Friday, November 12, 2021

 திருவரங்க திருமன்றாட்டம்....1

மனதின் கனத்த பொழுதுகள் செலுத்தும் திசைகளை கால்களால் தடுக்க முடிவதில்லை...தன்னிச்சையாய் அலைந்து திரிந்து முடிவில் பெரும்பாலான மனித கால்கள் தங்கள் நடையை முடிவுக்குக் கொண்டு வருமிடம் கோவில் என்பதை மறுப்பது ஆகக் கடினம்...குபேரனின் பூஜைக்கான மலர் தருவித்தலின் தாமதம் யஷனின் காதல் மனத்தின் கனம் என்பதறிந்து சபிக்கப்பட்ட யஷன் மேகத்தை தூதுவிடும் கவிதை வரிகள் மிகுந்த பாரம் சுமப்பவைகள்...காளிதாசனின் கால்கள் யஷனின் கால்களுக்குள் புகுந்து வடக்கு நோக்கி மேகப் பார்வையுடன் நடப்பதின் மேலதிக கனம் இந்த அரங்கனடிமையின் கால்களை உரக்கடையில் கொணர்ந்து சேர்த்ததை எங்ஙணமுரைப்பது?
தொடர் மழையும் அதன் நம்பமுடியா தாக்கங்களும் விவசாயிகளின் வாழ்வை மூழ்கடிக்கும் முயற்சியில் பாதி வெற்றி பெற்றுவிட்டதைக் காண முடியும்...இக் கொடிய கணங்களில் எங்கள் வயலில் களையெடுக்கப்பட்ட பின்னான அவசியத் தேவையான யூரியா உரம் சென்னையில் தொடர்வண்டி காத்திருப்புக் கிடங்கில் கிடப்பதாகக் கேட்ட செய்தியும் நிற்காத மழையின் சப்தமும் அரங்கனின் உடல் நிறம் தாங்கித் தவழ்ந்து கொண்டிருக்கும் மேகங்களின் மேல் காளிதாசனின் கவிதையைவிட வீரியமிக்க பாடல் ஒன்றை வீசச் செய்தது...உரத் தட்டுப் பாடும் தீராத சாமான்ய விவசாயியின் பயிரிடும் போராட்ட ஓலமும் இந்த அரங்கனடிமையை பெருமாள் கோவிலின் குலசேகரப் படியின் முன் நிறுத்தியது...
மன்றாடும் இந்த அடியவனின் கோர ஓலம் தாங்கிய மேகங்கங்களை அரங்கன் ஆச்சாரியரிடம் அனுப்பி வைத்தான் போலும்...பாரம் மிகுத்த அந்த மழைப் பொழுதின் தூறலில்
தாபந் க்ஷிபந் ப்ரஸவிதா ஸூமநோ கணாநாம்
ப்ரச்சாய சீதள தல:ப்ரதிசந் பலாநி
த்வத ஸங்கமாத் பவதி மாதவி ஸப்த போஷ:
சாகா சதைரதிகதோ ஹரிசந்த நோசஸேள...
[ஆச்சாரியன் நிகம்மாந்த மஹா தேசிகர்]
[இந்த பூமியில் எங்களைத் தாங்கும் அன்னையே அரங்கன் ஹரிசந்த்ர மரமாய் உன்மீது கிளை பரப்பிக்கொண்டிருக்கிறான்...அவனின் நிழலில் அதாவது உன் மீது சந்தன மலர்கள் பொழிகின்றன..எம்போன்ற பக்தர்களுக்கான ஞானப் பழங்களை அந்த மரம் வெகுவதிசயமாக கொணர்ந்து உதிர்க்கும்..அரங்கனின் செழிப்பிற்காக நீ உன்னையே தருவது போல்...]
எங்களுக்காக அரங்கன் தந்த வயலிற்கான யூரியா உரங்களை உடனே தரமாட்டாயா...என்று மன்றாடத் தொடங்கினேன்...மழை சற்றே தன் கனத்தைக் குறைத்து வழிவிட இதோ உரக்கடை நோக்கிய என் காலகளின் புறப்பாடு...
மழைக்கும் மேகத்திற்கும் அதிகாரத்திற்கும் மனதின் அன்பின் கனத்திற்கும் காத்திரமான ஒரு கவிதையைப் படைத்த காளிதாசனின் பாடலின் ஆங்கில வடிவம் ஒன்றை இங்கே தருகிறேன்...
ராகவபிரியன்
Such clouds the ending of the world presage;
you minister to form at will. Though kin
I plead for are by power detained, better
to be by majesty refused than win
an approbation of base parentage.
[Translated kalidasa poem by poet Colin John Holcombe]

