Saturday, June 22, 2019

கடவுள் உணரப்படவேண்டும் என்று சொல்கிறார் நோபல் பரிசு பெற்ற ஸ்பானிய மொழி இலக்கியக் கவிதாயினி சிலியைச் சேர்ந்த கேப்ரியலா மிஸ்ட்ரெல்..ஆன்மீக உணர்வுகளை எழுத்தாக்குவதற்கும்..அந்த எழுத்துக்கள் உலக அரங்கில் அங்கீகரிக்கப்படுவதற்கும் அசாத்திய திறமையும் மொழி வல்லமையும் எழுத்தாளுமையும் வேண்டும்..இவையணைத்தும் இறைவனருளால் தனக்கு எளிதாக வாய்த்திருக்கிறது என்று சொல்லும் கேப்ரியலா மிஸ்ட்ரெல்.... 1920ல் சிலியில் ஒரு உயர் நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராய் பணியேற்கிறார்..அப்போது ஓரளவு ஆன்மீக இலக்கிய கவிதாயினியாக உலக அரங்கில் அறியப்பட்டிருந்த கேப்ரியலாவை..அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பாப்லோ நெரூதா என்ற மாணவன் தயங்கித் தயங்கி உள் வந்து அவரிடம் ஒரு கேள்வி கேட்கிறான்..கவிதை என்பது உணர்வின் வெளிப்பாடெனில்..கடவுள் என்பதும் உணர்வின் ஒரு கூறு தானே...கடவுளுக்குத் தரும் முக்கியத்துவம் ஏன் கவிதைக்குத் தரப்படுவதில்லை எனக் கேட்ட நெரூதாவை தன் மடியில் அமர்த்திக் கவிதைகளையும் கடவுளையும் அந்தப் பள்ளியிலிருந்த ஒரு ஆண்டு முழுவதும் இலக்கிய அன்னையாக அவருக்குக் கற்றுத் தருகிறார்..பின்னாளில் நோபல் பரிசு பெற்ற கேப்ரியலா மிஸ்ட்ரெலுக்கு நோபல் கமிட்டி..தாய்மையையும் கருணையையும் கடவுளையும் கவிதையாய் நமக்கெல்லாம் மொழியின் வழியாக உணரச்செய்தவர் என்று புகழ் மாலையொன்றை அணிவித்து மகிழ்ந்தது வரலாறு.அவரின் இலக்கிய மகனும் நோபல் பரிசு பெற்றது உலக இலக்கிய ஆன்மீக அதிசமன்றி வேறென்ன..?
ஒரு நாள் மாணவர்களனைவரும் வீடு திரும்பி விட்ட வகுப்பறைக்கு வருகிறார் கவிதாயினி கேப்ரியலா...அவரின் பெயர் அது தான் அன்று வரை..ஒரு நோட்டுப்புத்தகம் மெல்லிய காற்றில் பக்கங்களை விசிறிக்கொண்டிருந்ததைக் கவனிக்கிறார்..அதைக் கையில் எடுத்த உடன் காற்றின் வேகம் அதிகரிக்க நோட்டு கை நழுவிப்பறந்து கரும்பலகையில் பட்டு விழுகிறது..அடுத்த சில நிமிடங்களில் ஒரு புயல் உருவாகி அந்தப் பள்ளி வளாகத்தையே சூறையாடிச் செல்ல..அந்த அனுபவமும் அவரின் கண் முன்னே காற்று தன் அத்தனை வலிமையையும் காட்டியதையும் அவர்..அப்போதையைய சிலியின் கடவுள்களாய் வழிபடப்பட்ட நீர் நிலம் நெருப்பு ஆகாயம் ஆகியவைகளைவிட வலிமையானது காற்று என்று பொருள் பட ஒரு கவிதையை எழுதி வார இதழ் ஒன்றுக்கு அனுப்புகிறார்..சிலியின் மொழியில்..அதாவது ஸ்பானிய அமெரிக்க மொழியில் மிஸ்ட்ரெல் என்றால் வலிமை மிக்க காற்று என்று பொருள்..அந்த வார்த்தையை தன் பெயருடன் புனைப்பெயராய் இணைத்து கேப்ரியலா மிஸ்ட்ரெல் என்று எழுதத் தொடங்குகிறார்...அந்த மாணவனின் நோட்டுப் புத்தகத்தைப் பத்திரப்படுத்தி அடுத்த நாள் அந்த மாணவனிடம் கொடுக்கிறார்...
அவரின் வகுப்பறை புயல் சந்திப்பை ...அதைப்பற்றிய அந்தக் கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்..இது மொழியாக்கமோ மொழி மாற்றமோ மொழிபெயர்ப்போ இல்லை...
ஒன்பதாம் வகுப்பின் மாணவ
காகிதப் பக்கங்களை
வருடிய தென்றல்
என்ன வாசித்ததோ தெரியவில்லை..
அல்லது
ஒரு குழந்தையின்
கடவுளைக் காண வேண்டிய
அதிசய அவசரமோ
புரியவில்லை..
சுழன்றடிக்கத் தொடங்கிய
அந்தக் காற்றிற்கு
சூறாவளி என்று பெயர் தந்தது யார்..?
அந்தக் குழந்தை மாணவன்
கை கட்டி நிற்கும் போது
பயந்து பம்மிய காற்று
அவனின் பாடப்புத்தகத்திடமா
தன் வலிமையைக் காட்டவேண்டும்..?
அவன் மனப்பாடச் செய்யுளை
மழலை மாறாமல்
ஒப்புவிக்கையில்
வகுப்பறைக்குள் உருவாகி
உறங்கிப்போன புயல்
இப்போது
அவனைத் தேடியலைகிறதா..என்ன..?
அல்லது
அந்தக் குழந்தையின்
மொழியைக் கேட்க
கடவுளை அழைத்து வரும்
ஆரவாரமா...?
என்ன நடக்கிறது இங்கே..?
குழந்தை தன் பக்கங்களில்
அன்பே கடவுள்
என்றுதானே எழுதியிருக்கிறான்..>
பின் ஏன் அப்பக்கதை
தூக்கி வீசவேண்டும்...?
அப்படியானால் காற்று கடவுளில்லையா..?
சரி
நாளை வகுப்பறைக்குள்
தன் புத்தகத்தைத்
தேடும் குழந்தையைவிட
சூறாவளியும் புயலும்
அதிகம் சுழன்றுவிடுமா என்ன...?
இந்தப் புத்தகத்தை
கண்டெடுத்தால்
கடவுளை கண்டெடுத்துவிட மாட்டானா
அக்குழந்தை..?
காற்றிடம் இல்லை
கடவுளிடம் தான் கேட்கிறேன்...!!!
ராகவபிரியன்

