Wednesday, May 30, 2018

Orbu...

எங்கள் வீட்டு செம்பருத்தி
பூத்துக் குலுங்கி
எறும்புகளை இறைத்துக்கொண்டிருக்கும்
ஒரு மத்தியான கொதிவேளையில் தான்
மழை நீர் தேங்கிக் கிடக்கும்
அந்த பழைய பெயிண்ட் டப்பாவை
யாருமே அப்புறப்படுத்தவில்லையென்ற
கோபம் என்னுள்
ஓர்கட்புள்[காகம்] எனக் கத்திக்கொண்டிருந்தது..
நூறாண்டு பழமையான ஒரு வீட்டிற்கு
பெயிண்ட் அடிக்கும் ஓர்பு
அவ்வளவு எளிதல்ல...
அதன் மிச்சங்களை சுமந்து
மழையின் மிச்சங்களையும் சுமந்துகொண்டு
அதே செம்பருத்தியினடியில்
எறும்புகளுக்காகவாவது
கொஞ்சம் தண்ணீரை மிச்சம் வைத்திருக்கிறது
பெயிண்ட் டப்பா...
மீந்த தண்ணீரைக் கொட்டிவிட்டு
அதைக் கழிவறைக்குக் கொடுக்கும்
ஒரு குச்சித்தல் செயலை
கிஞ்சித்தும் செய்ய மனம் வரவில்லை...
ராகவபிரியன்...
இது போன்ற பின் நவீன கவிதைகளை....யாராவது நோபல் கமிட்டிக்குப் பரிந்துரை செய்வீர்கள் என்ற நம்பிக்கையால் இன்னமும் எழுதிக்கொண்டிருக்கிறான் சாமான்ய பொதுஜனன்...

Monday, May 14, 2018

Red carpet Welcome

இப்போதைய ஆகச் சாதாரண வெறும் பிரபலம் என்பதால் அதிக லைக் வாங்கும் பாணியில் எழுதப்பட்ட ஒரு கவிதை..உங்களுக்காக...
எனது சமுதாய தரை விரிப்பிலிருந்து
மூன்று இடங்களைக் கத்தரிக்கிறேன்..
மூன்றிலும் இரத்தம் சிந்தப்பட்டு உறைந்திருக்கிறது..
நான்காவது இடத்தில் தான்
அதற்கு பயன் பட்ட கத்தியின் விளிம்பு
துடைக்கப்பட்டிருக்கிறது..
ஒரு கல்லூரியின் மாணவிகளில் சிலர்
பகடியிட்டு பாழ்கிணற்றில் வீசப்படும் முன்
சிந்திய இரத்தத் துகள்கள் முதலிடம்..
ஆணவக் கொலை செய்வதற்குமுன்
அனுபவிக்கப்பட்ட புதரின் அருகில்
மதுரை வீரனின் முகமெங்கும் தெறித்து மீந்த
குருதிப் புனலின் மிச்சங்கள் இரண்டாமிடம்..
குழந்தை கடத்தும் கும்பல் எனக்கூறி
கூறு போட்ட இன்னமும் காயாத மூன்றாமிடம்..
கத்தரித்த தரை விரிப்பில்
அரசியலும் பணமும் அச்சிட்ட
ஒட்டுப்போட்ட வழவழ விரிப்பாய்
மூன்றிடங்களில் ஒட்டித் தைக்கப்பட்ட
சிவப்புக் கம்பளமாய் மீண்டும் விரிக்கிறேன்..
இனி ரத்தம் சிந்தினாலும்
உங்களால் கண்டுபிடிக்க முடியாது...
இதுதான் சிவப்புக் கம்பள வரவேற்பென்பது..
ராகவபிரியன்

