Wednesday, March 21, 2018

poem for the world poets

DEDICATED TO WORLD POETS ON THIS WORLD POET'S DAY
your poems
are the inspiration for poets
of this young 5g generation.
your writings
are the torches in the hands
of literary blinds in search of true poetry..
your chosen words
are the coated gold letters
inscribed on the walls of hearts..
your alphabets
are the tablets in colours
which will cure ..if swallowed
when the reader
is bereft of thoughts and juice
while walking in the desert of knowledge..
In thee my fellow poets
the future world of humanity
is to enjoy poetry in peace...
Ragavapriyan Thejeswi

Tuesday, March 20, 2018

சுந்தர ராமசாமியும் ராகவபிரியனும்

பெரும்பாலும் இலக்கிய சர்ச்சைகளை நான் தவிர்த்து வருகிறேன்...?ஆனால் எழுத்தாளர்கள் ஒரு பக்கமும் காலச்சுவடு கண்ணன் மறுபக்கமும் இருந்து வாள் வீசிக்கொண்டிருக்கும் இந்தக் கொலைக்களத்தில் நிராயுதபாணியாய் இப்போது நானும் நுழைகிறேன்...இது வரை ஒரே ஒரு ஆன்மிக விருத்தப்பாடல் புத்தகமொன்றை மட்டுமே வெளியிட்டு...ஏறகுறைய நாற்பது ஆண்டுகளாக ஒரு இலக்கிய புத்தகம் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறேன்...ஒரு முறை ஆசான் சுந்தர ராமசாமி அவர்களை பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் சந்தித்து எனது கவிதைப் புத்தகத்தை காலச்சுவட்டின் மூலம் வெளியிட வேண்டும் என்ற ஆவலைச் சொன்னபோது...உங்களின் முதல் புத்தகம் எங்களால்தான் வெளிவரும் என்று உறுதியளித்தார்...ஆனால் அரங்கன் திருவருள்...பிறகு அவரைச் சந்திக்கவே முடியவில்லை.....கடந்த ஆண்டு எனது சில தேர்ந்தெடுத்த கவிதைகளை காலச்சுவட்டிற்கு அனுப்பினேன்...நண்பர் கண்ணன் அவர்களிடமும் தொலைப்பேசியில் உரையாடினேன்...அவரின் அணுகு முறை நிதர்சனமாகவும் உண்மையாகவும் இருந்தது. கொஞ்சம் பொறுங்கள்...உங்கள் படைப்புகளையும் காலச்சுவடு வெளியிடும் என்றார்...இப்போதைய சர்ச்சையில் கண்ணனைக் குறை சொல்வதை ஏற்க முடிய வில்லை....தமிழ் எழுத்தாளர்களின் மேல்..அவர்களின் படைப்புகளின் மேல்..அவர்களின் வளர்ச்சியின் மேல் நண்பர் கண்ணனுக்கு இருக்கும் கவணமும் அக்கரையும் நான் அறிவேன்...ஆசான் சுந்தர ராமசாமி அவர்களால் வளர்க்கப்பட்டவர் கண்ணன்..என் படைப்புகளை அவர் வெளியிடப்போகிறாரா இல்லையா என்பதைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை...அதற்காகவும் இதை எழுதவில்லை...என் படைப்புகளின் ஊர்வலத்திற்கு அரங்கன் தலைமையேற்று வருவான் என்ற நம்பிக்கை யிருக்கிறது....நாளை எனது படைப்புகள் நாட்டுடமையாக்கப்படும் என்ற நம்பிக்கையும் உள்ளது....எது என்னைக் காயப்படுத்துகிறது...எனில்..ஜெயமோகனும் சோ.தருமனும் இன்ன பிறரும்...ஆசான் சுந்தர ராமசாமியாலும் காலச்சுவட்டாலும் தான் உலகறியப்பட்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே...தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்...கண்ணன் மறுபடியும் வெல்வார்....நண்பர்கள் மன்னிக்கவும்...அன்பன்...ராகவபிரியன்

Monday, March 12, 2018

கூடும் சுமை

ஒர் கூட்டுக்கான சுள்ளிபொறுக்கும்
தேன் சிட்டின்
அலகு சுமையாகிவிடுகிறது..
அதன் தெருக்களில்
பிரயாசைகள்
விரையும் வாகனங்களினடியில்
சிக்கிக் கிடக்கின்றன..
கூடென்பது கூடாத பொழுதுகளின்
பெருஞ்சுமை..
இறகும் அலகும் உரசும்
தெய்வீக கணங்களில்
கந்தர்வர்களின் நிழற்சாபம்
விட்டத்தின் இடுக்குகளில்
சுள்ளிகளாய்ச் சேர்கின்றன..
வீட்டுரிமையாளரின் விரட்டல்களில்
எங்கள் வாரிசின்
புறப்பாட்டிற்கான தூக்கம்
கலைகிறது..
சிறகடித்து அமரும்
கிளைகளை
காளவாயிலடுக்க
வெட்டிக் கொண்டிருக்கையில்..
உதிரும் சுள்ளிகளை
நாங்கள் உதாசீனப் படுத்துகிறோம்..
விட்டங்களற்ற
இன்றைய வீடுகளில்
எங்கள் சிறகின் புனிதசப்தத்தை
வீணடிப்பதில்லை..
எங்களின் ரகசிய பொழுதுகளில்
கூட்டிற்கான திட்டங்களை
ஒத்திவைத்து விடுகிறோம்..
எங்களை தடுக்கும்
கதவுகளை மூடிவிடுங்கள்..
கூடென்பது எங்களுக்கு மட்டுமல்ல
உங்களுக்கும் பெருஞ்சுமை...
ராகவபிரியன்

Friday, March 9, 2018

உரத்துக் கேட்கும் உளி...

