Friday, April 27, 2018

காகபுஜண்டன்

சுமக்க முடியாத
கற்களால் கட்டிய சுவரில்
அமர்ந்திருக்கும் காகம்
கனத்திருக்கிறது..
அதன் அலகுகளில்
வாசல் கூட்டும் துடைப்பத்தின்
ஈர்க்குச்சிகள்
சொல்லடுக்குகளாய்..
வேலைக்காரிகளின் போட்டியால்
திண்ணையின் ஓரமாய்
ஓளித்து வைக்கப்பட்டிருந்த
கவிதைத்துடைப்பத்தை
இழுத்தெறிந்தது சுகம் காணும்
காகம்..
அதிலிருந்து தெறித்து
விழுந்த ஈர்க்குச்சிச் சொல்லைத்தான்
கூடுடென உருவாக்கும்
எதிர்காலக் காகபுஜண்ட
சந்ததியினருக்கு..
எட்டிப் பிடிக்கும்
உயரத்தில் கட்டிய கூட்டில்தான்
இப்போதும்
உயிரணுக்கள்
உருண்டபடியிருக்கும்...
கூடு கலைக்கப்பட்டாலும்
இன்னொரு
புத்தம் புதிய காகம்
கனமான சிறகுவிரிக்கும்..
அதன் மூக்கும்
ஈர்க்குச்சிகள் சுமக்கும்...
காகத்தின் சொல்லடுக்குச் சிறகுகள்
நூறாண்டுகள்
எட்டிப் பிடிக்க முடியாமல்
பறந்துகொண்டே இருக்கும்....
ராகவபிரியன்

Tuesday, April 24, 2018

பார்வையில் பயணச் சீட்டு

உலகின் ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்றை படைத்தளித்த மில்டன் சொல்கிறார்..
"யார் காத்திருக்கவும் ..நீண்ட நேரம் நிற்கவும் செய்கிறாரோ அவரே கடவுளின் பார்வையை பெறத் தகுதியானவர்". அப்படிப்பட்ட தகுதியானவர்கள் நம்மில் நிறைய இருக்கிறோம்..நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்கும் பயிற்சியை சில ஆலயங்களிலும் பொதுவிநியோகப் பங்கீட்டு நிறுவனங்களிலும் ஏன் சில நேரம் திருமணத்திற்காகக் கூட பெற்றிருக்கிறோம்.அப்படியான தருணங்களில் ஒரு சில வார்த்தைகள் உடைத்துக்கொண்டும் உடைந்தும் வெளிவரக்கூடும்...அவைகளை அப்படியே கொட்டுபவன் கோபக்காரன்...உள்ளேயே இழுத்து பின் தொலைத்துவிடுபவன் கோழை..அந்த வார்த்தைகளை சீராக அடுக்கி உயிர் தந்து எல்லா உதடுகளிலும் உச்சரிக்கக் கூடிய வடிவம் தரும் ஆற்றல் பெற்றவன் கவிஞன்...அப்படிப்பட்ட ஒரு கவிதை...
ஒரு பயண ஊர்தி
அமைதியாய் நிற்க
அதன் இருக்கைகளுக்கான
குறைந்த நேர
ஆளும் உரிமைக்கான
நீண்ட வரிசை
அமைதியற்றிருக்கிறது...
தன்னைத் தானே பூமி
ஒருமுறை சுற்றிவருவதற்குள்
தனக்கானவளை
அல்லது
தனக்கான வளைக்கு
சுற்றித் திரும்பும்
கால அவசியத்திற்கான
போட்டி சூழ் வரிசை..
தீர்ந்து போகாத
பயணச் சீட்டுப் புத்தகமும்
தரிசன அனுமதிச் சீட்டும்
இன்னமும்
அச்சில்தான் இருக்கின்றன...
கடவுளின் பார்வை கிடைத்ததும்
அச்சிற்கான
அனுமதி கிடைக்கலாம்.....
ராகவபிரியன்

Wednesday, April 11, 2018

Water with hate and taste

Amid frequent and thoughtful endeavors
Amid earnest struggles to regather
a bucketful of water from cauvery
Nothingness looms large on the sands...
Sometimes in the past
I have swam through the current
conjured up with mesmerizing success
when cauvery was full of water at Allur..
For the past several decades
suddenly inside cauvery and outside of it
Tumultuous slogans of protest studded in heat
swallowing every bit of water with horror..
The dawn had not opened my eyes
I could not swam or bath through
The sharpness or dampness of the holy river
Piercing through my heart's inquisitorial chamber
I could clearly see a doom prepared
artificialy inside cauvery where i couldn't
even take a quick bath by the politics
Where i had for every moment felt trembled..
MY dear Masters My dear society My dear souls
Kindly arrange half a bucket of water atleast
From this holy river just to finish my morning
Santhya vanthanam..without any hitch or hate...
Ragavapriyan

Thursday, April 5, 2018

பந்து உருட்டும் பந்த்

அந்த தென்னையின் எட்டும் உயரத்தில்
வெள்ளை வண்ணம் தீட்டி
மர நாய்கள் ஏறிவிடாதபடி அடைக்கிறீர்கள்...
ஒரு குடையின் சுற்றுக் கயிறை
இறுக்கி அது விரிந்து விடாதபடி அடைக்கிறீர்கள்..
நட்சத்திரங்களை அள்ளியெடுத்து
வானம் முழுதும் அடைக்கிறீர்கள்...
அகடு முட்ட அடை அவியலால்
நெடுஞ்சாலையோர
உயர் தர உணவகங்களில்
பசியடைக்கிறீர்கள்...
உங்கள் வாகன எண்ணெய்ப் பெட்டியை
எரி எண்ணெய் யால் நிரப்பிஅடைக்கிறீர்கள்..
காவிரியை இரும்பு மூடிகளைக் கொண்டு
அடைத்துவிட்டு..
தைக்கப்பட்ட நெகிழிச் சாக்குக் கதவிருக்கும்
எங்களின் தேனீர்க் கடைகளை
அடைக்கச் சொல்கிறீர்கள்...
ஏற்கனவே எங்கள் வயிற்றின்
வாசற்கதவை
ஈரத் துணியால் தான் அடைத்திருக்கிறோம்...
காவிரியில் கலக்கும்
சாயக் கழிவுகளையும்
சாக்கடைகளையும்
அடைத்துவிட்டு
பிறகு கடையடையுங்கள்..
உங்கள் அரசியல் கடையையும்தான்...
ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...