Tuesday, May 8, 2018

தொட்டிப்பாலம்

நான் அந்த பாலத்தைச் சுமக்கிறேன்...
நேற்றிலிருந்து அது என் தோளில் தொற்றிக்கொண்டிருக்கிறது..
இரண்டு மலைகளை இணைத்தபடி
மூவாயிரம் அடி உயரத்தில் இருந்தது..
அதன் மீது மனிதர்கள்
தங்களின் உயரத்தை சிலாகித்தபடி
வியப்பின் அளவுகோலை
சுயமியெடுத்தபடியிருந்தார்கள்..
இந்தப்பாலம் மனிதர்களை
இணைக்கப்போவதில்லை..
காவிரிவிவசாயியின் வயிறென
அமிழ்ந்து கிடந்தது பள்ளத்தாக்கு..
ஆங்கே ஒரு நதி வறுமைக்கோடாய்
கண்ணுக்குத் தெரிந்தது..
சீவியெறிந்த அன்னாசிப்பழ கொண்டைக்குவியலின்
பின்பக்கம் நின்றபடி
நுழைவுச் சீட்டு விற்பவன்
என் தோளில் கிடக்கும்
பாலத்தை விற்றுக்கொண்டிருந்தான்..
பாலத்தை இறக்கி வைத்தால்ஒரு குழந்தையின்
வன்புணர்வுக்கான
நுழைவுச்சீட்டை விற்க முற்படுவான்
ஏலம் எடுத்திருக்கும்
அரசியல் குத்தகைக்காரன்..

நுழைவுத்தேர்வுக்காக
மகளுடன் கடவுளின்
நாட்டில் கால்வைத்தபோதுதான்
அந்த பாலத்தைச் சுமக்க நேரிட்டது..
மகள் சொல்கிறாள்..
உனக்கு மாரடைப்பு வருவதற்குள்..
என் தோடுகளை
அணிந்து கொண்டுவிடுவேன்..
நிச்சயம் மருத்துவராகிவிடுவேன்..
பாலத்தை இறக்கிவை...
உன்னால்
நிச்சயம் கவிஞனாகமுடியாது...
ராகவபிரியன்

Wednesday, May 2, 2018

தார்பூட்ஸ்கள்

நேற்று இரவு ஒரு பின் நவீன கவிதையை நேரடியாக தட்டச்சு செய்யும் போது மின்சாரம் துண்டிக்கப்பட எல்லாம் ஒரு நொடியில் காணாமல் போனது...கவிதை மறைந்த பொழுதில் தொடங்கிய கோடைமழை குளிர் இரவொன்றைக் கொண்டுதர...எனது மனம்முழுவதும் கனம்...ஒரு கவிதையை இழந்ததன் வலி கவிஞனே அறிவான்...என்னைக் கவியே என்று கவிதாயினி பெருந்தேவி குறிப்பிட்டதால் கவிஞன் என்று தற்காலிகமாக ..ஒரு குறியீடாக..பதிகிறேன்..மற்றபடி நான் கவிஞனல்ல...அந்தக் கவிதையின் எஞ்சி நிற்கும் ஒரு சில வரிகளை இங்கே பதிகிறேன்...
கோடையின்
காலாதீத சாலையில்
எனது பூட்ஸ்கால்கள் முழுதும்
திடதிரவ தார்
சுரண்டிவிட முடியாத வலியுடன்..
ஒரு புறம்போக்கில்
பிறந்தவனுக்கான
பூட்ஸ்களை
புறவழிச் சாலையிடும்
கொதியந்திரங்கள்
பாதுகைப்புனிதமாய்
பரிசளிக்கின்றன..
வாழ் நாளின் வெப்பவழியெங்கும்
முளைவிடும்
புங்க மரக் குழந்தைகளின்
பிணத்தின் மீதுதான்
எனது பாதச் சுவடுகளை
இறுகிக்கொண்டிருக்கும்
தார் திடதிரவத்தில்
பதிக்கிறேன்..
முழங்கால் உயரமுள்ள
எனது பூட்ஸுக்குள்
வியர்வைக்கடலின்
தேர்ந்தெடுக்கப்பட்ட
அலைகள்
உள்ளங்கால்களைக்
குறுகுறுக்கச்செய்யும்..
ஓய்வின் உச்சிவெயிலில்
யந்திரத்தினடி நிழலில்
நீண்டு வெளுத்திருக்கும்
வியர்வைஒட்டிய
பாதங்களின் மேல்
என் முதலாளியின்
கூர் அம்புகள் பாய்ச்சப்படும்
தேவ வேளையொன்றில்
சரயூ நதிக்கரையில்
கண்ணணாக நான் கரைந்துபோவேன்..
நீங்கள் விரைவுச் சாலயில்
விரைந்து சென்றுவிடுங்கள்..
வெயில் அதிகம்..
என் பாதம் பதிந்த
சாலைப்பள்ளத்தில்
ஏறி இறங்கும்
வாகன அதிர்வுகளால்
உங்கள் உறக்கம் கலைந்தால்
என் வியர்வைக் கடலலை
உங்கள் பாதத்தினடியில்
காலத்தை
உருவிச்செல்வதை
நீங்கள் உணரலாம்...
ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...