Wednesday, June 12, 2019

நேற்று இரவு என்னைக் கைபேசியில் அழைத்த இந்தியன் ரயில்வே மாத இதழின்[மாதம் இரண்டு லட்சம் பிரதிகள் உலகெங்கும் வாசகர்களைச் சென்று சேர்கிறது] ஆசிரியர் திருமதி கல்யாணி அவர்கள் தமிழின் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் எழுதியனுப்பும் படி கேட்டுக்கொண்டார்கள்..நான் அவர்களிடம் ஏற்கனவே ஏ கே ராமானுஜம் அந்த அரிய பணியை செவ்வனே செய்து சென்றிருக்கிறார் என்றேன்...ஜனவரியில் இந்தியன் ரயில்வே இதழுக்கு நான் எழுதியனுப்பிய கபிலரைப் பற்றிய கட்டுரையை மே இதழில் பிரசுரித்திருக்கும் தகவலையும் தந்தார்கள்..தொடர்ந்த எனது ஆங்கில படைப்புகளை வெளியிட்டு என்னையும் தமிழையும் கெளரவிக்கும் இந்தியன் ரயில்வே மாத இதழுக்கும் அதன் ஆசிரியர் திருமதி கல்யாணி அவர்களுக்கும்..அதன் தயாரிப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...வணக்கங்களுடன்..அன்பன்...ராகவபிரியன்

Monday, June 10, 2019

வாசக சீதையின்
மரண நிமிடங்கள்
சுற்றி இடது எழுத்து அரக்கிகளின்
முரண்பனுவல் மாநாடு..
அசோக மரத்தின்
வலது கிளையில்
ஒரு கவி வானரன்..
நம்ப மறுக்கிறாள் சீதை..
நீ வலதா இடதா..
கவலையில்லை..
எழுத்தின் தூதன் என்பதை
நிரூபிக்கச் சொன்னாள்..
வானரன் சொல்கிறான்
என்பதுகளில்
மராட்டிய தலித்திலக்கிய
வேள்வித் தீயை
தமிழ் வானிலிருந்து
இடது அரசுரர்கள் குலைத்தபோது...
கீழிறிந்து
அவர்களை நோக்கிக் குலைத்திருக்கிறேன்..
அட....
கேட்டு வாங்கிப் போட்ட
மொக்கை படைப்புகளால்
எழுத்தரண்மனைகளை
பரதஇடவர்கள் ஆக்கிரமிக்க
மாற்று நவீன மர உரியின்றி
நீயும் நானும்
வலது புரமாய்
கானகம் ஏகினோம்..
நிராகரிக்கப்பட்ட நம் இலக்கியப்
பூணூல் என் வலது தோளில்
கிடந்ததே..
அட ஆமாம்...
சீதா...பேசும்மா...
உன்னைக் கொத்த வந்த
பின் நவீன காக்கையை
விரட்டிக்கொண்டு
பின்னாலேயே ஓடினேனே..
அதை அருமையான கவிதையென்றாயே...
இன்னுமா நம்ப மறுக்கிறாய்...
மெளனமாய்
இடது தோளிலிருந்த
கூந்தலை வலது தோளில்
மாற்றியபடியே..
நீ ராம தூதனா
ராமனே தானா...இல்லை
கலப்பட ராவணனின் மாயையா....?
சொல் ...
வாசக சீதை மேலும் சொல்கிறாள்...
சொல்லாவிட்டால்
உனக்கான லைக்குகளை
இரண்டு முறை அழுத்திவிடுவேன்...
ஐயையோ...
வேண்டாம்...
இந்தா விருது மோதிரம்..
இப்போதாவது நம்புகிறாயா...
நான் வெறும்
பிரபல எழுத்தாளந்தான்...
ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...