையில் மண் அடுப்புடன் இணைந்த கொதி உளை அடுப்பொன்றை அம்மா வாங்கினாள்…கஞ்சியுடன் ஒரே சமயத்தில் ரசமும் வைத்துவிடலாம் என்றாள்…முள்குச்சி சிப்பம் ரசத்திற்காக தனியாக எரிக்கத் தேவையில்லை என்றாள்…அப்போது அம்மாவின் கண்களில் கொஞ்சமாய் ஆர்வம் காய்ந்த சிறு குச்சியின் முனையில் எரியும் நெருப்புப் பிழம்பு கதகளி ஆடியதை ராம்பாபுவால் பார்க்க முடிந்தது…
அண்ணன் வேலைக்குப் போகத் தொடங்கினான்…முள் குச்சிகளை வெட்டி வர இப்போதெல்லாம் ராம்பாபு போவதில்லை…ரயில்வே லயண் கரையோரம் மாலையில் நடக்கும் போது சிலர் முள் வெட்டி இழுத்துப் போன தடயங்கள் இருக்கும்…அங்கே சிதறிக் கிடக்கும் ஒன்றிரண்டு முட்களை எடுத்து தூர எறிந்திருக்கிறான்…பழைய நினைவுகளை வீசினால் அவை மெதுவாகத்தான் எட்டிப் போய் விழுகின்றன என நினைத்துக் கொள்வான்...
வீட்டில் ஸ்டவ் புதிதாக வந்திருந்தது…குமுட்டியும் ஒன்று அம்மா வாங்கியிருந்தாள்…தம்பி தங்கைகள் மாறி மாறி குமுட்டிக்கு விசிறுவார்கள்…பால் காய்ச்சும் பாத்திரத்தின் உள்ளில் வறுமை கொதிக்கும்…அடியில் எரியும் தக தக நெருப்பு அம்மாவின் கண்களாய் தெரியும் ராம்பாபுவிற்கு…டப் பென சின்ன வெடிச்சப்தமும் சில பறக்கும் நெருப்புத் துகள்களும் கொஞ்சமாய் அவனை பரவசப் படுத்தும்…அவசர காலங்களில் ஸ்டவ்விற்கு அவ்வப்போது திரி மாற்றி மண்ணெண்னெய் ஊற்றி பற்றவைத்து சாதம் வடிப்பாள் அம்மா...சாப்பிடும் போது மண்ணெண்னெய் வாடை வருவதால் நிறைய சாப்பாடு எவ்வளோ நாட்கள் மீந்திருந்திருந்திருக்கிறது…
விறகடுப்பிற்கான வரட்டியும் சவுக்குக் குச்சிகளும் ராம்பாபு தான் வாங்கி வரவேண்டும்…மண்ணெண்னெய் அப்போதெல்லாம் ரேஷனில் ஐந்து லிட்டர் தான் தருவார்கள்…
மண்ணெண்னெய் கரி விறகு எல்லாம் தீர்ந்து போயிருந்த காலையில் எல்லாம் அண்ணன் கத்திக் கொண்டே இருப்பான்…ராம்பாபுவை திட்டித் தீர்ப்பான்…
தொரை டெய்லி ஊர் சுத்துவாரு…வந்து வகை வகையா கொட்டிப்பாரு…ஆனா வெறகு வாங்கிட்டு வந்தா கெளரவ கொறைச்சல்….எனச் சொல்லியபடியே இரண்டு ரூபாய்களை அம்மாவிடம் கொடுப்பான்…கையாலாகாத அப்பன் வீட்டின் ஏதோ ஒரு மூலையில் தூங்கிக் கொண்டே இருப்பான்…
ராம்பாபு கொஞ்சம் போய்ட்டு வாடா…ஒரு கிலோ சவுக்கு ஒன்னார் ரூபாதாண்டா… என்று அம்மா கெஞ்சுவார்கள்…
ராம்பாபுவிற்கு இரண்டு சவுக்குக் குச்சிகளை மடங்கிய இரண்டு கைகளிலும் தூக்கி வீதி வழியே வருவது அவமானமாயிருக்கும்…திடீரென ஒரு நாள் பிள்ளையின் அவமானத்தைத் துடைக்க முடிவெடுத்தாள் அம்மா…
அண்ணனிடம் சொல்லி மரத்தூள் அடுப்பொன்றை வாங்கி வரச் செய்தாள்…அடுத்த சில வருடங்கள் மரத்தூள் வாங்க முப்பது நாற்பது கிலோமீட்டர்கள் சைக்கிள் மிதிப்பான் ராம்பாபு…
ஏழைத் தமிழ்க் குடும்பத்தின் சமையலுக்கான அடுப்பின் புரட்சி தொடங்கியிருந்த காலம் அது….கேஸ் இணைப்புகள் பெரும்பாலான வீடுகளுக்கு கொடுக்கத் தொடங்கியிருந்த காலம்…அண்ணனிடம் கெஞ்சி ஒருவழியாய் ரேஷன் கார்டு தட்டச்சுக் காப்பியொன்றை எடுத்துக் கொண்டு ராம்பாபுவையும் அழைத்துக் கொண்டு கேஸ் ஏஜென்ஸிக்கு வந்தாள் அம்மா…
தட்டச்சுக் காப்பியின் கீழே கெஸடட் ஆபீஸர் கையெழுத்து வேண்டும் எனச் சொல்லி இரண்டு நாட்கள் அலையவிட்டு ஒருவழியாய் ஒரு கனெக்ஷன் கொடுத்தார்கள்…கேஸ் அடுப்பும் கம்பெனிதான் கொடுக்குமாம்…இரண்டு பர்ணர்கள் வைத்த அடுப்பு….