Friday, July 23, 2021

 தனி மனித மனம் தனக்கிழைக்கப்பட்ட அல்லது தான் அனுபவித்த துன்ப நிகழ்வுகளை மறப்பதற்கே முயல்கிறது...சமுதாய பொதுமன எண்ண ஓட்டங்களிலும் அதை ஒற்றியே துன்ப நிகழ்வுகளோ அல்லது வெறுக்கத்தக்க நிகழ்வுகளோ வரலாற்றில் பதியப்பட்டிருந்தால்... அதை மறக்கவோ அல்லது சிந்தனையிலிருந்து வலிந்து அகற்றவோ

நிகழ் சமுதாய அதிகார அரசியலமைப்புகளால் நுட்பமாகக் கற்றுத்தரப்படுகின்றன...
மதம் சார்ந்த தாக்குதல்கள் இந்திய துணைக் கண்டமெங்கும் அழிக்க முடியாத வரலாற்று துன்ப எச்சங்களை விட்டுச் சென்றிருக்கின்றன...எனினும் துன்பம் தந்த நிகழ்வைக் கொண்டாட்டமாய் அல்லது வணங்கத்தக்க நிகழ்வாய் மாற்றியமைத்துவிட்டால் ஒரு சில நூற்றாண்டுகள் கடந்த சமுதாய மாந்தர்கள் ...தங்கள் வாழ்வின் நெடும் பயண எண்ணங்களில் அந்நிகழ்வைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்களாகவோ அல்லது நசுக்கப்பட்டவர்களாகவோ வாழ்ந்து முடிந்துவிடுவார்கள்... இது அரசியலின் அதிகாரத்திற்கான அவசிய கருவியாக பயன்பட்டதை மறுப்பதற்கு இடமில்லை...வரலாற்றின் கணக்குப் புத்தகத்தில் இஸ்லாமிய அரசர்களால் சிதைக்கப்பட்ட கோவில்கள் கணக்கில் அடங்காதவை...ஏன் கோவில்கள் அழிக்கப்படவேண்டுமென்ற சிந்தனையை இன்றைய சமுதாயத்தின் பொது எண்ண ஓட்டங்களில் இருந்து நீக்குவதற்கான வடிகட்டிய நுட்பமான எண்ண அரசியல் தாக்குதல்களை சமுதாயம் புரிந்து கொள்வதென்பது சாதாரணர்களின் எண்ண வீச்சின் விஸ்தீரணத்திற்கு அப்பாற்பட்டது..
ஏன் கோவில்கள் கட்டப்பட்டன என்ற கேள்வியே எந்த தனிமனித சிந்தனையிலும் துளிர்விடமுடியாதபடியான வாழ்வியல் திணிக்கப்பட்டிருக்கும் அவலம் நிகழும் காலகட்டம்...இப்போது மட்டுமல்ல...தொடர்ந்து வரலாற்றில் பதிவாகியுள்ள நிஜம்...இந்த உண்மை விவேகானந்தரை புரட்டிப் போடுகிறது...
