Friday, March 9, 2018

உரத்துக் கேட்கும் உளி...

முப்பதாயிரம்
ஆண்டுகட்கு முந்தைய
முதல் சிற்பத்தின்
உடைந்த உளி நான்..
எனது கூர் மழுங்கிய
முகப்பாகம் ஒலியெழுப்புகிறது..
உலகின் மிக உயர புத்தனின்
முகம் செதுக்குகையில் தான்
சீன மொழியில் கதறிய படி..
நானூற்று இருபதடியிலிருந்து
விழுந்தேன்..
புத்தன் இன்றும்
கொஞ்சம் கொஞ்சமாய்
உடைந்து போகிறான்..
சுதந்திர தேவிச் சிலையை
இருளென உதிர்க்கத் தெரிந்தவர்களை
என் உடைந்த உளியால்
செதுக்கித் தருவேன்..
சப்தமின்றி...
கற்றளிகளும்
கடவுள்களும்
உலகின் அத்தனைச் சிலைகளும்
என் குரல் கேட்டு
வளர்ந்தவர்கள்...
நான் தாய்..
உங்கள் ஒப்பாரிகளுக்கு
அவர்கள் செவி சாய்ப்பதில்லை...
உங்களால்
அவர்களைச் சாய்த்துவிடவும் முடியாது...
சாய்ந்தாலும்
என் மடியில் உயிர்ப்பார்கள்..
ஆகச் சிறந்த கலை படைப்புகளை
கடலிலும் காவிரியிலும்
கரைக்கும் போது
நான் கதறி அழுவது
உங்கள் காதுகளில் விழுவதில்லை...
ஆப்கானிஸ்தானத்தில்
மண் சிற்பங்களை பெயர்த்தீர்கள்..
மண் உளிகளை
என் மடிகளை
காற்றில் தேடி களைத்துப் போகிறீர்கள்..
உலகெங்குமுள்ள
அத்தனைச் சிலைகளையும்
அகற்றிவிடுங்கள்..
அன்பையும் தாய்மையையும்..கூட...
அன்று
என் சப்தம் நிசப்தமாகும்..
உங்கள் சப்தம் தீர்ந்துபோகும் நாளிலும்
என் சப்தம் உரத்து
கேட்டுக் கொண்டே இருக்கும்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...