பத்து உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு பத்து நாட்கள் கூட சிலிண்டர் வராது…அடுத்த சிலிண்டருக்காக கம்பெனியில் பதிவு செய்ய வேண்டும்…அது வரும் வரை மீண்டும் வீடெல்லாம் புகை சூழ்ந்து இருண்டு கிடக்கும்…
ராம்பாபுவிற்கும் வேலை கிடைக்க இரண்டாவது சிலிண்டரும் கிடைத்தது…
அண்ணனுக்கும் சில தங்கைகளுக்கும் திருமணம் ஆகிவிட…சிலிண்டர் இருபது நாட்கள் வரை தாக்குப் பிடிக்கத் தொடங்கியது…ஆனால் அண்ணனால் தம்பியிடமிருந்து கிடைக்கும் வருமாணம் போதாமல் இருப்பதால் குடும்ப ஒற்றுமை நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது…பர்ணர்களில் ஏற்றப்படும் தீ குடும்பத்தின் எல்லோர் இதயங்களிலும் நிரந்தரமாக எரியத் தொடங்கியது…
அணைக்கவே முடியாத ஒரு சுபயோக சுப தினத்தில் ராம்பாபு கையில் அவனுடைய மற்றும் மனைவியினுடைய துணிமணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்…அப்போது அம்மாவின் கண்களின் கோபம் எல்லா அடுப்புகளில் இருந்தும் எழுந்த ஊழித் தீயென எழுவதை ராம்பாபு பார்த்தான்…
தனிக் குடித்தனத்தின் முதல் நாள் காலையில் தான் உறைத்தது சமைப்பதற்காக அடுப்பெதுவும் இல்லையென்பது…ஓடிச் சென்று ஸ்டவ் வாங்கி வந்தான்…வெளி மார்க்கெட்டில் இருந்து மண்ணெண்னெய் வாங்கித் தாளவில்லை…வாடகை வீட்டின் சொந்தக்காரர் புகை சுவற்றில் படியுமென்பதால் விறகடுப்பு உபயோகப்படுத்தக் கூடாதென்று கண்டித்துவிட்டார்…
கேஸ் கனெக்ஷனுக்காக ஏனென்ஸியை அணுகிய போது ரேஷன் கார்டு கேட்டார்கள்… தனி ரேஷன் கார்டு வாங்க ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது ராம்பாபுவிற்கு…அதற்குள் ஒரு நாள் சுவிதா ஜே எனும் வணிக பயன்பாட்டு கேஸ் கனெக்ஷன் அதிக விலை கொடுத்து வாங்கி ஆகச் சிறிய சிலிண்டர் ஒன்றையும் தூக்கி வந்தான் ராம்பாபு…அப்போது அவர்கள் கொடுத்த அந்த முதல் கேஸ் ஸ்டவ்வைத்தான் வரலாற்றுச் சின்னமாய் இன்று மாற்றிவிடத் துடிக்கிறாள் அவனின் மனைவி…
அதை பரணில் போடவோ மாற்றி வேறொன்றை வாங்கவோ மனமில்லை அவனுக்கு…திக்கற்று சமைக்க வழியற்ற நாளொன்றில் வாரது வந்த மாமணியான அந்த கேஸ் ஸ்டவ்வை தோற்க தயாரில்லை அவன்…