ஆங்கிலேய ஆட்சியாளர்களால் சென்னையிலிருந்து வெளிவந்த பிரபுத்த பாரதா...அதாவது விழிப்புணர்வு பெற்ற இந்தியா என்ற மாத இதழ் இமாச்சலபிரதேசத்திலிருக்கும் அல்மோரா என்ற இடத்திற்கு மாற்றப்படுகிறது...இது இந்துக்கள் தங்கள் ஆன்மீக எண்ணங்களுக்கான கலாச்சார பாதுகாப்பிற்கான விளை நிலைமாய் கருதிய ஒரு இதழ்...அங்கே மதம் சார்ந்த இலக்கிய தாக்குதலை அதிகார கைகளில் கொடிய ஆயுதம் ஏந்தி நிகழ்த்துகிறார்கள்... வரலாற்று நிகழ்வு மறைக்கப்பட்டது மட்டுமல்ல இன்றைய சமுதாய பொது எண்ண அறைகளில் இருந்து அதிகார ஆற்றலால் அகற்றப்பட்டதும் கூட....வரலாற்றின் கருப்பு பக்கங்களில் பதிவாகியுள்ள இலக்கிய துன்பியல் நிகழ்வு ...இதைப் பற்றி விவேகானந்தர்....
Once more awake என்ற தலைப்பில் ஒரு ஆங்கில கவிதையை எழுதி அனுப்புகிறார்..அந்த இதழ் அதை அட்டையில் ஆகப்பெரிய எழுத்தில் பிரசுரிக்கிறது...நெடிய நீள் கவிதையின் முதல் பத்தியை மட்டும் அப்படியே தருகிறேன்....
For sleep, it was not death to bring thee life
Anew and rest to lotus eys for visions
Daring yet The world in need awaits O Truth
No Death for Thee...
நாம் அனைத்தையும் மறந்து விட்டோம்...நம் கோவில்களை நம் கலாச்சாரத்தை நமது கலாச்சாரத்தின் மீது தொன்று தொட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களை...இருந்தும் இன்னமும் புயலினின்று மீண்டு எப்போதும் துளிர்விடும் புல்லின் நிரந்தர சுவாசமாய் காப்பாற்றப்பட்ட தொன்ம நிகழ்வுகளை...மற்றும் எல்லாவற்றையும்...மறந்துவிட்டோம்....நமது இலக்கியங்கள் பேசிய உண்மையை திரித்து பொருள் கூறவும் கற்றுக் கொண்டோம்...நமது மதமும் வாழ்வியலும் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன...அதை கடந்த சில நூற்றாண்டுகளில் அன்னியர் ஆட்சியில் திரித்துப் பொருள் கூறி கலாச்சார தாக்குதல் நிகழ்த்தவும் நாம் தயங்கவில்லை...உதாரணத்திற்கு ஒரு குறுந்தொகை பாடல் ....உறையூர் சல்லியன் குமாரனார் என்ற அருமையான கவி....
கைவினை மாக்கள் தன் செய்வினை முடிமார்
சுரும்புண மலர்ந்த வாசம் கீழ்ப்பட
நீடிய வரம்பின் வாடிய விடினும்
கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவோம் என்னாது
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்
நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும..
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்

