காலத்தின் ஆற்றங்கரையில் நிற்கிறேன்-
குதித்தோடும் நினைவு வெள்ளெமென பெருகி
நுரைத்து நகர்ந்தபடியிருக்கிறது-
துணி துவைக்கும் சப்தங்களை
சதா எழுப்பும் சங்கீதா...
மெளனமான மீனொன்றாக காலைக் கவ்வுகிறாள்...
கொரோணாவின்
அலைகளில் அவள் மரணம்
என் சப்தங்களை
துவைத்தெடுக்கிறது....
சப்தமின்றி அந்த மீன் நகர்ந்து செல்ல...
நதி விரைந்து கொண்டேயிருக்கிறது...
சந்தியா வந்தனம் செய்யும்
சடகோபனின்
அர்க்கியங்கள் மேலேறி மிதக்கின்றன...
விண்ணை நோக்கி
துளித்துளியாய் புறப்பட்டு
என் கண்ணின் வழியே
பெருமழையாய் நதியில் இறங்குகிறது...
மழை ஆற்றில் விழும் சப்தம்
கோவிந்தம் தர்பயாமி....
என ஒரு துவக்காய்
என்னைத் தள்ளிக் கொண்டே செல்கிறது...
காலைக் கவ்விய அந்த சடகோபமீனின்
உடலெங்கும்
நாமங்கள் வழுக்கு கின்றன...
கொரோணாவின் இரண்டாம் அலையின்
நுரை ஆற்றுப் படிகளில்
அப்பிக்கிடக்கிறது....
கால நதியின் சுழித்தோடும்
மரணங்கள் மிதந்து கொண்டிருக்கும்
மேற்பரப்பிலிருந்து
திடீரென ஒரு மீன்
துள்ளி வெளிவந்து கரைந்து நீந்தத்தொடங்க....
படியில் கிடத்திய துண்டை
மீண்டும் தோளில் போர்த்தி
குளிக்காமல் திரும்புகிறேன்...
அணிச்சையாய் துண்டிலிருந்து
ஒரு குழந்தையின் கை
என் கன்னங்களைத் துடைக்கத் தொடங்குகிறது....
ஆறு அதன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது.....
ராகவபிரியன்

No comments:
Post a Comment