மனைவி ஷோ ரூமில் மின்னிக் கொண்டிருக்கும் ஸ்டவ்களை ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் சுவற்றில் மாட்டிய சிசிடிவி யின் பிம்பங்களை பார்த்துக் கொண்டிருந்தான் பாபு…தரைத் தளத்தில் இருக்கும் எஸ்கலேட்டரில் அண்ணனும் அண்ணியும் மேலேறி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தவன்…மனைவியிடம்…வா…நேரமாயிடுச்சு…நாளைக்கு வந்து வாங்கிக்கலாம் என்று சொல்லியபடியே அவளை இழுத்துக் கொண்டு படி வழியாக இறங்கி ஏறக் குறைய ஓடத்துவங்கினான்…
கொஞ்சம் நில்லுங்க…என்று மனைவி சொல்ல…அவளின் கண்களைப் பார்த்தான்…சிலிண்டர் கனெக்ஷன் எதுவும் இல்லாமல் ஆயிரம் பர்ணர்களில் இருந்து தீப் பிழம்புகள் சிவப்பு கலந்த நீல நிறத்தில் வளையம் வளையமாய் பற்றி எரிவதைப் பார்க்க முடிந்தது…நீங்களும் கூட தீயின் நிறத்தை இப்போது பார்க்கலாம்…
ராகவபிரியன்
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Wednesday, June 14, 2023

 யானை விழா

------------------
விழாவிற்கான
வாழ்வின் திடலெங்கும்
யுகங்களாய் மண்டியிருக்கும்
எருக்கஞ்செடிகளினூடே
அலைந்து கொண்டிருக்கிறது
வறுமை யானை...
புதர் அகற்றுகையில்
ஆக்ரோஷமாய் துரத்தும்
யானை
வெளியேற்றிய கழிவெச்சங்கள்
அள்ளப்பட முடியாத
துர் நாற்றமென
சுழன்றடிக்கிறது...
தொடர் கடன் வேட்டுகளிலும்
தற்காலிகமாய் தருவித்த
வளமை கும்கிகளின்
தந்தத் தாக்குதல்களிலும்
அடிபணிய மறுத்து
பிளிறியபடி
இங்குமங்கும்
பயந்தோடிய
பயங்கர யானை
என் குடிசைக்குள்
புகுந்து
வெளியேற மறுக்கிறது...
விழாவில்
சீர் தட்டேந்தி வர
தயாராகவிருந்த
செயற்கையழகு தேவதைகள்
யானையைச் சுமந்து வருகையில்
வேடிக்கைப் பார்க்கும்
கூட்டங்களும் சொந்தங்களும்
ஓடி ஒளிந்து கொள்ளுவதைக் காண
கண்கோடி வேண்டும்...
விழாவின் வாசலில்
வறுமையானையை
ஆடாமல்
எப்படி நிறுத்தி வைப்பதெனும்
திட்டத்திற்கான
மந்திரி சபைக் கூட்டம்
இன்னும் முடியவேவில்லை...
கெட்டி மேள
மங்கலப் பொழுதில்
பயங்கரமாய்
தும்பிக்கைத் தூக்கி
அது பிளிறித் தொலைக்காமல்
இருக்க வேண்டும்...
பரிமாறப் பட்ட
பாயச்சத்தில்
இல்லாத முந்திரியென
மிதக்கும் அவ்வானையை
அள்ளிய கரண்டி
உடைந்து போனதால்
சொந்தங்களுக்கிடையேயான
கலவரம் எந்நேரமும்
துவக்கப்படலாம்...
அவசர கால
அழைப்பை மதித்து
விழா அமைதிக்காக வந்த
காவல் துறை
யானையை விரட்ட
வனத்துறைக்கு தகவல் தந்துவிட்டு
வாளாவிருப்பதுதான்
யுகத்தின் மாபெரும் கொடுமை...
யானை இன்னமும்
பிளிறியபடி
வாழ்வின் விழாதிடலெங்கும்
நிறுத்தப்பட்டிருந்த
வாகனங்களைச் சாய்தும் புரட்டியும்
தோரணங்களைக் கிழித்தும்
ஆக்ரோஷமாய்
அலைந்து கொண்டிருக்கிறது...