நின் இன்றமைதல் வல்லாமாறே....
வரப்பில் உழவர் கவனிக்காமல் வாடிய நெய்தல் பூ மீண்டும் பூக்கும்...அது போல் தனக்கு துன்பம் இழைத்தவர்களை அவர்களின் துன்பச் செயலை பொருட் படுத்தாமல் அல்லது மறந்துவிட்டு ஏற்றுக்கொள்ளும் வழமை அன்றைய தமிழ் மண்ணின் உலகம் போற்றிய கலாச்சார மேன்மை...ஆனால் இதை இன்றைய உரையாசிரியர்கள் திரித்து பொருள் கூறுவது தான் கொடுமை....
இது போன்ற பொது மன எண்ணங்களில் செலுத்தாற்றல் மூலம் திணிக்கப்படும் அல்லது மறக்கடிக்கப்படும் வரலாற்று நிகழ்வுகளை ப்ராய்ட் சைக்கலாஜிகள் ரெப்ரசன் என்று சொல்கிறார்...உண்மை உறங்காதது மட்டுமல்ல...உரத்தும் பேசும்...
ராகவபிரியன்




Saturday, July 10, 2021

 வேகமெனும் பூச்சி

உன்னுள்
எப்படி
திடீரென உருக்கொள்கிறது?
விரிக்க முடியாத
வாழ்வின் சாலையில்
ஏன்
அதிவேகம் கூட்டி
அப்படிச் செல்கிறது?
சாலையை அகலப்படுத்துதல்
சரளைகளை கொட்டி சமனித்தல்
தார் உருக்கி ஊற்றி
சக்கர நகர்விற்காக
தயார் செய்தல்
உன் ஆன்மா பார்த்திராதா
குருட்டுச் செயல்களா...?
உன் சக்கரங்களை
சுழலச் செய்வதில்
குழப்பமற்றிருக்கிறாயா...
உன் ஆணவமோ அறிவோ
கட்டுப்பாட்டிற்குள்
வைக்கப்பட்டிருக்கிறதா...?
உன் அனுபவமும் தியாகமும்
வேகமாணியில்
படிப்படியாய் மேலெழும்பி
உச்சம் தொட்டிருக்கிறதா?
இதெதுவும்
இல்லாத ஒரு பூச்சியை
நீயாக உருவாக்கி
சாலையில்
பறக்க விட்டிருக்கிறாய்?
பார்

இப்போது
சாலையில் பயனிப்போரின்
பார்வையில்
ஆகச் சிறிய பூச்சியாய்....நீ
ராகவபிரியன்


Wednesday, July 7, 2021

 காலத்தின் ஆற்றங்கரையில் நிற்கிறேன்-

குதித்தோடும் நினைவு வெள்ளெமென பெருகி

நுரைத்து நகர்ந்தபடியிருக்கிறது-

துணி துவைக்கும் சப்தங்களை

சதா எழுப்பும் சங்கீதா...

மெளனமான மீனொன்றாக காலைக் கவ்வுகிறாள்...

கொரோணாவின்

அலைகளில் அவள் மரணம்

என் சப்தங்களை

துவைத்தெடுக்கிறது....

சப்தமின்றி அந்த மீன் நகர்ந்து செல்ல...

நதி விரைந்து கொண்டேயிருக்கிறது...


சந்தியா வந்தனம் செய்யும்

சடகோபனின்

அர்க்கியங்கள் மேலேறி மிதக்கின்றன...

விண்ணை நோக்கி 

துளித்துளியாய் புறப்பட்டு

என் கண்ணின் வழியே 

பெருமழையாய் நதியில் இறங்குகிறது...

மழை ஆற்றில் விழும் சப்தம்

கோவிந்தம் தர்பயாமி....

என ஒரு துவக்காய்

என்னைத் தள்ளிக் கொண்டே செல்கிறது...


காலைக் கவ்விய அந்த சடகோபமீனின்

உடலெங்கும்

நாமங்கள் வழுக்கு கின்றன...

கொரோணாவின் இரண்டாம் அலையின்

நுரை ஆற்றுப் படிகளில்

அப்பிக்கிடக்கிறது....


கால நதியின் சுழித்தோடும்

மரணங்கள் மிதந்து கொண்டிருக்கும்

மேற்பரப்பிலிருந்து

திடீரென ஒரு மீன்

துள்ளி வெளிவந்து  கரைந்து  நீந்தத்தொடங்க....


படியில் கிடத்திய துண்டை

மீண்டும் தோளில் போர்த்தி

குளிக்காமல் திரும்புகிறேன்...

அணிச்சையாய் துண்டிலிருந்து

ஒரு குழந்தையின் கை

என் கன்னங்களைத் துடைக்கத் தொடங்குகிறது....


ஆறு அதன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது.....

