Tuesday, November 26, 2019

தலை குனிந்தவர்களின்
குளக்கரையில்
அமர்ந்திருக்கிறேன்..
தாழ்வு மனப்பான்மையும்
சம்மட்டியடித் தோல்விகளும்
என்னை நீந்தச் சொல்லி
வற்புறுத்துகின்றன..
மிதக்கும் அழுகிய
ஏச்சுக்களின்
தென்னம்பழமொன்றின்
வாடையில்
அடைத்துக்கொள்கிறது
வீரம் தொலைத்த மூச்சு..
மெல்ல
அறிவு பொய்த்துப்போன
அவல உடைகளைக்
களைகிறேன்..
முழுதுமாய்த் தோற்றவனின்
உடல் நடுக்கம்
பாதங்களின்
ஊன்று மண்ணைப்
பறிக்கத் தொடங்க..
வழுக்கிக் குளத்தில் விழுகிறேன்..
தலைகுனிந்தவர்களின்
குளத்தில் நீந்தத் தெரிந்தால்
நீர்பரப்பின் மேல்
தலை நிமிர்ந்தே இருக்கும்...
ராகவபிரியன்

Tuesday, November 5, 2019

தொடர் வண்டிகள்
கால் நீவிக்கொள்ளும்
நிலையங்களில் தான்
அவசர அசுரனின்
உருவம் காணமுடியும்..
கழிப்பறையற்ற கிராம வீட்டின்
காவிரிக் கரை பட்டதாரியின்
காலை நரகலை மிதித்த
குளிக்காத கால்கள்
படித்துறையில் இறங்கும்
நொண்டல்அவசரம்..
காலைப் பசிக்கான
பொட்டலங்களை
சுற்றி இருக்கும்
முடியாத நூல் அவசரம்..
புதிதாக வாங்கிய பயணப்பெட்டியின்
சக்கரங்களைச் சுழல விடாத
சுமையான வாழ்வின் போதாக் கால
பொம்மையவசரம்..
கண்ணற்ற ஒருவனின்
அருமையான ராகத்துடன்
ஒட்டத்துடிக்கும்
வண்டி புறப்படும் முன்னான
அலுமினிய லோட்டாவின்
தப்பான தாள அவசரம்..
இத்தனையையும் கால் நீவியபடியே
கவனித்துக் கொண்டிருக்கிறது
புறப்படத் தயாரான
தொடர் வண்டியும்..
சில அருமையான புத்தகங்களையும்
தினசரிகளையும் அழகாக மாட்டிக்கொண்டு
ஒரு வாசக முகமாவது
தன் முகம் காணாதா
என ஏங்கியபடியேகால் நீவிக் காத்திருக்கும்
வண்டியினதும்
விற்பனையாளனதுமான
வசீகர அமைதி முகங்களும்..

அவசர அசுரனின் திருப்தியான
பார்வை ஏப்பத்தை
வெளியிட்டபடியே புறப்பட்டது வண்டி...
ராகவபிரியன்

Monday, November 4, 2019

இரண்டு நாட்களுக்கு முன்பு எனது மகிழுந்துவில் திருக்கோவிலூர் செல்லும் வழியில் பெரம்பலூர் கடந்த சில தொலைவில் உடும்பு ஒன்று தேசிய நெடுஞ்சாலையை வலமிருந்து இடமாக லாவகமாக கடந்து செல்கையில் எனது மகிழுந்துவின் சக்கரத்தில் சிக்கிய சப்தம் கேட்டது...கண்டிப்பாக உயிர் தப்பி அதன் மறுவாழ்விடம் சேர்ந்திருக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு பின் நவீன கவிதை உங்களுக்காக...அன்பன்..ராகவபிரியன்
உடும்புப் பிடியாய்
சில படிமங்கள்
என் சுவற்றின் மேல்
சில பூச்சிகளுக்காக
காத்திருக்கின்றன..
அதன் முதுகில்
கயிறு கட்டி
கோட்டைச் சுவர் மேல்
ஏறிவிட எத்தனிக்கிறேன்..
அதை வேட்டையாட
அதன் இறைச்சியால்
வயிற்று வலி போக்கிக்கொள்ள
ஈட்டியுடன்
சில அறிவு ஜீவிகள்
சுவரோரம்
எக்காலமும் காத்திருக்கிறார்கள்..
அதன் தோல் வேய்ந்த
இசை மேளச் சப்தம்
பற்றிக் கொண்டு
உலக நாடுகளின்
நடனச் சுவர்களில்
தத்தியேறியவர்களை
அறிவேன்..
ஏதோ ஒரு பொந்தில்
பதுங்கிக் கிடக்கும்
உடும்பு
பின் நவீன
தேசீய நெடுஞ்சாலையை
வாலாட்டியபடி
பம்மிக் கடக்க
பயண வெளி அதிரும்..
எனது பயணப் பார்வைகளில்
இதுவரை
சாலையில் அடிபட்டுக் கிடக்கும்
ஒரு உடும்பு உடல் கூட
படிமமாய் படுத்தியதில்லை..
பின் நவீனச் சாலைகளில்
இன்னும்
கனரக வாகனங்கள்
உடும்பெதையும்
சந்திக்கவுமில்லை...
ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...