முப்பதாயிரம்
ஆண்டுகட்கு முந்தைய
முதல் சிற்பத்தின்
உடைந்த உளி நான்..
எனது கூர் மழுங்கிய
முகப்பாகம் ஒலியெழுப்புகிறது..
உலகின் மிக உயர புத்தனின்
முகம் செதுக்குகையில் தான்
சீன மொழியில் கதறிய படி..
நானூற்று இருபதடியிலிருந்து
விழுந்தேன்..
புத்தன் இன்றும்
கொஞ்சம் கொஞ்சமாய்
உடைந்து போகிறான்..
சுதந்திர தேவிச் சிலையை
இருளென உதிர்க்கத் தெரிந்தவர்களை
என் உடைந்த உளியால்
செதுக்கித் தருவேன்..
சப்தமின்றி...
கற்றளிகளும்
கடவுள்களும்
உலகின் அத்தனைச் சிலைகளும்
என் குரல் கேட்டு
வளர்ந்தவர்கள்...
நான் தாய்..
உங்கள் ஒப்பாரிகளுக்கு
அவர்கள் செவி சாய்ப்பதில்லை...
உங்களால்
அவர்களைச் சாய்த்துவிடவும் முடியாது...
சாய்ந்தாலும்
என் மடியில் உயிர்ப்பார்கள்..
ஆகச் சிறந்த கலை படைப்புகளை
கடலிலும் காவிரியிலும்
கரைக்கும் போது
நான் கதறி அழுவது
உங்கள் காதுகளில் விழுவதில்லை...
ஆப்கானிஸ்தானத்தில்
மண் சிற்பங்களை பெயர்த்தீர்கள்..
மண் உளிகளை
என் மடிகளை
காற்றில் தேடி களைத்துப் போகிறீர்கள்..
உலகெங்குமுள்ள
அத்தனைச் சிலைகளையும்
அகற்றிவிடுங்கள்..
அன்பையும் தாய்மையையும்..கூட...
அன்று
என் சப்தம் நிசப்தமாகும்..
உங்கள் சப்தம் தீர்ந்துபோகும் நாளிலும்
என் சப்தம் உரத்து
கேட்டுக் கொண்டே இருக்கும்...
ராகவபிரியன்

Saturday, March 3, 2018

தமாஸ்கஸிலிருந்து ஒரு தமாஸான பயணம்

தமாஸ்கஸிலிருந்து
தமாஸான தொரு
தொடர்வண்டிப் பயணம்...
வழி நெடுக
பிணக் காடுகளில்
செம்மறியாடுகள்
மேய்ந்தபடி யிருக்கின்றன...
அதன் குட்டிகளின்
சதைகள் பிய்க்கப்பட்டு
எலும்புக் கூடுகளுடன்
புல் மேய்வது..
பயணிகளின் கண்களில்
சிரிப்பாய்த் தெறிக்கிறது...
வண்டியை நோக்கி
ஓடிவரும் ஒரு குழந்தைக்கு
டாட்டா காட்ட
கை யில்லாமலிருப்பதை
தன் கைபேசியில்
படமெடுத்துக் கொண்டாள்
சக பயணி....
சிரிய பவுண்டிற்கான
சர்வதேச மதிப்பு
சரிந்து விட்டதைப்பற்றிய
விவாதங்களிடையே...
தேனீர் விற்பவன்
கோப்பைகளில்
பச்சை ரத்தம் ஊற்றித் தந்தான்..
அடர்த்தி அதிகமாயும்
இனிப்பு கம்மியாயும்
எனது சக பயணியின்
நாவு ருசியில்
சரியாகப் பொருந்திக் கொண்டது...
சரியாகப் பொருத்தப்படாவிட்டால்
கீழே விழ ஏதுவாகலாம்...
சன்னிப் பிரிவுகள்
அதிகமான
மரமொன்றின் அருகில்
வண்டி
எதற்காகவோ நிற்கும்
இன்னொடிகளில்...
குர்தும் ஜூவும்
அமெரிக்கக் கிறிஸ்துவமும்
இணைக்கப்பட்ட
இராக்கிய குடியேற்றமும்
மெடிட்டரேனியக் காற்றும்
பெட்டிக்குள்
அதிரடியாய் நுழைந்து
ஆளாளுக்கு எதையோ
விற்கத் தொடங்கின...
ஒரு பொட்டலம்
சூடான சுண்டல்
வாங்க பயமாயிருந்தது...
பிரித்தால்
முகம் சிதைந்த
குழந்தை முகமொன்று
வெளிவரலாம்....
வண்டியிலிருந்து
அரேபியப் பெருங்கடலில்
குதிப்பதற்காக
கதவோரம் நின்றிருக்கிறேன்...
ஓடும் வண்டியில்
ஏறுவதோ
கதவோரம் நின்று
பயணிப்பதோ...
தண்டனைக்குரிய
குற்றமென்று
உருதுவில் எழுதியிருக்கிறது...
ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...