ராகவபிரியன்



Tuesday, April 27, 2021


 இன்றைய தொடர் மரணச் சூழலின் அழுத்தம் விதவிதமான வடிவங்களில் பயத்தின் வாசலில் கோலங்கள் இட்டபடி இருக்கிறது...புள்ளிகளாகவும் புள்ளியியல் வடிவமாகவும் வாகனங்கள் ஏறி மிதித்த கோடுகளுடன் கூடியதாகவும் அழிந்தும் அழியாமலும் வளந்து கொண்டே இருக்கின்றன...கூடவே ஏனிந்த துயரத்திணிப்பை அரங்கன் உலக மாந்தர்களின் வாழ்வில் அறிவிப்பின்றி அரங்கேற்றுகிறான் எனப்புரியாமல் உறக்கமும் வராமல் கடந்த சில நாட்களாக இரவு முழுவதும் விழித்தும் உறங்கியுமாகிக் கிடக்கிறேன்..அரங்கன் தனது இருப்பின் அவசியத்தை அவ்வப்போது நிரூபித்தபடியிருப்பது நிரூபணமான ஒன்று...மிருஷ்ட்டான பூஜைகள் செய்யப்படவில்லை என்பதை அரங்கன் இந்த அடியவன் மூலம் உலகிற்கு எடுத்துச் சொல்லியும் கேட்பார் இல்லை...இனி ஆன்மீக எழுத்துக்களை உருவாக்குவதில்லை என்ற எனது முடிவை மறு பரிசீலனை செய்ய அரங்கன் உத்தரவிடுகிறான்...அரங்கன் இருப்பு அசைக்க முடியாதது...ஆனால் எனது ஆன்மீக எழுத்தின் தாக்கம் அசைக்க வேண்டியவர்களை ஆணவத்திற்கு ஆட்படுத்தி எனது இருப்பை அசைத்துப் பார்ப்பதை அரங்கனிடம் கூறுகிறேன்...வெளியே குடுகுடுப்பைக் காரனின் உளறல் புரிபடவில்லை...மணி விடிவதற்கு முன்னான பின்னிரவின் நான்கு எனச் சுட்ட வெளிவருகிறேன்...அரங்கனை தேடத்தொடங்குகிறேன்...வாசலில் எதிர் வேப்ப மரத்தில் வானில் கோவிலின் உள் பிரகாரங்களில் கோபுரத்தில் கருடனிடத்தில் கருணையிடத்தில் ....அரங்கனைக் காணோம்...நேற்றிரவு ஆச்சாரியரிடம் கேட்கிறேன்...

ஆன்மீக வாழ்வின் பகுதி புதிர்கள் நிறைந்தது மட்டுமல்ல...புரியாததும் கூட என்று சொல்லியபடியே தனக்கு ஹயக்கிரீவராய் அரங்கன் காட்சி தந்ததை அருமையாய் விளக்குகிறார்...எங்கே பக்தர்கள் துன்பத்தை அனுபவிக்கிறார்களோ அங்கே நான் பூஜைகளை ஏற்பதில்லை ....அதே போல் எங்கே பூஜைகள் முறையாக செய்யப்படவில்லையோ அங்கே பக்தர்கள் துன்பம் அனுபவிப்பார்கள் என்று அரங்கன் கூறியதாகத் தெரிவிக்கிறார்....முரண்படாத பூஜைகளையும் அதன் முறைமைகளையும் விளக்க ஒன்றும் புரியாமல் திடுக்கிட்டு விழிக்கிறேன்...ஆச்சாரியர் எதிரே ஆக அமைதியாக 

ஸ்வத ஸித்தம் சுத்தஸ்படிகமணி  பூப்ருத்பரதிபடம்

ஸூதா ஸ்த்ரீசீபிர் த்யுதிபிரவதாத த்ரிபுவநம்

அ நந்தைஸ் த்ரய்யந்தைர நுவிஹித ஹேஷா ஹலஹலம்

ஹதா சேஷாவத்யம் ஹயவத நமீடீமஹி மஹ:

அரங்கன் அடியவர்களைக் காக்க ஹயக்கிரீவராக அவதரிப்பான் தேவையான காலங்களின் நிகழ்விடங்களில்...அப்படியான அரங்கனின் ஹயக்கிரீவ வடிவம் தூய்மையானது வெண்மையானது...ஹயக்கிரீவனிடமிருந்து வரும் ஹல ஹல ஒலி வேதங்களின் வடிவம்...ஹயக்கிரீவனே ஓம் எனும் வடிவமுடையவன் தான்...என்ற பொருள் படும் ஸ்லோகத்தைச் சொல்லி மறைகிறார்....ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது...அரங்கன் உக்கிரமாயிருக்கிறான்...வாசலில் மீண்டும் அரங்கனைத் தேடுகிறேன்...வேப்ப மரத்தில் ஹயக்கிரீவ உருவம் காட்டியவன் இன்று மேகவடிவில் உருவம் காட்டி  நொடிப்பொழுதில் கரைந்து போகிறான்...அதை உங்களுக்காக இங்கே படமாகத் தந்திருக்கிறேன்...

திருவரங்கன் திருவடிகளே சரணம்

ஆச்சாரியன் திருவடிகளே சரணம்...

ராகவபிரியன்...

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...