ஒரு பனவனின் பால்ய நினைவுகள்...
குடும்பம் சமூகம் வெளிவட்டாரம் வாழ்வின் அயராத உழைப்பால் பெற்ற வெற்றியின் மீதான பொறாமை..அதனால் அருகிலிருப்போர் மறைமுகமாக நற்பெயருக்கு விளைவிக்கும் களங்கம்.. இவையெல்லாம் உள்மனதில் தோற்றுவிக்கும் நெருக்கடி நிலையின் தாக்குதல்களால் சில பால்ய நினைவுகளைப் பதிவுசெய்ய வேண்டியதாகிறது..
திருப்பறாய்த்துறையில் ஒரு மார்கழி மாதத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து திருப்பாவையை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறேன்...விடிந்தால் அதை ஒப்புவிக்கும் போட்டியில் வென்றால் ஒரு வெள்ளிக்காசும் ஒரு டம்ளர் ராகிமால்ட்டும் கிடைக்கும்..ஆழ்ந்து புத்தகத்தில் மூழ்கி பின் கண்மூடி வரிகளை மீளுருக்கொணரும் வேளை உஸ் எனும் சத்தம் கேட்க.. கண் திறந்தால் ஒரு நல்ல பாம்பு படமெடுத்து இங்கும் அங்கும் தலையைத் திருப்பியபடியிருக்கிறது..நொடியில் ஓட்டமாய்க்கீழிறங்கி சப்தமிட யாராரோ மாடியேறித் தேடுகிறார்கள்..பாம்பு கண்ணில் படவேயில்லை..
நிசப்தங்களுடனான ஒரு நள்ளிரவின் ஆழ்ந்த உறக்கம்...திருவாரூரின் தொடர்வண்டித் தொழிலாளர் குடியிருப்பில் ஆடிமாதக் காற்று கொணர்ந்து வீசிய குப்பைகள் குவிந்து கிடந்து...வினோத சப்தமெழுப்பிய தருணம் கண் திறக்க...அந்தச் சுவரோத்திலிருந்து புறப்பட்ட ராஜ நாகத்தின் மிக நீண்ட மெல்லிய ஊர்தலை மெளனமாய் பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்..பதற்றங்களும் அதன் துளிகளும் விடமென வேர்வைக்கால்களெங்கும் துளிர்க்க விழித்தே இருந்த இரவும் காலையில் அதைப் பிடிக்க நடந்த முயற்சிகளும்..இன்னமும் மனமெங்கும் ஊர்ந்திருப்பதை அரங்கன் அறிவான்..
திருச்சியில் அன்றைய செஞ்சோஸப் பள்ளியின்..சர்ச்சின் அருகில் ஒரு மலைப்பாம்பு சிறைப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்..
ஆறாமிடத்தில் ராகு இருந்தால் விஷ ஜந்துக்கள் அந்த ஜாதகன் இருக்கும் வரை கண்ணில் படாதென ஜோதிட சாஸ்திரங்கள் சொல்லியிருக்கின்றன..நாங்கள் உத்தியோகம் பார்த்த நிலையங்களில் நிறைய பாம்புகள் குடியிருந்தன...ஒரு உயரதிகாரி...பாம்பைக் கண்டால் நீங்கள் விரும்பிய ஊருக்கு மாற்றல் உத்தரவு வருமென்று கூறியதைக் கேட்டிருக்கிறேன்...எனது வாழ்வின் அனுபவ அறைகளில் பாம்பொன்று கண்ணில் பட்டால் விபரீதங்கள் நிகழ்ந்த வரலாற்றுப் படங்கள் மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்..
திருப்பாவை மனனம் செய்த மறு நாள் தான் அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி விஷம் வைத்து ருஷ்யாவில் கொல்லப்பட்ட செய்தி வர...திருப்பாவை போட்டி ரத்தாகி எனக்கான அன்றைய ராகிமால்ட் கிடைக்காமல் போனது உச்சகட்ட துரதிருஷ்ட்டத்தின் இறுதிக்காட்சியாகிப்போனது..
அரங்கனின் உக்கிரம் பற்றிய எனது எச்சரிக்கைகளைத் தவறாகவே சில தன்னல போலி தகுதியற்றவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்..அரங்கன் அறிவான்..இன்றும் கூட காலையில் அரங்கன் மாலைகள் அடங்கிய பையுடன் தன் கோவிலுக்கு வந்து நடை திறக்கப்படாத அதிர்வில் ஏமாற்றத்துடன் திரும்பியதை ஊர் அறியும்..காலை ஏழு மணி தாண்டியும் அரங்கன் சந்நிதி திறக்கப்படாமல் இருப்பதாலும்...அதனால் பக்தன் உருவில் வந்து சோதித்த அரங்கன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாலும்..அர்ச்சையின் உக்கிரம் பலமடங்கு அதிகரித்திருப்பதை உணர்ந்தால்...மிருஷ்ட்டா பூஜைகளை செய்ய வேண்டும் நியமங்களுடன் என்ற அரங்கனின் நேரடியான ஆணையிடல் நிகழ்வாகவே ஆன்மீக புத்தகத்தில் அது...பதிவாகியிருக்கிறது..தங்களின் தவறுகளை மறைக்க பிரச்சனையை திசை திருப்பும் முயற்சியும் அரங்கன் சந்நிதி முன்பாகவே வலிந்து நடத்தப்படுகிறது...
போற்றுவோர் போற்றட்டும் ..புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்..அரங்கன் கீதையில் சொன்ன உண்மைகளை உணர்ந்தவர்கள் அரங்கனின் உண்மையையும் உணர்வார்கள்...ஒரு சிலர் என்னை அரங்கன் என்று அழைத்து அரங்கனை அவமானப்படுத்துகிறார்கள்..நான் அரங்கனில்லை...ஒரு சாமான்ய ஆசாபாசங்கள் நிறைந்த சாதாரண பக்தன் அவ்வளவே..
ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் ஹ்ருதி ஸ்ர்வஸ்ய விஷ்டிதம்..
ஒளிகளுக்கெல்லாம் ஒளியான பரப்பிரம்மம் மாயைக்கு அப்பாற்பட்டது.. ஞானவடிவமானது அறியபடவேண்டிய அது தத்வ ஞானத்தினால் மட்டுமே புரியப்படும்..குறுகிய பார்வையும் தவறான கண்ணோட்டமும் பரப்பிரம்மம் எதிரில் இருந்தாலும் கண்ணை மறைத்துவிடும்...வயதும் அறிவும் அனுபவமும் உள்ள மஹா ஞானவான்களால் கூட புரிந்து கொள்ள முடியாத பரப்பிரம்மம் நிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட நிஜமான உயரமுடையது..அது எல்லோர் இதயத்திலும் மனதிலும் இருந்து மனசாட்சியென்ற பெயரிலும் போற்றப்படக்கூடியது...[என்னளவிலான பொருள்]
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
ராகவபிரியன்