பின் நவீன அரசியல் கவிதைகள்…1
ஒரு சிட்டுக் குருவி
பரணில் தொங்கிக் கொண்டிருக்கும்
என் உணவு வழங்கல் அட்டையில்
அது தனது தகுதியற்ற அலகால்
ஆயிரம் உரூபாய்களை
சுமப்பதற்கான ஒத்திகை முயற்சியில்
அமர்வதும் பறப்பதும்
வைக்கோல் பிசிறொன்றை
ஆனந்தமாய் உட் செருகுவதுமாய்
என்னை வசீகரிக்கிறது…
மின்சாரக் கம்பிகளில் அமர்ந்து
பிறகென் பரண் மேல் அமரும்
குருவி மாயத்தால்
என் உடலெங்கும்
ஆயிரம் ரூபாய் மின்னழுத்தம்
ஒளிரல் தருகிறது…
ஒற்றை ஆயிரம் உரூபாய்த் தாள்
எப்போதோ உயிர் துறந்ததால்
இரண்டு ஐந்நூறு தாள்களை
உள் வாங்கக் காத்திருக்கும்
குடும்ப அட்டை விட்டத்தில்
குருவி சற்று நேரம் அமர்ந்து
விருட் விருட் டென
உயிர்ச் சிறகடித்து உசுப்புகிறது…
சிட்டுக் குருவிகளின்
அழிவின் காலத்திலா
ஆயிரம் உரூபாய்களுக்கான
உரிமையின் காலம்
தொடங்க வேண்டும்…
என் தகுதிக்கான
உலர் வைக்கோல் பொய்யொன்றை
என் பிரமாண பத்திர மார்புகளின்
நடுவில் வெளித் தெரியும் படி
செருகி வைக்கிறேன்…
தகுதிக்கான விண்ணப்பக் கேள்வி காகங்கள்
என்னொத்த சீதாப்பெண்களின்
மார்பின் வைக்கோல்பிரிகளின்
தரம் பிரிக்க
கொத்திக் குதறுகின்றன…
குருவி அமர
உதிரம் சொட்டும்
என் பரண் மட்டுமல்ல
இப்போதென்
மார்பும் இரண்டாய் பிளந்து கிடக்கிறது…
விண்ணப்ப வைக்கோல் பிரிகளும்
பஞ்சும் பஞ்சமும்
நிரப்பிய பிரமாண பத்திர
சுமை தாங்க முடியாமல்
பறந்து சென்ற
மீதிக்குருவிகள் மின் கம்பிகளில்
இளைப்பாறத் தொடங்குகின்றன…
காகங்கள் வழமை போல்
உரிமைகளை தின்ற பின்னும்
கத்திக்கொண்டிருக்கின்றன…
என் குருவியை
தாங்கும் தகுதியற்ற
என் விட்ட அட்டையின்
கூட்டிற்குள்ளா
புயல் வீசவேண்டும்…?
மின் கம்பியில் அமரும்
தகுதியிருக்கும் குருவி கட்டிய
கூட்டிற்கான
நிரூபணம் தேவைதானா..?
என்னிடம் ஆயிரம் உரூபாய்க்கான
தகுதியில்லாமல் போகலாம்…
ஆனால்
என் குருவியிடம்
சிறகுகளும்
என்னிடம் ஓட்டுரிமையும்
மின் கம்பிக்குள்
மாற்றத்திற்கான நெருப்பும்
எப்போதும் இருப்பதை
இந்த அரசு
இப்போதாவது அறியுமோ…?
ராகவபிரியன்
