Tuesday, April 24, 2018

பார்வையில் பயணச் சீட்டு

உலகின் ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்றை படைத்தளித்த மில்டன் சொல்கிறார்..
"யார் காத்திருக்கவும் ..நீண்ட நேரம் நிற்கவும் செய்கிறாரோ அவரே கடவுளின் பார்வையை பெறத் தகுதியானவர்". அப்படிப்பட்ட தகுதியானவர்கள் நம்மில் நிறைய இருக்கிறோம்..நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்கும் பயிற்சியை சில ஆலயங்களிலும் பொதுவிநியோகப் பங்கீட்டு நிறுவனங்களிலும் ஏன் சில நேரம் திருமணத்திற்காகக் கூட பெற்றிருக்கிறோம்.அப்படியான தருணங்களில் ஒரு சில வார்த்தைகள் உடைத்துக்கொண்டும் உடைந்தும் வெளிவரக்கூடும்...அவைகளை அப்படியே கொட்டுபவன் கோபக்காரன்...உள்ளேயே இழுத்து பின் தொலைத்துவிடுபவன் கோழை..அந்த வார்த்தைகளை சீராக அடுக்கி உயிர் தந்து எல்லா உதடுகளிலும் உச்சரிக்கக் கூடிய வடிவம் தரும் ஆற்றல் பெற்றவன் கவிஞன்...அப்படிப்பட்ட ஒரு கவிதை...
ஒரு பயண ஊர்தி
அமைதியாய் நிற்க
அதன் இருக்கைகளுக்கான
குறைந்த நேர
ஆளும் உரிமைக்கான
நீண்ட வரிசை
அமைதியற்றிருக்கிறது...
தன்னைத் தானே பூமி
ஒருமுறை சுற்றிவருவதற்குள்
தனக்கானவளை
அல்லது
தனக்கான வளைக்கு
சுற்றித் திரும்பும்
கால அவசியத்திற்கான
போட்டி சூழ் வரிசை..
தீர்ந்து போகாத
பயணச் சீட்டுப் புத்தகமும்
தரிசன அனுமதிச் சீட்டும்
இன்னமும்
அச்சில்தான் இருக்கின்றன...
கடவுளின் பார்வை கிடைத்ததும்
அச்சிற்கான
அனுமதி கிடைக்கலாம்.....
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...