ஒரு பனவனின் பால்ய நினைவுகள்..
எனது பட்டப்படிப்பு இரண்டு வருட இடைவெளிக்குப் பின் 1981ல் முதல் வகுப்புத் தேர்ச்சியுடன் முடிவடைந்தது..வேலை பார்த்துச் சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம்..சென்னை சென்றேன்..எனது உறவினர் தண்ணீர் மேல் நடக்கும் வித்தையை அறிந்தவனால் தான் வாழ்வின் தடங்களில் சொந்தக் கால்கொண்டு நடக்க முடியும் என்றார்...நான் என்னை முதுகலைவணிகவியலில் சேர்த்து விடச் சொன்னேன்..இரண்டு வருடங்கள் அதற்காகும் செல்வுகளையும் எனது பராமரிப்பிற்கான செலவுகளையும் கணக்கிட்டு..ஒரு புது உத்தியைக் கண்டு பிடித்தார்..ஒரு ஆடிட்டரிடம் என்னை ஆர்டிகிள்ட் கிளார்க்காகச் சேர்த்துவிட்டார்..
அங்கே நடந்த கொடுமைகளை..ஒரு ஏழை ஆடிட்டராகும் கனவைக் காணக்கூடாதென்ற உண்மையை உங்களுக்கு அடுத்தடுத்தப் பதிவுகளில் சொல்கிறேன்..மீண்டும் திருவாரூர் வந்தேன்..விடிந்தால் என் வீட்டார் பேசப்போகும்.. வேலையற்ற பட்டதாரியின் மேல் வீசப்போகும் வார்த்தை கணைகளுக்குப் பயந்து ஓசி ரயில் ஏறி தஞ்சை வந்துவிடுவேன்..தஞ்சை பேருந்து நிறுத்தப் புத்தகக் கடையில் சில சமயம் தஞ்சை பிரகாஷ் இருப்பார்...தம்பி சாப்பிட்டாயா...எனக் கேட்கும் அவரின் குரல் இன்னமுன் என் உள் மனதில் கேட்டுக் கொண்டிருக்கும்..எப்படியும் ஒரு தேனீர் வாங்கிக் கொடுத்துவிடுவார்...கணையாழி வாங்க காசில்லை என்பதைச் சொன்னவுடன்..ஏற்கனவே நட்டத்தில் இயங்கும் புத்தகக் கடையிலிருந்து எனக்கு ஒரு கணையாழி புத்தகம் தருவார்..எங்காவது போய் படித்துவிட்டு திரும்பக் கொடுத்துவிடு என்பார்..எனது பெயரை நான் அவரிடம் பாபு என்றுதான் கூறியிருந்தேன்..ராகவபிரியன் என்பதை அவராக கண்டுபிடித்தது பத்து ஆண்டுகளுக்குப் பின் ஒரு சுபமங்களா வாசகர் வட்ட நிகழ்வில்..
சில சமயம் நடந்தே திருவையாறு வரைச் சென்றுவிடுவேன்..ஒருமுறை திருவையாறு அருகில் உள்ள கடுவெளி கிராமம் வரை வந்துவிட்டேன்...ஒரு முதியவர் அமர்ந்திருந்த புளியமர நிழலில் நானும் அமர்ந்து ஐயா இது என்ன ஊர்..என்றேன்..கடுவெளி தம்பி...சரி கடுவெளிச் சித்தரைப் பற்றி கேள்கிப்பட்டிருக்கிறாயா...எனக்கேட்க..இல்லை என்றேன்..
மண்புழுவை பாம்பாக ஆக்கக்கூடிய சக்தி உள்ளவர் என்றவுடன்..ஆச்சரியமாய்ப் பார்த்தேன்..நீ யார் என்றார்..வேலையில்லாத பட்டதாரி என்பதைச் சொல்லக் கூசிய நாவால்...கவிஞன் என்று கூசாமல் பொய் சொன்னேன்..கையில் கணையாழி வேறு இருக்கிறது...ஆனால் அந்தப் பெரியவர் தம்பி..காடுவெட்டிச் சித்தர் ஒரு பாடல் உலகப் புகழ்பெற்றது தெரியுமா..என்றார்..
நந்த வனத்தில் ஓர் ஆண்டி..அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி..அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...
எனது இதயத் துடிப்பின் பரவச வேகம் எல்லை கடந்து செல்ல..அவரோ காடுவெளிச் சித்தரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார்..
மெல்ல எழுந்து பேருந்தில் ஏறி தஞ்சை வந்தேன்..கடையில் எனது ஆசான் இல்லை..கணையாழியைக் கொடுத்துவிட்டு ரயில் நிலையம் வர..நினைவெல்லாம் அந்தப் பாட்டில் இருந்தது..
காடுவெளிச் சித்தரைப் பற்றி நிறைய படித்தேன்..
அதன் தாக்கத்தில்
படிக்கும் வயதில் வெடித்துப் பேசாதே
நொடிக்கும் நடையில் விழுதல் வேண்டாமே
தடுக்கும் கல்லொன்றை நகர்த்திப் பார்
அடுக்காய் வெற்றிகள் அடைவாய் நீ
ராகவபிரியன்..
எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை..வண்டி நாகூர் வந்திருந்தது..மீண்டும் அடுத்த வண்டியில் ஆரூர் வர அன்றிலிருந்து இன்று வரை பயணப் பொழுதுகளில் சில சமயம் தூக்கம் வந்தாலும் கவிதை மட்டும் வருவதேயில்லை...
கடுவெளிச் சித்தரின் இன்னொரு பாடல் உங்களுக்காக..
வெல்லும் பொழுது விடுவேன் வெகுளியை
செல்லும் பொழுது செலுத்துவேன் சிந்தையை
அல்லும் பகலும் உன்னையே தொழுவேன்
கல்லும் பிளந்து கடுவெடுயாமே.’
[கடுவெளிச் சித்தர்]
தொடர்வண்டிச் சித்தன்