வன[ள]த்துறையினர்
வந்தால்
பிடித்துவிடுவார்களா....
இல்லை
மீண்டும் என் குடிசைக்குள்ளேயே
நிரந்தர சங்கிலியால்
கட்டி வைத்து விடுவார்களா...?
ராகவபிரியன்
யானை இன் படமாக இருக்கக்கூடும்

Tuesday, June 13, 2023

 பின் நவீன பிற்போக்கு சிறப்புச் சிறுகதைகள்…

3.நரம்பியல்
-----------------------
ராம்பாபு அவனின் அண்ணன் மற்றும் அண்ணன் மகன் மூவரும் மஹாத்மா காந்தி மெடிக்கல் காலேஜில் அண்ணன் மகனுக்கு எம்பிபிஎஸ் சீட் டிற்காக அதன் டீனை சந்திக்கக் காத்திருக்கிறார்கள்…அப்போதெல்லாம் நீட் தேர்வு கிடையாது…ப்ளஸ் டூ மார்க் மட்டும் தான்…இருந்தாலும் அண்ணன் மகனுக்கு போதிய கட் ஆப் இல்லை…அவர்கள் முற்படுத்தப்பட்ட ஜாதி என்பதால் ஒப்பன் காம்பெடிஷன் சீட் கண்டிப்பாக கிடைக்காது…மேனேஜ்மெண்ட கோட்டாவில் ஒரு சீட் கேட்டுப் பார்க்கத்தான் இப்போது காத்திருக்கிறார்கள்…
அருகிருந்த நரம்பிலை மரத்தின் சிகப்பு இலைகள் உதிர்ந்து ஒன்றிரண்டு அவர்கள் அமர்ந்திருக்கும் வராண்டாவில் மெல்ல காற்றில் ஊர்ந்து காலின் பின்பக்கம் சேர்ந்து கொண்டது…ராம்பாபு ஒரு இலையை எடுத்து அதன் சிவந்த நரம்புகளை மெல்ல பிய்க்கத் தொடங்கினான்…ஊரிலிருந்து காலையில் புறப்பட்டு இதோ இலை பிய்க்கும் இந்த நொடிவரை அண்ணன் மெளனமாகவே தலை குனிந்து அமர்ந்திருக்கிறான்…
அண்ணனின் மனைவி அதாவது அண்ணி நல்ல வேலையில் இருக்கிறார்கள்…கை நிறைய சம்பளம்…அண்ணன் குடும்பத்தின் மூத்தவன் என்பதால் தனது கடமைகளை நிறைவேற்ற வேலை பார்க்கும் பெண் தான் மனைவியாய் வரவேண்டுமென அண்ணியை மணம் செய்து கொண்டான்…அண்ணன் வேலைக்குப் போவதற்கு முன்பெல்லாம் பள்ளி வயதுகளில் ராம்பாபுவும் அண்ணனும் வீட்டில் சமைக்க அரிசி இல்லாத நாட்களில் ஒருகிலோ அரிசி கடனாக கேட்டு பாண்டி சண்முகம் எனும் மீசை வைத்த வட்டி மஸ்தான் வீட்டு வாசலில் நின்றிருக்கிறார்கள்…
எங்கடா வந்தீங்க…மஸ்தானின் குரல் பயமுறுத்தும்…
அரிசி வாங்கிட்டு வரச் சொன்னாங்க…ராம்பாபுவின் குரல் சன்னமாய் ஒலிக்கும்…ஏண்டா போக்கத்தவங்களா…ஒங்க ஒதவாக்கரை அப்பனை வரச் சொல்லுங்க…போனமாசம் பத்து கிலோ வாங்கித் தின்னுருக்கீங்க…இன்னும் பணம் வரல…போங்கடா போய் பணம் வாங்கிட்டு வாங்க…என எத்தனையோ நாட்கள் விரட்டபட்ட ஆறாக் காயத்தால் ஒரு ரூபாய்கூட அண்ணன் அனாவசியமாய் செலவு செய்ய மாட்டான்…
ராம்பாபுவும் வேலைக்குப் போக தொடங்கியதிலிருந்து அண்ணியின் சம்பளத்தின் பெரும்பகுதியும் அண்ணனின் சேமிப்பில் சேர்ந்து வளரத் தொடங்கியது…ராம்பாபுவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த போது அண்ணன் வேலை பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள் எனச் சொல்ல…
வேண்டாண்டா…குடும்பத்தையும் கொழந்தைகளையும் பார்க்கறதே கஷ்டம்…இதுல வேலைக்கும் போய்ட்டு வந்தா…அந்தப் பெண்பாவம் நம்மள சும்மா விடாதுடா…தோ அண்ணிய பாரு…காலையில அஞ்சு மணி வாக்குல எழுந்து துணி துவைச்சு சமைச்சு அவசர அவசரமா சாப்டாம கூட ஆபீஸ் போய் …அங்க மாடா ஒழைச்சு…சாயங்காலம் வந்தா அப்புடியே அக்கடா ன்னு ஒன்னையும் என்னையும் மாதிரி ஒக்கார முடியுதா…காப்பி ராத்திரி சாப்பாடு எல்லாம் முடிஞ்சு அடுப்ப தொடைச்சுட்டு படுக்கும் போது எத்தனையோ நாள் நான் பார்த்திருக்கேன்…மணி பதினொன்னாயிருக்கு…ஒன்னோட பையனுக்கு வேற டெய்லி பாடம் சொல்லிவேற தராங்க…பாவம்டா அவங்க…நீ பண்ணுன தப்ப நான் பண்ணமாட்டேன்…
ராம்பாபு சொல்லி முடிக்கும் முன்பே தொடங்கிய விவாத சப்தம் மெல்ல பெரிதாகி அடிதடி அளவில் போய் நின்றது…ஏறக்குறைய ஒரு நாள் விட்டு ஒரு நாள் இது போல் விவாத அரங்குகள் களைகட்ட ராம்பாபுவிற்கும் அண்ணனுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே சென்றது…
ராம்பாபு வேலைக்குப் போய் சம்பாதிக்காத பெண்ணை திருமணம் செய்தவுடன் அண்ணனின் முகம் இந்த சிகப்பு இலைபோல நிரந்தர கோபத்தில் காட்சியளிக்கத் தொடங்கியது…
ராம்பாபு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது…ராம்பாபுவின் குழந்தைகள் ஏறக்குறைய அனாதையாக வளரத் தொடங்க ஏழ்மையில் விழுந்த ராம்பாபுவை தனது தம்பியாகவே அண்ணனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை…ஒரு முறை ராம்பாபு அவனது மகளை பொறியியல் படிப்பில் சேர்க்க போதிய பணம் இல்லாத போது அண்ணனிடம் வருகிறான்…
எவ்ளோடா பீஸ்…அண்ணன் அலட்சியமாய் கேட்கிறான்…
அம்பதாயிரத்துச் சொச்சம்னு சொல்றாங்க…ராம்பாபுவின் குரல் கொஞ்சம் நடுங்குகிறது…
ஒங்கிட்ட எவ்ளோ இருக்கு….
பத்து ரூபா வரைக்கும் ஏற்பாடு பண்ணலாம்டா…
ஏண்டா …பர்ஸ்ட் கிராஜுவேட்னு சொன்னா கவர்ன்மெண்ட் இருவதஞ்சாயிரம் தர்றாங்களாமே…அத க்ளெய்ம் பண்ணு…அப்பறம் இருபதாயிரம் எஜுகேஷன் லோன் போடு…என்ன….
என்னடா பேசற நீ…நீயும் நானும் ஏற்கனவே க்ராஜூவேட்ஸ்…அப்பறம் எப்படி அவள பர்ஸ்ட் க்ராஜூவேட்னு சொல்லி சேர்க்கறது…நாளைக்கு மாட்டிக் கிட்டோம்னா…ராம்பாபுவின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் விருட்டென்று எழுந்து சென்றுவிட்டான் அண்ணன்…
மரியாதைக்கு உள்ளே வா என்றோ காப்பி சாப்பிடுகிறாயா என்று கூட அங்கிருந்த அவனின் சொந்தங்கள் கேட்காதது பெருத்த அவமானமாக இருந்தது…
நேற்று திடீரென வீட்டிற்கு வந்தவன் எப்படியாவது அவனின் மகனை எம்பிபிஎஸ் சேர்த்தாக வேண்டும் என்று சொல்ல…ராம்பாபு அவனுடன் கல்லூரியில் படித்து தற்போது மஹாத்மா காந்தி மெடிக்கல் காலேஜ் பிடி வாத்தியாராய் இருக்கும் நண்பனை பிடித்து டீனுடன் பேசி இதோ இப்போது கல்லூரி வராண்டா வரை வந்திருக்கிறார்கள்…இது வரை மூவருமே தூங்கவில்லை…
சட் டென கதவு திறந்து ப்யூன் உள்ளே போங்கள் என்று சொல்கிறார்…உள்ளே டீன் கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார்…
பிடி சாரோடா ப்ரெண்டா நீங்க…என பேச்சைத் தொடங்க…
சார் இவன் என்னோட தம்பி…பிடி சாரோட ப்ரெண்ட்…இது என்னோட பையன்…இவன எம்பிபிஎஸ் படிக்க வைச்சு டாக்டராக்கனும்கறது தான் எங்களோட லட்சியம்… அண்ணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
பையனின் மார்க் ஷீட்டை பார்த்தவர் பைலை அப்படியே மூடி டேபிளில் வைத்தார்…
சார் கோவிச்சுக்காதீங்க…மேனேஜ்மெண்ட் சீட் ரெண்டு தான் மிச்சமிருக்கு… நேரடியாவே சொல்லிடறேனே…பிடி சார் கூட சொல்லிருப்பார்னு நெனைக்கிறேன்…ரெண்டு கோடி குடுத்துடுங்க…ஒன்னு இப்போ அட்வான்ஸ்…மீதிய அடுத்த நாலுவருஷம் பீஸ் கட்டும் போது இருவதஞ்சு இருவதஞ்சா குடுத்துடுங்க…ஓக்கேன்னா…ஆபீஸ்ல போய் காலேஜ் அட்மிஷன் பார்ம் வாங்கி பில் அப் பண்ணி கொண்டாங்க… என்று சொல்லிவிட்டு பதிலெதுவும் சொல்லாமல்…எழுந்து சென்றுவிட…
மூவரும் வெளியில் வந்தார்கள்…
பிய்த்துப் போட்ட நரம்பிலை பெஞ்சினடியில் சில முடிக் கற்றைகளைச் சுற்றிக் கொண்டு காற்றில் அவதையுடன் அலைந்து கொண்டிருந்தது…
அண்ணனால் இரண்டு கோடி கொடுக்க முடியும்…
பையனைப் பார்த்தான்…
சித்தப்பா…எம்பிபிஎஸ்ல்லாம் வேண்டாம் சித்தப்பா…நான் டிகிரியே படிக்கறேன்…என்று பரிதாபமாய் சொன்னதும்…அண்ணனுக்கு கடும் கோபம் வந்திருக்க வேண்டும்…
கீழே கிடந்த நரம்பிலைச் சருகை எடுத்து பிய்க்கத் தொடங்கினான்…
என்னடா ஆபீஸ் போய் அட்மிஷன் பார்ம் வாங்குவோமா…
என ராம்பாபு கேட்க…
இல்லடா இவன இனிமே நான் எந்த காலேஜ்லயும் சேர்க்கறதா இல்ல…ஒரு படி அரிசிக்காக மானத்த வித்து நான் பாண்டி சண்முகத்துக்கிட்ட கத்துக்கிட்ட பாடம்…எதை வேணாலும் யார வேணாலும் இழக்கலாம்...ஆனா...பணத்தை மட்டும் இழந்துடக் கூடாதுங்கறதுதான்…ரெண்டு கோடி என்ன சும்மா வருதுன்னு நெனைச்சானா…என அண்ணன் சொல்லிவிட்டு மீண்டும் மெளனமானான்…
மூவரும் கேண்டீனுக்கு வந்தார்கள்…
டீ சாப்டுவோமா…ராம்பாபு கேட்க…
அதுக்குத்தானே வந்துருக்கோம்…போய் மூனு டோக்கன் வாங்கிட்டு வா…என்ற அண்ணனிடம் தன்னிடம் டீ வாங்கக்கூட பணம் இல்லை என்பதை எப்படிச் சொல்வதென தெரியாமல் தயங்கினான் ராம்பாபு…
கேண்டீன் சுவற்றில்…
பகைவனுக்கருள்வாய் தின்ன வரும் புலி தன்னையும் சிந்தையில் போற்றிடுவாய்…பாரதியார்…
என்று எழுதியிருந்ததைப் படித்தபடி நின்றிருந்த அந்த நேரத்தில் நரம்பிலை ஒன்று காற்றில் ஆடி ஆடி ராம்பாபுவின் மேல் விழுந்தது…
ராகவபிரியன்
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...